திங்கள், மே 26, 2014


கடற்புலிகளின் தலைமையகப் பகுதியிலிருந்து ஹெலிக்கொப்டர் பாகங்கள் மீட்பு
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்புலிகள் தலைமையகம் அமைந்துள்ள முல்லைத்தீவு சாளை கடல் பகுதியில் மீட்கப்பட்ட விமானப்படையின் ஹெலிக்கொப்டர் பாகங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடற்படையின் சுழியோடிகள் நேற்று நடத்திய தேடுதல் ஒன்றின் போது இந்த ஹெலிக்கொப்டர் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையின் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
இந்த விமானப்படையின் ஹெலிக்கொப்டர் போர் நடைபெற்ற காலத்தில் விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டமை தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஹெலிக்கொப்டர் பாகங்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருகிறது. இதன் பின்னரே ஹெலிக்கொப்டர் பாகங்கள் கடலுக்குள் சென்றன என்பது பற்றிய தகவல்களை வெளியிட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடலுக்குள் ஹெலிக்கொப்டர் பாகங்கள் கிடப்பதாக கிடைத்த தகவல் ஒன்றை அடுத்த சுழியோடிகள் மூலம் தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கண்டுபிடிக்கப்பட்ட ஹெலிகொப்டரின் சிதைவுகளில் உப்பு கலந்திருப்பதால் அதனை உடனடியாக அடையாளம் காண முடியாதுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
எனினும், யுத்த காலத்தின் போது காணாமல் போன, இலங்கை விமானப் படைக்குச் சொந்தமாக ஹெலிகொப்டரொன்றின் பாகங்களே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று நம்புவதாக அவர் கூறினார்.
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில், கடற்புலிகளின் முகாம் மீது அடிக்கடி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதற்காக எம்.ஐ 24 மற்றும் எம்.ஐ 17 ரக தாக்குதல் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.
இவ்வாறானதொரு நிலையில், இன்று கடலிலிருந்து மீட்கப்பட்ட ஹெலிகொப்டரைப் பொறுத்தவரையில், அது சுமார் ஐந்து வருடமாவது கடலுக்கடியில் இருந்திருக்கலாம் என நம்பப்படுவதாக இராணுவ பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.