புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மே, 2014


எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகள் அரசாங்கத்தினால் நிராகரிப்பு

எத்தனை நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் வந்தாலும் முகம்கொடுக்க தயார்
கொள்கலன்கள் சோதனையிடப்படுவதில்லை என்பது முற்றிலும் தவறு
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு அரசு சபையில் பதிலளிப்பு


போதைப்பொருள் கடத்தல், போதைப் பொருள் விநியோகம் என்பவற்றில் இலங்கை கேந்திர நிலையமாக விளங்குகிறது என்ற எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் முழுமையாக நிராகரிக்கிறது என சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

நாட்டுக்குள் போதைப்பொருள் கடத்திக் கொண்டு வரப்படுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் சுங்கத் திணைக்களம், பொலிஸ் மற்றும் போதை ஒழிப்பு பிரிவு (நாகொடிக்) என்பவற்றுக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியினர் அரசுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பதிலளித்துப் பேசும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எமது அரசு போதைப் பொருளைக் கட்டுப்படுத்த தவறிவிட்டது என்பதை வலியுறுத்துவதற்கே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது.
போதைப்பொருள் விற்பனை, கடத்தல் என்பவற்றை கட்டுப்படுத்த அல்லது ஒழிக்க, எதிர்க்கட்சிக்கு இருக்கின்ற ஆர்வத்தைவிட அரசுக்குத்தான் கூடுதல் ஆர்வம் இருக்கிறது என்பதை வலியுறுத்துகிறேன்.
நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்க்கட்சியினருக்கு நாம் தாமதத்துடன் வழங்கியதாக கூறினார்கள். உண்மையல்ல. எதிர்க்கட்சித் தலைவர் நாடு திரும்பியதும் வழங்குமாறு கூறினார்கள். இரண்டு நாள் வேண்டும் என்றார்கள்.
நாம் அதுவும் வழங்கியிருக்கிறோம். இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பயப்படப் போவதும் இல்லை. தோற்கப் போவதும் இல்லை.
1981 ஆம் ஆண்டில் தான் இலங்கையில் முதலாவதாக ஹெரோயின் போதைப் பொருள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், இன்று போதைப் பொருள் கடத்தப்படும் கேந்திர நிலையமாக இலங்கையை சுட்டிக்காட்டுவதன் மூலம் தாய் நாட்டிற்கு இழுக்கை ஏற்படுத்து கிறார்கள்.
1984 ஆம் ஆண்டுக்கு பின்னரே போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக சட்டம் கொண்டுவரப்பட்டது.
30 வருட கால யுத்தத்தின் போது தீவிரவாதிகளின் ஊடாக போதைப்பொருள் கடத்தப்பட்டது. ஐ.தே.க.வின் திறந்த பொருளாதார கொள்கையும் போதைப் பொருள் நாட்டிற்குள் வருவதற்கு ஏதுவாக அமைந்தது.
கறுப்புப் பணம் உட்பட போதை ஒழிப்பு உள்ளிட்ட அனைத்தையும் தடுக்க ஏதுவான சட்டங்களை அரசு கொண்டு வந்தது. கொள்கலன்களிலும் விமானம் மூலமும் இலங்கைக்குள் கொண்டுவரப் பட்ட பெருந்தொகையான போதைப் பொருட்களை கைப்பற்ற முடிந்தது போதைப் பொருட்களை ஒழிக்க நடவடிக்கை எடுத்து வரும் அரசுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதை விடுத்து, நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருகிறார்கள்.
இலங்கைக்குள் கொண்டு வரப்படும் கொள்கலன்கள் எதுவும் சோதனைக்கு உட்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்கள். இது முற்றிலும் தவறானது. இலங்கைக்குள் கொண்டுவரப் படும் கொள்கலன்கள் தீவிரமாக பரிசீலிக்கப்படுகின்றன.
போதைப்பொருள் கடத்தல், போதைப்பொருள் பாவனை தொடர்பாக 421 வழக்குகள் உயர் நீதிமன்றத்திலும் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் 585 வழக்குகளும் உள்ளன. போதைப்பொருள் கடத்தலோடு தொடர்புடைய 55 பேருக்கு மரண தண்டனையும் வழங்கப்பட்டுள்ள துடன் 178 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளன. 394 பேர் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.
போதைப்பொருள் ஒழிப்பு விடயத்தில் எந்தவித அழுத்தங்களுக்கும் அடிபணியப் போவதில்லை என்று அரசுக்கு எதிராக எத்தனை நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டு வந்தாலும் அதற்கு முகம் கொடுக்க நாம் தயாராகவே இருக்கிறோம். இந்த அரசு மக்களின் நம்பிக்கையை பெற்ற அரசு. அரசின் மீது மக்கள் முழுமையான நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள்.
அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை போன்ற தேவையில்லாத முயற்சிகளில் ஈடுபடாமல் ஒரு தேர்தலுக்கு எப்படி முகம் கொடுப்பது என்பது பற்றி சிந்தியுங்கள்.
வெத்து வேட்டுகளுக்கு நாம் பயப்படப் போவதில்லை. பிரதமரை போதைப்பொருள் இறக்குமதி விடயத்தில் தொடர்புபடுத்தி பேசப்பட்டது. ஆனால், அதன் உண்மை நிலையை நாட்டு மக்கள் அறிவார்கள். இன்று எமது நாட்டுக்குள் வரும் போதைப் பொருட்களை கண்டுபிடித்து கைப்பற்றுவதற்கு செயற்பட்டுவரும் சுங்கத்திணைக்களத்தினருக்கும் (நாகொடிக்) போதை ஒழிப்பு பிரிவின ருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அமைச்சர் நிமால் தெரிவித்தார்.

ad

ad