புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மே, 2014

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இராணுவம் தடுக்கவில்லையாம் : சத்தியம் செய்கிறார் வணிகசூரிய 
news
யுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் சம்பிரதாய நிகழ்வுகளை வடக்கில் இராணுவத்தினர் தடை செய்யவில்லை. அமைப்பு ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளையே இராணுவத்தினர் தடுத்தனர். 
 
கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் இன்று (22) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தின் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது-
 
நாட்டில் மீண்டும் பயங்கரவாதத்தை உருவாக்க முயற்சிக்கும் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளை இராணுவத்தினர் வடக்கில் முறியடித்து வருகின்றனர். இது இன்றைய கால கட்டத்தில் மிகவும் அவசியமான நடவடிக்கையாகும். மேற்குலக நாடுகளிலும் இவ்வாறான அணுகுமுறைகள் பின்பற்றப்பட்டுவருகின்றன. 
 
சர்வாதிகாரி ஹிட்லர் பாணியில் சலூட் அடிப்பது கடந்த 70 வருடங்களாக ஐரோப்பாவில் தடை செய்யப்பட்டு வருவது இதற்கு நல்லதொரு உதாரணமாகும்.
 
யுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகளைத் தடுக்க கடந்த 18 ஆம் திகதி வடக்கில் சில கோயில்களை இராணுவத்தினர் சுற்றிவளைத்ததாக வெளிவந்த செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை. 
 
அதேபோன்று கிளாலி பிரதேசத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார் என்ற செய்தியும் தவறானது. அந்த வீரர் மாரடைப்பினால் தான் இறந்தார்.
 
மேலும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுக்கு இணங்க சனல் 4 வெளியிட்ட காணொலிகள் தொடர்பான விசாரணைகளை இராணுவத்தின் விசேட குழுவினர் ஆராய்ந்துவருகின்றனர்.
 
இராணுவத்தினருக்கு எதிராக வெளியிடப்படும் புகைப்படங்கள் பற்றி உடனடியாக கருத்துக்கள் கூறமுடியாது. ஏனெனில் இன்றைய புகைப்படத் தொழில்நுட்பம் இல்லாததை உருவாக்கவும் உள்ளதை அழிக்கவும் பயன்படுத்தப்படுகின்றதென்பது அனைவரும் அறிந்ததே என்றும்  மேலும் தெரிவித்தார். 
 

ad

ad