புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மே, 2014


ன்புள்ள கழகத் தொண்டனே!

உன்னைப்போலவே நானும் தி.மு.க உடன்பிறப்புதான். உன் மனசிலே என்ன இருக்குதோ அதுதான் என் மனசிலும் இருக்குது. அதை யெல்லாம் எப்படி சொல்லுறதுன்னு உன்னைப் போலவே நானும் திணறிக்கிட்டுத்தான் இருந்தேன்

. நாடாளுமன்றத் தேர்தலில் நம்ம கட்சிக்கு ஒரு சீட்டு கூட கிடைக்காமல் படுதோல்வி ஏற்பட்டதும், இனியும் எல்லாத்தையும் மனசிலேயே போட்டு புதைச்சி வச்சிருக்கக்கூடாதுன்னுதான் நம்ம எல்லார் சார்பிலேயும் உனக்கு இந்தக் கடிதத்தை எழுதுறேன்.

தோல்விகளை சந்திக்காத இயக்கமல்ல நம்ம தி.மு.கழகம். வெற்றிகளைக் குவிக்காத இயக்கமு மல்ல. இரண்டையும் மாறி மாறி அனுபவித்துள் ளோம். ஆனால், இந்தத் தோல்வி நம்ம தலைமை யையே அதிர வைத்திருக்குதுங்கிறதை நாம பார்க்க முடியுது. கட்சிப்பதவியை ராஜினாமா செய்வதா தலைவர் கலைஞர்கிட்டே தளபதி ஸ்டாலின் சொல்லியிருக்காரு. அவரைத் தலைவர் சமாதானப் படுத்திட்டு, தோல்வி குறித்து ஆராய உயர்நிலை செயல்திட்டக் குழுவைக் கூட்டப்போறதா சொல்லியிருக்காரு.

தேர்தலில் தோற்றுப்போன வேட்பாளர்களும், அந்தந்த தொகுதிக்கும் பொறுப்பாக இருந்த மாவட்டக் கழக நிர்வாகிகளும் சென்னைக்கு வந்து தலைவர் கலைஞரைப் பார்த்துட்டுப் போறாங்க. தளபதி ஸ்டாலினைப் பார்த்துட்டுப் போறாங்க. ஏன் தோற் றுப் போ னோம்னு ஒவ்வொருத்தரும் ஒரு காரணத்தைச் சொல்றாங்க. ஆளுங் கட்சித் தரப்பில் ஓட்டுக்கு 200 ரூபாய்னு சகட்டுமேனிக்கு வாக்காளர் களுக்குப் பணம்  கொடுத்த தாலதான் நமக்கு இப்படியொரு மோசமான தோல்வி ஏற் பட்டுதுன்னு சிலர் சொல்றாங்க. இன்னும் சில நிர்வாகிகளோ, தமிழ் நாட்டில் எந்தத் தேர்தலாக இருந்தாலும் தி.மு.க.வுக்கு அ.தி.மு.க.வும் அ.தி.மு.க.வுக்கு தி.மு.க.வும்தான் சரிக்கு சமமா நிற்கும். இந்த முறை பா.ஜ.க தலைமையில் மூன்றாவது அணி ஒன்று அமைந்து அதில் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. போன்ற கட்சிகள் இருந்ததால் ஜெய லலிதா ஆட்சிக்கு எதிரான ஓட்டுகள் இந்த முறை பிரிந்து போயிட்டதால தி.மு.க ஜெயிக்க வேண்டிய அளவுக்கான ஓட்டுகள் கிடைக்கா மல் போய்விட்டதுன்னும் சொல்லியிருக்காங்க.

தமிழ்நாட்டில் நரேந்திர மோடி அலை பெரியளவில் இல்லைன்னாலும் காங்கிரசுக்கு எதிரான மனநிலை தமிழர்களிடம் அதிக அள வில் இருந்தது. அந்த எதிர்ப்புணர்வு, நம்மை யும் பாதித்துவிட்டது. காங்கிரசோடு 9 வருசம் கூட்டணியில் இருந்ததால் காங்கிரஸ் ஆட்சி யின் ஊழல்களால் நம் மீதும் மக்களோட கோபம் திரும்பிடிச்சின்னும், மோடிக்கு ஓட்டுப் போடுவதும், ஜெயலலிதாவுக்குப் போடுவதும் ஒன்றுதான்னு நினைச்சி இரட்டை இலைக்குப் போட்டுட்டாங்கன்னும் சில நிர்வாகிகள் காரணம் சொல்லியிருக்காங்க. தோற்றுப் போனபிறகு எத்தனை காரணம் வேண்டுமானாலும் சொல்லலாம். களத்தில் நின்று உழைச்ச உன்னையும் என்னையும் போன்ற உடன்பிறப்புகளுக்குத்தான் நேரில் அனுபவித்த காரணங்கள் தெரியும். 



தேர்தல்னு வந்துவிட்டால் தி.மு.க.காரன் மாதிரி ஓடியாடி உழைக்க முடியாதுன்னு எதிர்க்கட்சிக்காரங்களே சொல்லுவாங்க. பக்தவத்சலம் மாதிரியான தலைவர்கள்கூட, சிங்கிள் டீ குடிச்சிட்டு தேர்தல் வேலை பார்க் குறவன்தான் தி.மு.ககாரன்னு பெருமையா சொல்லியிருக்காங்க. இந்த முறையும் தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்னாடியே களத்தில் இறங்கி வேலை செய்ய ரெடியாகத்தான் இருந் தோம். ஆனா, அதற்கு முன்னாடியே கட்சிக் குள்ளே ஒரு பிரச்சினை உருவாயிடிச்சி. அதைப் பற்றி சொன்னால் தலைவர் கோபித்துக் கொள்வார். குடும்பத்தால கட்சியிலே ஏற்படு கிற பிரச்சினைகளை சொன்னால் அவருக்குப் பிடிக்காது. ஆனாலும், இதற்குப்பிறகும் மறைச்சி மறைச்சிப் பேசுறது கட்சிக்கும் தலைவருக்கும் செய்கிற துரோகம்ங்கிறதால வெளிப்படையா சொல்லிடுறேன். 

மு.க.அழகிரி தேவையில்லாமல் டி.விக்கு பேட்டி கொடுத்து புதுப் பிரச்சினையைக் கிளப்புனாரு. அதற்கப்புறம், கலைஞரோட வீட்டுக்கே போய் அவர்கிட்டே கோபமா பேசியதையடுத்து கட்சியிலிருந்து சஸ்பெண்ட் பண்ணினாங்க. அழகிரியும் அவரோட ஆட் களும் வீம்புக்கு என்னென்னவோ பேசிக்கிட்டி ருந்தாங்க. அது நம்ம கட்சிக்காரங்களைப் பெருசா பாதிக்கலைன்னாலும், ஓட்டுக் கேட்கப்போன இடத்திலே எல்லாம் தி.மு.க அனுதாபிகளே இந்தப் பிரச்சினை பற்றி நம்மகிட்டே கேட்டதை நீயும் மறந்திருக்க மாட்டேன்னு நினைக்கிறேன். இந்த நேரத்தி லும் கட்சியிலே அண்ணன்-தம்பி குடும்ப சண் டைதானா, இவங்க சண்டையில தேர்தல் வேலையை எப்படித்தான் பார்க்கப் போறாங் களோ! அந்தம்மா ஆட்சி பலத்தோடு தேர் தலை சந்திக்குது. நீங்க இருக்கிற பலத்தையும் குடும்ப பிரச்சினையிலே கோட்டை விட்டுடுவீங்களோன்னு பயமா இருக்குதுன்னு சொன்னாங்க. எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் உதயசூரியனுக்கு ஓட்டுப் போடுறவங்களுக்கு இருக்கிற அக்கறை, கட்சியிலும் ஆட்சியிலும் கிடைக்கிற வசதிகளை அனுபவிக்கிற தலைவரோட குடும்பத்து ஆட் களுக்கு இல்லையேங்கிற வருத்தம்தான் நமக்கெல்லாம் ஏற்பட்டது. 

அழகிரியை கட்சியை விட்டு நீக்கியதற்குப் பிறகும் அவர் தாறுமாறா பேசிக்கிட்டேதான் இருந்தாரு. ஈறைப் பேனாக்கி, பேனைப் பெரு மாளாக்குவதுபோல அதையெல்லாம் பத்திரிகை காரங்க பெரிய பெரிய செய்தியா வெளியிட்டாங்க. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட யாராவது இப்படிப் பேசினால், கழகத் தலைமையிலிருந்து சாட்டை யடி பதில் கொடுப்பதுதான் வழக்கம். ஆனால், அழகிரிக்கு யாரும் எந்தப் பதிலும் கொடுக்கலை. அதனால நம்ம கட்சிக்காரங்களும் அனுதாபி களும் மறுபடியும் அழகிரியை கலைஞர் அர வணைச்சுக்குவாருன்னும் இந்தக் குடும்ப சண் டைக்குள்ளே நாம நுழையக்கூடாதுன்னும் நினைச்சு ஒதுங்கி இருந்துட்டாங்க. வேலை பார்க்கிறதிலும் வேகம் இல்லை. தேர்தல் முடிந்து ரிசல்ட் வந்தபிறகுதான் அழகிரியோட செயல் பாட்டை விமர்சித்து கலைஞர் பேசியிருக்காரு.

இந்த முறை 40 தொகுதிகளிலும் சுற்றி சுற்றி பிரச்சாரம் செய்தவரு மு.க.ஸ்டாலின்தான். என் தொகுதிக்கு அவர் வந்தபோதும், உன் தொகுதிக்கு வந்தபோதும் நல்ல கூட்டம் கூடியதை மறக்க முடியாது. இந்தக் கூட்டமெல்லாம் தனக்காக கூடி யதா அவர் நினைச்சாரு. ஒவ்வொரு கூட்டத்துக் கும் மாவட்டச் செயலாளர்களும் மற்ற நிர்வாகி களும் ஆட்களைத் திரட்டியதை உன்னையும் என்னையும் போன்ற உடன்பிறப்புகள் நேரிலேயே பார்த்தோமே! போய்வர வாகனம், சாப்பாடு, பேட்டாவா 100 ரூபாய் இதோடு சில இடங்களில் பாட்டிலும் கொடுத்த நிர்வாகிகள் உண்டு. இன்னைக்கு எல்லாக் கட்சியிலும் இதுதான் நிலைமை. கூட்டத்துக்கு வந்த வங்களெல்லாம் நம்ம கட்சி ஆட்கள்தான். பொதுமக் கள் எந்தக் கட்சிக் கூட்டத்துக்கும் போவதில்லை. நம்ம கட்சிக்காரனைத் திரட்டி வச்சிக்கிட்டு, அந்தக் கூட்டத்தை நம்பி நமக்குத்தான் வெற்றின்னு நினைத்தால் அது எப்படி சரியாக இருக்கும்? நம்ம கட்சி சார்பா பிரச்சாரத்துக்கு தலைவரும் தளபதியும் வரும்போது கூட்டம் சேர்ப்பதில் திறமை காட்டிய மாவட்ட நிர்வாகிகளில் எத்தனை பேரு, தேர்தல் களத்தில் உருப்படியா வேலை செய்தாங்கன்னு சொல்ல முடியுமா?

மாவட்டச் செயலாளர்களெல்லாம் தங்களைக் கடவுள்போல நினைச்சிக்கிட்டிருக்காங்க. ஒன்றிய- நகர செயலாளர்களெல்லாம் அந்தக் கடவுளுக்குப் பூசை பண்ணுற பூசாரிகள் மாதிரி நடந்துக்குறாங்க. இந்தப் பூசாரிகளைத் தாண்டித்தான் உன்னை மாதிரி என்னை மாதிரியான உடன்பிறப்புகள் அந்தக் கடவுள் களைப் பார்க்கமுடியாம இந்தப் பூசாரிகள் படுத்துற பாடு இருக்குதே.. கட்சி நிலவரத்தை நேரடியா மாவட்டச் செயலாளர்கள்கிட்டே சொல்ல முடியாத தால, அதனோட பாதிப்பு கிளை வரைக்கும் பரவிடுது. 

முன்பெல்லாம் நம்ம கட்சி நிர்வாகிகள் யாராக இருந்தாலும் கட்சித் தொண்டர்கள்கிட்டேயும் பொதுமக்கள்கிட்டேயும் சகஜமா பழகுவாங்க. மந்திரியா இருந்தாக்கூட சுலபமா பார்க்கலாம். இப்ப எல்லாருமே எதிர்க்கட்சியா இருக்கிறப்பக்கூட மந்திரி மாதிரி அலட்டிக்குறாங்க. அவங்களைப் பார்க்க முடியாமல் பல நந்திகள் குறுக்கே நிற்குது. மாவட்டச் செயலாளர்கள் ஏன் இப்படி டாம்பீகமா நடந்துக்கு றாங்கன்னு கேட்டா, மாநில நிர்வாகத்தில் இருக்கிற வங்களும் அப்படித்தானே நடந்துக்குறாங்கன்னு பதில் வருது. எல்லோரும் அவங்கவங்க கட்சிப் பதவியைக் காப்பாத்திக்கிறதுக்கும் அவங்க வாரிசுகள், சொந்த பந்தங்களுக்கு புதுப் பதவி வாங்கித் தருவதற்கும்தான் வேலை பார்க்குறாங்களே தவிர, தொண்டர்களையும் கண்டுக்கிறதில்லை. கட்சி வளர்ச்சியையும் கண்டுக்கிற தில்லை. இதையெல்லாம் நம்ம தலைமை எப்போது கவனித்து நடவடிக்கைகளை எடுக்கப்போகுது என்று தெரியவில்லை.

2011 சட்டமன்றத் தேர்தலில் ஜெயிக்கணும்ங் கிறதுக்காக, தேர்தலில் நின்ற இதே மாவட்டச் செயலாளர்கள் ஓட்டுக்கு நோட்டு கொடுத்தாங்க. இந்த முறை நாம கொடுக்கலை. ஆனா, அ.தி.மு.க கொடுத்திடிச்சின்னு தெரிஞ்சதும், இந்த மாவட்டச் செயலாளர்களில் பல பேர், "அவங்க கொடுத்துட்டாங் கய்யா. இனிமே நமக்கு ஓட்டு விழாது'ன்னு சொல்லி கேன்வாஸிங்குக்கே வரலை. நம்ம மாதிரியான தொண்டர்கள்தான் ராப்பகலா வேலை பார்த்தோம். நம்ம கட்சிக்கு ஆதரவா விழக்கூடிய ஓட்டுகளைக்கூட பூத்துக்கு கொண்டு வந்து சேர்க்கணும்னு நிர்வாகிகள் நினைக்கலை. தலித் கட்சிகளும் முஸ்லிம் கட்சிகளும் நம்ம கூட்டணியில் இருந்ததால இரண்டு சமுதாயத்து ஓட்டுகளும் நமக்கு மொத்தமா விழும்னு நினைத்தோம். ஆனா அந்த ஓட்டுகள் கூட நமக்கு முழுசா வரலை. அதைக்கொண்டு வந்து சேர்க்கணும்ங்கிற அக்கறையில்லாம, நம்ம கட்சி நிர்வாகிகளே ஒருவித தீண்டாமையைக் கடைப்பிடிச்சா கட்சி எப்படி ஜெயிக்கும்? நிர்வாகிகள் எல்லோரும் சொகுசாயிட்டாங்க. 

வேட்பாளர்களையெல்லாம் மு.க.ஸ்டாலின்தான் தேர்வு செய்தாரு. அதிலே சில பேரை கட்சிக்காரங்களுக்கே யாருன்னு தெரியலை. திருநெல்வேலியிலே போட்டியிட்ட வேட்பாளர், நாமினேஷனுக் காக வந்தபோதுதான், கட்சி நிர்வாகி களுக்கே அவர் அறிமுகமாகியிருக்காரு. ஏன், தலைவரையே முதன்முதலா அப்பதான் பார்த்திருக்காரு. விருதுநகர் போன்ற தொகுதிகளிலும் இதே நிலைமைதான். 

அழகிரியை நீக்குனதால தென்மாவட் டங்களில் தி.மு.க.வுக்கு பெரும் சரிவு ஏற்படும்னு பத்திரிகையிலே போட்டாங்க. ஆனா, அங்கேகூட தாக்குப்பிடிச்சி பெரும் பாலான தொகுதிகளில் இரண்டாவது இடம் வந்துவிட்டோம். ஆனா தி.மு.க. கோட் டையா இருந்த வடமாவட்டங்களில் சில தொகுதிகளில் மூன்றாவது இடத்துக்குப் போயிட்டோம். அதைவிட, கொங்கு மண்டலம்னு சொல்லப்படுகிற மேற்கு மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் நீலகிரியைத் தவிர பெரும்பாலான தொகுதி களில் மூன்றாவது இடத்துக்கு நம்ம கட்சிப் போனதை உண்மையான கட்சிக்காரனால எப்படித் தாங்கிக்க முடியும்? 2006-ல் நம்ம கட்சி ஜெயிச்சி ஆட்சியைப் பிடிச்சப்பவே, கொங்கு மண்டலத்தில் பெரிய வெற்றி கிடைக்கலை. அதனாலதான் மெஜாரிட்டி இல்லாமல் மைனாரிட்டி அரசுன்னு பேர் எடுத்தோம். அதற்கப்புறம் 2009-லும் தோல்விதான். 2011-லும் தோல்வி. இப்பவும் படுதோல்வி. ஆனா, மாவட்டச் செயலாளர் களும் மற்ற நிர்வாகிகளும் கவலையே படாமல் இருக்காங்க. இதுவே, அ.தி. மு.கவாக இருந்தால் பதவியிலே ஒட்டிக் கிட்டு இருக்கமுடியுமா? ஒரு முறை தோற்றுப் போனாலே ஒட்டுமொத்தமா தூக்கிடும் அந்தம்மா. அதுமாதிரி நம்ம கட்சித் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கிறதில்லை. இவங்க மேலே கலைஞர் பாவபுண்ணியம் பார்க்குறதால மாவட்ட நிர்வாகிகளுக்கெல்லாம் குளிர் விட்டுப்போச்சு.

இந்த 91 வயசிலும் தன்னால் முடிந்தவரை தேர்தல் பிரச்சாரம் செய்தார் கலைஞர். அதை முழுசா கொண்டு போய் மக்கள்கிட்டே சேர்க்கிற வேலையை சரியா செய்யலை. அ.தி.மு.க தரப்பில் ஒரு வருசமா பிரச்சாரம்  செய்தாங்க. 40 தொகுதியில் ஜெயித்து இந்தியாவின் பிரதமராக ஜெயலலிதா பதவியேற்கப் போறார்னு அவங்க செய்த பிரச்சாரம் எல்லாத் தரப்பு மக்கள்கிட்டேயும் போய்ச் சேர்ந்திடிச்சி. 543 தொகுதி கள் உள்ள இந்தியாவில் 40 தொகுதியில் ஜெயிச்சி பிரதமராயிட முடியுமான்னு யாரும் கேள்வி கேட் கலை. தி.மு.ககாரங்களும், உதயசூரியனுக்கு ஓட்டுப் போடுற கட்சி அபிமானிகளும்கூட ஜெயலலிதா பிரதமராயிடுவாரோன்னு நினைக்கிற அளவுக்கு அ.தி.மு.க.வின் பிரச்சாரம் வலிமையா இருந்தது. ஜெயா டி.வியை முழுமையா கட்சிப் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தினாங்க. ஆனா, நம்மகிட்டே இருக்கிற கலைஞர் டி.வி.காரங்க கேமராவை வச்சி படம் எடுக் கிறாங்களா, பாம்பை வச்சி படம் எடுக்கிறாங்களான்னு தெரியாத அளவுக்கு பிரச்சாரத்தில் ரொம்ப பின்தங்கியிருந்தாங்க. 

பலதரப்பட்ட மக்களும் பார்ப்பது சன் டி.வி. தான். அந்த நிறுவனமோ வருமானத்துக்காக மோடி விளம்பரத்தை ஒளிபரப்பியது. அதைப் பார்த்ததும், நம்ம கூட்டணியில் உள்ள முஸ்லிம் பிரமுகர்கள், "சன் டி.வி.யிலேயே தாமரை விளம்பரத்தை ஒளிபரப்பினால், உங்களுக்கு எப்படி ஓட்டுப் போடுவாங்க'ன்னு அப்பவே கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. கலைஞருக் கும் சன் டி.விக்கும் எந்தத் தொடர்பு மில்லைன்னு சொன்னாலும் அது எடுபடலை. இப்படிப்பட்ட நெருக்கடிகளையெல்லாம் ஒவ்வொரு வீடாகச் சென்று ஓட்டுக் கேட்ட நம்மை மாதிரி தொண்டர்கள் தான் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மாவட்ட- ஒன்றிய-நகர நிர்வாகிகள் எல்லாம் ஏ.சி.காரிலேயே காலத்தை ஓட்டுறாங்க. 

அதனால்தான் தனித்துப் போட்டி யிட்ட அ.தி.மு.க.வுக்கு 44% ஓட்டு கிடைத் திருக்குது. நமக்கு 23.6% ஓட்டுதான் கிடைத்திருக்குது. வித்தியாசம் 20%க்கும் மேலே.  இன்னும் இரண்டு வருடம்தான் சட்டமன்றத் தேர்தலுக்கு இருக்குது. அதற் குள்  இந்த நிலைமையை மாற்றணும். என்ன தான் புதுப் புதுக் கூட்டணிகள் அமைந் தாலும் தமிழக மக்கள் தி.மு.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும்தான் முதலிடத்தையும் இரண்டாவது இடத்தையும் கொடுப்பாங் கங்கிறதை இந்தத் தேர்தலும் பெரும் பாலான தொகுதிகள் நிரூபிச்சிருக்குது. கிட்டதட்ட 1 கோடி பேர் இந்த முறையும் உதயசூரியனுக்குத்தான் ஓட்டுப் போட்டிருக் காங்க. அதனால 2016 தேர்தல் நமக்கு சாத கமா அமையணும்னா, இந்தத் தேர்தலி லிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். 

கட்சியோட வளர்ச்சிக்காக உறுதியான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே சட்டமன்றத் தேர்தல் நமக்கு சாதகமாக இருக்கும். இதே நிலை நீடித்தால்…? சொல்வ தற்கு எதுவுமில்லை. மறுபடியும் உன்னைப் போன்ற உடன்பிறப்புகளுக்கு என்னைப் போன்ற உடன்பிறப்புகள் கடிதம் எழுதிக் கதற வேண்டியதுதான். 

இப்படிக்கு,

என்றும் உழைக்கும் 
தி.மு.க. தொண்டன் 

ad

ad