புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2014


முள்ளிவாய்க்கால் நினைவின் ஐந்தாவது ஆண்டு நினைவு தினமான இன்றைய நாளில் வணக்க நிகழ்வுகளைத் தடுக்க இராணுவத்தினர் பல்வெறு தடைகளை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி அலுவலகங்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண அலுவலகம்
என்பவற்றுக்குள் எவரும் செல்ல முடியாதவாறு இராணுவத்தினர் வீதித் தடைகளை ஏற்படுத்தி அங்கு இராணுவத்தினர் காவலில் ஈடுபட்டுள்ளனர். 
அலுவலகங்களில் நடக்கவிருந்த அஞ்சலி நிகழ்வுகளை தடுக்கும் நோக்கிலேயே இந்த இராணுவத் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அதன் பிரதான கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின், யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் கடந்த காலங்களில் அஞ்சலி நிகழ்வுகளை நடத்தியிருந்தனர்.
இம்முறையும் கட்சி அலுவலகத்தில் அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்படும் என்ற சந்தேகத்தில் மார்ட்டின் வீதி இராணுவத்தினரால் வழிமறிப்புச் செய்யப்பட்டு அப்பகுதியும் கட்சியின் அலுவலகமும் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாகத் தவவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோன்று கிளிநொச்சியில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தையும் சுற்றிவளைத்துள்ள இராணுவத்தினர் அங்கு எவரையும் செல்ல அனுமதிக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
செ.கஜேந்திரன், பொ.கஜேந்திரகுமார் வீடு இராணுவத்தினர் முற்றுகை.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளார் செல்வராசா கஜேந்திரனின் வீட்டிற்கு அருகில் இராணுவம் நிலைகொண்டுள்ளது.செல்வராசா கஜேந்திரனின் அருகாமையிலுள்ள சிவசக்தி சனசமூக நிலையத்தில் நேற்று மாலை 5.00 மணி தொடக்கம் இராணுவம் நிலைகொண்டுள்ளது.
குறித்த சனசமூக நிலையம் கந்தர்மடத்திலுள்ள சிவன் -அம்மன் கோவிலின் தெற்குப்புற வீதியில் அமைந்துள்ளது.
நேற்று பிற்பகல் 4.00மணியளவில் அப்பகுதிக்கு வந்த இராணுவத்தினா் சனசமூக நிலைய நிர்வாக உறுப்பினரிடம் சனசமூக நிலையத்தின் திறப்பினை பெற்றுக் கொண்ட பின்னர் தாம் இரண்டுநாட்கள் அங்கு தங்கப்போவதாக கூறியுள்ளனார்.
குறித்த நிர்வாக உறுப்பினரும் அச்சம் காரணமாக மறுபேச்சுப் பேசமுடியாத நிலையில் சம்மதித்துள்ளார்.
இன்றைய தினம் மே 18ஆம் திகதி இன அழிப்பு நாள் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பிரகடனம் செய்துள்ளது.
அந்நாளில் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நினைவேந்தல் நிகழ்வை நடாத்த தமிழ் தரப்புக்கள் தயாராகவுள்ள நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளார் செல்வராசா கஜேந்திரன் வீட்டிலிருந்து 50 மீற்றா் தூரத்தில் அமைந்துள்ள குறித்த சனசமூக நிலையத்தில் இராணுவம் குடிகொண்டுள்ளமை அப்பகுதியில் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டுக்குச் செல்லும் வீதி போக்குவரத்து இராணுவத்தினால் தடை செய்யப்பட்டுள்ளது.
யாழ் - கண்டி பிரதான வீதி, 3ஆம் குறுக்குத் தெருவில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகம் இவ்வாறு இராணுவத்தினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ். மாட்டீன் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சி அலுவலகமும் இராணுவத்தினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
தமிழரசுக் கட்சி அலுவலக சூழலில் நூறுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கவச வாகனங்களில் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் யாழ். குடாநாடு முழுவதும் இராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ad

ad