புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மே, 2014



கிளிநொச்சி யாழ்ப்பாணம் நீர் விநியோக திட்டம்  .மாகாண சபை க்கு எதிராக  சாடல் .இரா/ சிவசந்திரன் 
கிளிநொச்சி- யாழ்ப்பாணம் நீர் விநியோகத் திட்டம் தொடர்பாக 29-04-2014 அன்று வடமாகாண சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி உள்ளதாக அறிந்துள்ளோம்.
இந்தத் தீர்மானம் தீர்க்கதரிசனமற்ற முறையில் அவசரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனிப்பட்டோரினது அகங்கார வெற்றிக்காக எடுக்கப்பட்ட தீர்மானமாகவே இதைக் கருத வேண்டி உள்ளது.
மேலும் இத்திட்டம் தொடர்பாகப் பொது மக்கள் மத்தியில் கருத்துருவாக்கம் ஒன்று ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கத்தினையும் இது கொண்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இது உண்மையில் எதிர்மாறான விளைவினையே ஏற்படுத்தும் என்கின்ற சாதாரண உண்மை கூட புலப்படத் தேவையான கால அவகாசம் சபை அங்கத்தவர்களுக்கு வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை.
கிளிநொச்சி – யாழ் நீர் விநியோகத் திட்டமானது, யாழ். மாவட்ட மக்களுடைய குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பது மட்டுமல்லாது இப் பிரதேசத்தில் நாகரீகம் ஒன்றின் இருப்பின் பேண்தகு திறனை இல்லாது சிதைக்கும் பாரிய பக்க விளைவுகளையும் தடுகின்ற ஒரு திட்டமாகவே கருத வேண்டும்.
2002ம் ஆண்டு சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் முன்னெடுக்கப்பட்ட இத் திட்டம் 2003ம் ஆண்டிலிருந்து முறையான நடைமுறைகளைப் பின்பற்றி தயாரிக்கப்பட்டதோடு, மாவட்ட நிர்வாகம் மற்றும் யாழ். பல்கலைக்கழக சமூகம் குறிப்பாக பேராசிரியர் துரைராஜா ஆகியோரது பங்களிப்புடனேயே உருவாக்கம் பெற்றது.
2005ம் ஆண்டளவில் இத் திட்டம் பற்றிய சாத்தியப்பாடுகள் பற்றிய உள்ளக ஆய்வுகளின் வழமையான முன் நிபந்தனை விடயத்தினை விட போது பின்வரும் விடயங்களும் கவனத்திற்கு எடுக்கப்பட்டிருந்தன.
1.சுண்டிக்குளம் நன்னீர்த்திட்டம்.
2.கிளிநொச்சி மாவட்டத்தில் உருவாக்கக்கூடிய வேறு அணைத்திட்டங்கள்.
3.எதிர் காலத்தில் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றம் மற்றும் எல்நினோ தாக்கங்களின் விளைவுகள்.
4.கடல் நீர்மட்டம் உயர்வதனால் ஏற்படக்கூடிய தாக்கங்கள்.
போன்ற விடயங்கள் கூட முக்கியமான ஏனைய வழமையான விடயங்களுக்கு மேலதிகமாகக் கவனத்திற்கு எடுக்கப்பட்டன.
உலகளாவிய அனுபவத்தின் படி நிலக்கீழ் நீர் வளங்கள் கட்டுப்பாடற்ற உறுஞ்சுதலினால் பாதிப்புக்குள்ளாகி உள்ளமை நிறுவப்பட்டுள்ளது. நிலக்கீழ் நீர் பேண்தகு முறையில் உபயோகிக்கப்பட வேண்டுமாயின், அதற்கு நில மேற்பரப்பு நீரின் தொடர்ச்சியான மீளளிப்பு இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். அதாவது நில மேற்பரப்பு நீர் இடையறாது நிலத்தடி நீரை நிரப்பிக் கொண்டிருந்தால் மட்டுமே நிலத்தடி நீரின் கட்டுப்பாடற்ற உபயோகம் பேண்தகு முறையில் நடைபெற முடியும்.
இதன் கருத்து யாதெனில் நிலத்தடி நீர் வள அபிவிருத்தி என்பது உண்மையில் நில மேற்பரப்பு நீரின் அபிவிருத்தியே. யாழ்ப்பாணத்தில் கிடைக்கின்ற நிலத்தடி நீர் ஆயிரமாயிரம் வருடங்களாக நடைபெற்று வந்த சேமிப்பின் பலனாகவே ஏற்பட்டதாகும்.
இருபதாம் நூற்றாண்டில் நடைபெற்ற கட்டுப்பாடற்ற உபயோகம் இந் நீர் பாதிப்படைவதற்குப் பிரதானமான காரணமாயிற்று. பழைய நிலைமைக்கு மீளத் திருப்பிக் கொண்டு வர முடியாவிட்டாலும் பேண்தகு நிலை ஒன்றினை நிர்ணயித்து அதனைப் பேணுவதாயின் இருபக்க நடவடிக்கைகள் அவசியமாகும்.
1.ஓன்று நீரை பாதுகாப்பதும் உறிஞ்சி வெளியே எடுத்தலைக் கட்டுப்பாட்டினில் வைத்திருப்பதும்.
2.மற்றையது தரை மேற்பரப்பு நீரைக் கொண்டு வந்து சேர்ப்பது இதற்கான செயற்பாட்டு மட்டங்களை நிர்ணயிக்கும் போது நீர்ச்சமன்பாடு ஒன்றினைக் கணித்துக் கொள்ளல் வேண்டும்
அதாவது ஒரு வருடத்தில் எமக்குக் கிடைக்கின்ற மேற்பரப்பு நீரின் அளவு, நாம் நிலத்தின் கீழிருந்து பெறுகின்ற நீரின் அளவு, நிலத்தடியில் சேமிக்கப்படுகின்ற நீரின் அளவு, நீரினுடைய தூய்மைத்தன்மையில் ஏற்படுகின்ற தாக்கத்தின் அளவு, எய்தப்பட வேண்டிய நீரின் தரம் போன்ற விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டு பேண்தகு மூலவள உபயோகத்திற்கான செயற்பாட்டு மட்டங்களை நிர்ணயித்து அவற்றினை எய்திக்கொள்வதற்கான திட்டங்களை வகுத்துக் கொள்ளல் வேண்டும்.
50 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ் மாவட்டத்தில் கிடைக்கக் கூடியதாக இருந்த நிலத்தடி நன்னீரின் அளவை தரத்தையும் கொண்ட பழைய சமநிலையை மீண்டும் மழைநீரைக் கொண்டுவர வேண்டுமாயின், எத்தனை வருடங்கள் எடுக்குமோ எமக்குத் தெரியாது.
யாழ்பாணத்தில் பெய்கின்ற மழை நீர் முழுவதையும் தேக்கி நிலத்திற்குக் கீழே செலுத்துவதாயின் ஆயிரக்கணக்கான சிறு குண்டுகளைத் தோண்டி அதன் மூலம் சாதிக்கலாம் என்ற கருத்து ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு முன் வைக்கப்பட்டதாக  அறியக்கிடக்கின்றது.
இவ் அணுகுமுறையின் படி காலநிலை மாற்றம், தாழ்நிலக் குடியிருப்புக்களின் தோற்றமும் வளர்ச்சியும், மற்றும் விவசாய தொழில்நுட்பங்களின் மாற்றங்கள் போன்றவை ஏற்படுத்தியுள்ள தாக்கங்களையும் ஈடு செய்தே யாழ்ப்பாணக் குடிநீர்ப் பிரச்சினை தீர்த்து வைக்கப்படமுடியும்.
மழை நீரை உபயோகிப்பதின் மூலம் தீர்வு காணுவதாயின் அதற்கும் எத்தனை வருடங்கள் எடுக்குமோ தெரியாது. நிலத்தடி நீரை உபயோகித்து நீர் விநியோகத்திட்டங்கள் நீண்ட காலத்திற்கு இயங்குவது வெகு அரிது.
இவை மட்டுமன்றி யாழ் குடாநாட்டின் குடிசனப் பரம்பலை மேலும் குறைக்க வழிவகுக்கும் பொருளாதார, வாழ்வாதார உத்திமுறைகளைத் தவிர்த்தல், வட மாகாணத்தினுடைய நிலப்பயன்பாட்டின் கட்டுப்பாட்டினை வட மாகாண நிர்வாகத்தின் கைகளிலேயே தக்க வைத்தல், வட மாகாண குடித்தொகை விகிதாசாரத்தை நலிவடையாமல் பாதுகாத்தல் போன்ற விடயங்களும் இத்திட்ட முன்மொழிவினை ஆராய்ந்த நிபுணர்களினால் அப்போது பரிசீலிக்கப்பட்டிருந்தன. இவற்றிற்கான பதிவுகள் அரசாங்க நிர்வாக இயந்திரத்தினுள் பதியப்படாமல் இருந்ததற்குக் காரணங்கள் இருந்திருக்கலாம்.
எது எவ்வாறாயினும், யாழ்ப்பாணத்தின் குடிநீர்ப்பிரச்சினைக்கும் தமிழர் நாகரிகத்தின் தொடர்ச்சியான இருப்பிற்கும் இப் பிரதேச நில ஆளுகைக்கும்  வட மாகாணத்தினுள் கிடைக்கின்ற நில மேற்பரப்பு நீரினை முறையான திட்டங்களை ஈடுபடுத்தி முகாமை செய்வதன் மூலம் செய்தலே சிறந்தது என்ற முடிவிற்கு வந்திருந்தார்கள்.
எவ்வாறாயினும் யாழ்ப்பாண நிலக்கீழ் நீரினை குறுகிய காலத்தினுள் மீள் அபிவிருத்தி செய்வதாயின் அதனை நில மேற்பரப்பு நீரினைக் கொண்டு தான் ஈடுசெய்ய முடியும் என்ற வெளிப்படையான உண்மை அநாகரிகமாக மறைக்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான சிறு குண்டுகளோ அல்லது சுண்டிக்குளம் வாவியோ மாற்றுத் தீர்வாகும் என்பதற்கு இன்று வரை தொழில்நுட்ப ரீதியாகவோ விஞ்ஞான ரீதியாகவோ ஏற்றுக்கொள்வதற்கான ஆய்வுகள் இல்லை. இவை வெறும் முன்மொழிவுகளே. இன்றைய யாழ்ப்பாணத்தின் குடிநீர்ப்பிரச்சினை மிகத்தீவிரமானது இது பற்றிப் பல விபரங்கள் உள்ளன.
தீவகத்தில் இருந்தும் மற்றும் கரையோரப் பிரதேசங்களிலிருந்தும் மக்கள் குடிப்பெயர்விற்கு நன்னீர் இன்மை முக்கியமான ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.
தீர்க்கதரிசனமற்ற குறுகிய அரசியல் லாப நோக்கம் கொண்ட அவசரப் புத்திக்காரர்களின் நடவடிக்கைகளினால் ஒரு சுத்தமான உள்வீட்டுப் பிரச்சினை மத்திய அரசுக்குரிய அரசியல் வாய்ப்பாக மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது.
மாகாண சபையின் தீர்மானத்தினைப் பார்த்து இவ்வளவு வேகமாகத் தீர்மானம் நிறைவேற்ற முடிந்தவர்;களால் இச்சபை கலையும் முன்னர் ஏதாவது ஒரு திட்டத்தையாவது உருவாக்கி நடைமுறைப்படுத்திக் காட்ட முடியுமா? என்று கேட்கத் தோன்றுகின்றது.
ஒரு பிரதேசத்தின் நிலத்தடி நீரின் இருப்பின் அளவு நிலத்தின் கீழுள்ள நீர் தேக்கும் இயலளவிற்குள் பெறப்படுகின்ற புதிய நீரின் அளவுடன் ஏற்கனவே இருந்த நீரினையும் சேர்த்து குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் அதிலிருந்து எடுத்து உபயோகிக்கப்பட்ட நீரின் அளவினைக் கழித்த பின் மீதமாக இருக்கும் நீரின் அளவினையே குறிக்கும் எனக் குறுகிய வரைவிலக்கணம் ஒன்றைக் கொடுக்கலாம்.
இதனைத் துல்லியமாகக்  கணிப்பதற்கு  வேறு சில மாறிகளின் நடத்தையைக் கவனத்திற்கு எடுத்தல் வேண்டும். மேலும் இந்த நீரின் இருப்பின் அளவு ஒரு குறிப்பிட்ட தரத்தினைப் பேணும் மட்டத்திற்கே கணிப்பிட முடியும். ஏனெனில் எடுக்கப்பட்ட நீரின் அளவு, புதிதாகக் கிடைத்த நீரின் அளவு ஆகியவற்றினைப் பொறுத்து நீரின் தரம் மாறிக் கொண்டு இருக்கும்.
நிலத்தடி நீரைப் புதுப்பிப்பதற்கு கிடைக்கும் நீரின் அளவு பெருமளவிற்கு நில மேற்பரப்பில் பெறப்படுகின்ற மழை அல்லது கிடைக்கின்ற நீரின் அளவிலேயே தங்கியுள்ளது. நீரினுடைய தரம் பிரதானமாக எவ்வளவு நீர் வெளியே உறிஞ்சி எடுக்கப்படுகின்றது என்பதைப் பொறுத்தே பெரிதும் அமையும். ஏனைய காரணிகளாக உர உபயோகம், கிருமி நாசினி, கழிவு நீர், பாதுகாப்பற்ற மலசலகூடங்கள், கடல் நீர் உட்புகுதல், தடுப்புகள் என்பவற்றையும் கூறலாம்.
 பொதுவாக, நிலத்தினுடைய மேற்பரப்பில் கிடைக்கும் நன்நீரை நிலத்திற்குள் செலுத்துவதற்கான நடைமுறைகள் போதாமையாக இருக்கின்ற அதே நேரத்தில் நிலத்தடி நீரை வெளியே பெறுகின்ற வீதம் அதிகரித்துச் செல்லுமாயின், நீரினுடைய தரமும் அளவும் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து கொண்டே செல்லும். யாழ்ப்பாணத்து நிலத்தடி நீரினைப் பொறுத்த இவ் இரண்டு பண்புகளும் எதிர்மறையான போக்கில் செல்கின்றன என்பதைப் பற்றி விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கத் தேவையற்ற பல ஆதாரங்கள் வெளிப்படையாக உள்ளன.
அதிகார பூர்வ அறிக்கைகளின் படி வட மாகாணத்தினுடைய 2012 ம் ஆண்டினது மொத்த மாகாண உற்பத்தி வளர்ச்சி வீதம் 25.9 ற்கு மேலே உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நீருக்குரிய கேள்வியை அதிகரிக்கும் பொருளாதார முயற்சிகளின் அளவு 60 வீதத்திற்கு மேலாகும்.
இது புதிய தொழில் துறை, சேவை வசதிகள் மற்றும் விவசாய அபிவிருத்தி ஆகியவற்றையே பிரதிபலிக்கின்றது. இந்த வளர்ச்சிப் போக்கு ஏறக்குறைய அதே மாதிரியான தாக்கத்தினை நீருக்கான கேள்வி மீதும் சமகாலத்திலேயே உண்டாக்கும்.
யாழ் மாவட்டத்தில் நீருக்கான கேள்வியின் அதிகரிப்பு அதற்கான வளங்களை விடத் தீவிரமாக உள்ளது என்பதில் எந்தவித ஐயப்பாட்டிற்கும் இடமில்லை. இந்த வளர்ச்சி வீதம் இனிவரும் உடனடியான எதிர்காலத்தில் பல்வேறு விதமான புதிய பிரச்சினைகளை நிச்சயம் ஏற்படுத்தும். எனவே வடமாகாணத்திற்குள்ளேயே கிடைக்கக் கூடியதாக உள்ள நில மேற்பரப்பு நீரினை உச்ச அளவில் உபயோகித்துக் கொள்ளவும் அதே நேரத்தில்,
நிலக்கீழ் நீர் முகாமை மற்றும் நீரின் தரத்தினை மேலும் சுத்தமடையச் செய்தல், தடையறா சமூக அபிவிருத்திக்கு வழிவிடுதல், கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாய அபிவிருத்தியின் பேண்தகு திறனைக் காப்பாற்றி வைத்தல் போன்ற நோக்கங்களைக் கொண்ட ஒரு குடிநீர்த்திட்டத்தினை நடைமுறைப்படுத்தல் அத்தியாவசியமாக்கியது.
புதிய மாற்று வழிகளைப் புதிதாகக் கண்டுபிடித்து அதற்குரிய திட்டங்களைக் கொண்டு வந்து சேர்க்கின்ற காலத்திற்கு முன்னராகவே நீர்வள முகாமை தொடர்பாகப் பாரிய பிரச்சினைகள் தலைதூக்குவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே கிளிநொச்சி – யாழ்ப்பாண நீர்விநியோகத்திட்டத்தினை மேலும் தாமதிக்காது அமுல் நடாத்த வழி செய்யும் வகையில் வடமாகாண சபை புத்தி பூர்வமான தீர்மானம் ஒன்றினை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
வடமாகாண சபை தேர்தலின் பின்னர் தன் வழியில்  தானே வந்த வாய்ப்புக்கள் பலவற்றினை ஏற்கனவே கைவிட்டுவிட்டது என்ற குற்றச்சாட்டுக்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.
வடமாகாணத்தில் தமிழ் மக்களின் இருப்பினைப் பாதிக்கும் இத்தகைய விடயங்களில் தீர்மானம் எடுக்கும் போது தனிப்பட்ட குறுகிய பார்வைகளுக்கு அப்பால் நின்று தீர்க்கதரிசனமான முறையில் நடந்து கொள்வதே தேவையானதாகும்.
இரா.சிவசந்திரன்
avsrsiva@gmail.com

ad

ad