புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2014


தமிழகச் செய்திகள்
 
நீதிதேவன் தயக்கம்!-தினமணி ஆசிரியர் தலையங்கம்
Tuesday, 29.04.2014, 08:52am (GMT)

சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்த நீதிமன்றம், அந்தத் தீர்ப்பை வழங்கியபோதே, இவர்களது விடுதலையை மத்திய அரசின் ஆலோசனை மற்றும் ஒப்புதலுடன் மட்டுமே முடிவு எடுக்கலாம் என்று கூறியிருந்தால், தமிழக முதல்வர் ஜெயலலிதா அதையொட்டி மத்திய அரசுக்கு ஆலோசனை மற்றும் சம்மதம் கோரிக் கடிதம் எழுதியிருப்பார். தன்னிச்சையாக விடுதலையை அறிவித்திருக்க மாட்டார்.

ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்வது குறித்து அரசியல் சாசன நீதிஇருக்கை முடிவு செய்யும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்திருப்பதால் தமிழர்கள் வருத்தம் அடைந்திருக்கிறார்கள்.

இந்த வழக்கின் தீர்ப்பு மேலும் மூன்று மாதங்கள் அல்லது அதற்கும்மேலாக நீட்டித்துச் செல்கின்றதே என்ற அவர்களது வருத்தம் அனைவராலும் புரிந்துகொள்ளக் கூடிய ஒன்று.

அரசியல் சாசன நீதி இருக்கை மட்டுமே இதனை முடிவு செய்ய இயலும் என்கிற பட்சத்தில் இத்தனை நாள்களாக உச்சநீதிமன்றம் இந்த வழக்கை தன்வசம் வைத்திருந்திருக்கத் தேவையில்லை.

அப்போதே இதனை அரசியல் சாசன நீதிஇருக்கையின் விசாரணைக்கு மாற்றியிருக்கலாம். இந்த வழக்கு இன்னும் விரைவுபட்டிருக்கும்.

உச்சநீதிமன்றம் அரசியல் சாசன நீதி இருக்கையிடம் விளக்கம் கோரியிருக்கும் முதல் கேள்வி: 

ஒரு வழக்கில் ஏற்கெனவே தண்டனைக் குறைப்புப் பெற்றவர், மறுபடியும் தண்டனைக் குறைப்புப் பெற முடியுமா?என்பதுதான். இதே கேள்வியை சில ஆண்டுகளுக்கு முன்பு சுப்ரமணியன் சுவாமியும் எழுப்பினார்.

தூக்கு தண்டனையிலிருந்து ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட நளினிக்கு இரண்டாம் முறையாக சலுகை, அல்லது தண்டனை குறைப்புக்கு சட்டத்தில் இடமில்லை என்று உச்சநீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

அப்போதே இது தொடர்பாக உச்சநீதிமன்றம் அரசியல் சாசன நீதிஇருக்கை மூலம் தெளிவுபடுத்தியிருந்தால், இன்று இந்தப் பிரச்னையே எழுந்திருக்காது.

சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்த நீதிமன்றம், அந்தத் தீர்ப்பை வழங்கியபோதே, இவர்களது விடுதலையை மத்திய அரசின் ஆலோசனை மற்றும் ஒப்புதலுடன் மட்டுமே முடிவு எடுக்கலாம் என்று கூறியிருந்தால், தமிழக முதல்வர் ஜெயலலிதா அதையொட்டி மத்திய அரசுக்கு ஆலோசனை மற்றும் சம்மதம் கோரிக் கடிதம் எழுதியிருப்பார். தன்னிச்சையாக விடுதலையை அறிவித்திருக்க மாட்டார்.

இப்போது, அரசியல் சாசன பிரிவு 432இல் கூறப்பட்டிருக்கும் ஆலோசனை என்பதன் வரையறையை நிர்ணயிக்கத்தான் நீதிஇருக்கையிடம் உச்சநீதிமன்றம் கேட்டிருக்கிறது. ஆனால், இந்த வழக்கில் மிகவும் சிக்கலான விவகாரம் அதுவல்ல.

மத்திய அரசு முன்வைத்துள்ள வாதத்தின்படி, அரசியல் சாசனப் பிரிவு 435இல் இடம்பெற்றுள்ள ஆலோசனைதான் பிரச்னையே! 

அந்தப் பிரிவு என்ன சொல்கிறது?

பிரிவு 432 மற்றும் 433 மூலம் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் மூலம் தண்டனை குறைப்பு, தண்டனை ரத்து ஆகியவற்றை தீர்மானிக்கும்போது, தில்லி சிறப்பு காவல்துறை புலனாய்வு செய்த வழக்குகள் அல்லது மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்திய வழக்குகளாக இருக்கும்பட்சத்தில் மாநில அரசு தனியாக முடிவெடுக்காமல்,மத்திய அரசை ஆலோசித்தே முடிவு எடுக்க வேண்டும் என்பதுதான் பிரிவு 435 கூறுகிறது.

இதை முன்வைத்துதான் மத்திய அரசு இந்த வழக்கில் தடையுத்தரவு பெற்றுள்ளது.
மத்திய அரசின் புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்திய வழக்கில் தண்டனை பெற்றவருக்கு தண்டனை குறைப்பு அல்லது தண்டனை ரத்து செய்வது என்பதை மாநில அரசு, மத்திய அரசைக் கலந்து ஆலோசிக்காமல் தீர்மானிக்க முடியாது என்று வாதம் செய்கிறது மத்திய அரசு. இது மட்டுமல்ல, இவர்களை இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தின் "உறுப்பினர்கள்' என்றும் கூறுகிறது.

ராஜீவ் கொலை வழக்கை மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தியிருப்பதால், மத்திய அரசை மாநில அரசு கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்று தனது தீர்ப்பில் உச்சநீதிமன்றம் நேரடியாகவே சொல்லியிருக்கலாம்.

அல்லது, கருணை மனுவுக்கு காலதாமதம் ஏற்பட்ட நிலையில் தூக்கு தண்டனையை நீதிமன்றமே ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றியதைப் போல, ராஜீவ் படுகொலை வழக்கு மத்திய அரசின் புலனாய்வு நிறுவனம் விசாரித்த வழக்கு என்றபோதிலும், இந்த வழக்கு 20 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதாலும், இவர்கள் இதுநாள்வரை மாநில அரசின் சிறையில் நன்னடத்தையுடன் இருந்திருப்பதாலும், பிரிவு 345இன் விதியை இந்த ஒரு வழக்கில் பொருத்திப் பார்க்கத் தேவையில்லை என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கலாம்.

சட்டம், மாநில அரசு மத்திய அரசைக் கலந்தாலோசிக்கச் சொல்கிறதே தவிர, அனுமதி பெறக் கூறவில்லை.

கருணை மனுவுக்கே பல ஆண்டுகாலத் தாமதம் ஏற்படுத்திய மத்திய அரசு தனது ஆலோசனையையும் கிடப்பில் போடக்கூடும் என்பதால்தான் மத்திய அரசின் ஆலோசனைக்கு மூன்று நாள் காலக்கெடு விதித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது. உச்சநீதிமன்றத் தீர்ப்பு தெளிவாக இருந்திருந்தால், இந்தக் குழப்பங்களுக்கு இடமே இருந்திருக்காது.

நாடே எதிர்நோக்கும் ஒரு தீர்ப்பை, மேலும் ஒரு நீதி இருக்கைக்கு மாற்றியிருப்பதற்கு, நீதிதேவனின் தயக்கம்தான் காரணம்.

ad

ad