புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூன், 2014


இந்தியாவிலேயே
அதிக திரைப்படங்களை இயக்கிய
 ராமநாராயணன் காலமானார்
 


பிரபல திரைப்பட இயக்குநர் - தயாரிப்பாளர் ராமநாராயணன் சிங்கப்பூரில் மாரடைப்பால் காலமானார். 

 இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும்  இருந்தவர் ராமநாராயணன். இந்தியாவிலேயே அதிக படங்களை இயக்கியவர் ராமநாராயணன்.  தமிழ் உள்ளிட்ட 9 மொழிகளில் 125 படங்களை இயக்கியுள்ளார்.  70  வயதை நெருங்கும் ராமநாராயணன் சர்க்கரை நோய், மற்றும் ரத்த அழுத்த நோயால் அவதிப்பட்டு வந்தார். அவரால் முன்புபோல் செயல்பட முடியாததால் தன் மகன் என்.ராமசாமியை தனது சினிமா வாரிசாக களத்தில் இறக்கி இறக்கினார்.
ராமநாராயணனின் ஸ்ரீதேனாண்டாள் பிக்சர்ஸ் நிர்வாக பொறுப்புக்கு ராமசாமி வந்துள்ளார்.
இந்நிலையில் சிங்கப்பூரில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.

இராம.நாராயணன் 1980-ம் ஆண்டில் திரைப்படத் துறையில் காலடி எடுத்து வைத்தார். 25 ஆண்டுகளில் 125 படங்களை டைரக்ட் செய்துள்ளார். 45 படங்களை சொந்தமாகத் தயாரித்துள்ளார். 1984-ம் ஆண்டில் அவர் 12 படங்களை இயக்கினார். அதாவது, சராசரியாக மாதம் ஒரு படம்! 1985-ல் 10 படங்களையும், 1992-ல் 10 படங்களையும் இயக்கினார். 1980-ல் இவர் தயாரித்த 'சுமை' என்ற படம் வித்தியாசமானது.

இதன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகிய பொறுப்புகளை இவரே கவனித்தார். இந்தப் படத்தில், 9 குழந்தைகளுடன் ஒரு தாய் அவதிப்படுவார். தந்தை குடிகாரன். எனவே, குடும்பத்தை சுமக்க வேண்டிய பொறுப்பு மூத்த மகன் மீது விழுகிறது. கடைசி வரை அந்த குடும்பத்திற்காக பல சுமைகளை சுமக்கும் கதாநாயகன், இறுதியில் இறந்து விடுகிறான். அப்போது அவனை மற்றவர்கள் சுமக்கிறார்கள்.

இப்படத்தில், கதாநாயகனாக சந்திரசேகர் நடித்து இருந்தார். படம் வெற்றி பெற்றது. 'சுமை' படத்தை, சிறந்த படமாக தமிழக அரசு தேர்ந்தெடுத்து ரூ.1 லட்சம் பரிசு வழங்கியது.

தன்னிடம் உதவி இயக்குனர்களாக இருந்த பலரை, டைரக்டர்களாக உயர்த்தினார், இராம.நாராயணன். 'சுமை' படத்தில், இவரிடம் உதவி இயக்குனராகச் சேர்ந்தார், ராமராஜன். 'சோலை புஷ்பம்' என்ற தன் சொந்தப் படத்தை இயக்கும் பொறுப்பை ராமராஜனுக்கு கொடுத்தார், இராம.நாராயணன். அதன் மூலம் டைரக்டராக உயர்ந்த ராமராஜன், பின்னர் கதாநாயகன் ஆனார். 'கரகாட்டக்காரன்' உள்பட பல வெற்றிப்படங்களை அளித்தார்.

இதேபோல, மற்றொரு உதவி இயக்குனர் சோழராஜனுக்கு 'நாகம்' என்ற படத்தையும், இன்னொரு உதவி இயக்குனர் கோலப்பனுக்கு 'தென் பாண்டி சிங்கம்' என்ற படத்தையும் இயக்க வாய்ப்பளித்தார். இராம.நாராயணனிடம் உதவி இயக்குனராக இருந்தவர் பேரரசு. இராம.நாராயணனின் 30 படங்களுக்கு, இவர் உதவி இயக்குனராகப் பணியாற்றினார்.

விஜய் நடித்த 'திருப்பாச்சி', 'சிவகாசி' ஆகிய படங்களை டைரக்டர் செய்து, வெற்றி இயக்குனராக பவனி வருகிறார், பேரரசு. கன்னட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்த அர்ஜூனை 'நன்றி' என்ற படத்தின் மூலம் இராம.நாராயணன் தமிழ்த் திரைப்படத்துறைக்கு கொண்டு வந்தார்.

1989-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் இராம.நாராயணன் காரைக்குடி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1990-ம் ஆண்டு தமிழக அரசின் `கலைமாமணி' விருது இவருக்கு கிடைத்தது. 1995-ம் ஆண்டு இயல், இசை, நாடக மன்ற தலைவராக பதவி வகித்தார். 2005-ம் ஆண்டு முதல் திரைப்பட தணிக்கை குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இராம.நாராயணனின் மனைவி பெயர் ராதா. மகன் ராமசாமி, தந்தையுடன் சேர்ந்து படங்களில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செய்து வந்தார். மகள்கள் அன்பு, உமா ஆகியோருக்கு திருமணமாகிவிட்டது.

45 படங்களை சொந்தமாக தயாரித்து, 113 படங்களை இயக்கிய இராம.நாராயணனின் கலைப்பயணம், கடும் உழைப்பினாலும், திறமையினாலும் தனி மனிதனும் சாதனை படைக்க முடியும் என்பதற்கு  ஓர் உதாரணம்.

ad

ad