புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜூன், 2014


வாக்குறுதிகளை வழங்கி சர்வதேசத்தை ஏமாற்றும் அரசு: சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு
இலங்கை அரசு சர்வதேச அரசை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
யாழ். நீர்வேலியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் தெரிவித்த அவர்
சர்வதேசத்தை ஏமாற்றும் முயற்சியிலேயே இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. அந்த நிலை மாற்றப்படவேண்டும். சர்வதேச விசாரணையை மறுப்பதால் நாடும், அரசும் மேலும் நெருக்கடிகளையே எதிர்கொள்ளவேண்டிவரும்.
அதனை புரிந்துகொண்டு அரசு நடந்துகொள்ளவேண்டும் எனவும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் ஏற்பாட்டில் இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச விசாரணையை நாம் வரவேற்கின்றோம்.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை இடம்பெறவேண்டும் என்று கூட்டமைப்பு பல சந்தர்ப்பங்களிலும் வலியுறுத்தி வந்திருக்கிறது.
யுத்தம் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையிலும் எந்தவித முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுக்கவில்லை.
அதேவேளை, ஐ.நாவின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த போது அவருக்கும் பல்வேறு வாக்குறுதிகளை இலங்கை அரசு வழங்கியிருந்தது.
அதெல்லாம் காற்றோடு பறந்து விட்டது. இவ்வாறு வாக்குறுதிகளை வழங்கி, வழங்கி அரசு சர்வதேசத்தை ஏமாற்றுகின்றது என சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்தார்.
இரண்டாம் இணைப்பு
வடமாகாணம் தொடர்ந்தும் அச்சுறுத்தல் மிக்க மாகாணமாகவே இருப்பதாக இலங்கையின் இராணுவப் பேச்சாளர் ருவாண் வணிகசூரிய தெரிவித்திருக்கும் கருத்திற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளதுடன் வட மாகாணத்தில் கடந்த 5வருடங்களில் அரச பயங்கரவாதத்தை தவிர வேறு எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையும் இடம் பெறவில்லை. எனவும் தெரிவித்திருக்கின்றது.
இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு வடமாகாணம் தொடர்ந்தும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும், இம்மாகாணத்தில் பயங்கர வாத அச்சுறுத்தல் தொடர்ந்தும் நிலவுவதாகவும் இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருக்கும் நிலையிலேயே தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் தன்னுடைய கண்டனத்தை மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றது.
மேற்படி விடயம் தொடர்பாக இன்றைய தினம் கூட்டமைப்பின் நீர்வேலி அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் மேற்கண்டவாறு கண்டனத்தை தெரிவித்திருக்கின்றார்.
விடயம் தொடர்பில் மேலும் அவர் அங்கே குறிப்பிடுகையில்,
போர் நிறைவடைந்து 5 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில் புலிகள் மீண்டும் வந்துள்ளனர். மீண்டும் செயற்பட ஆரம்பிக்கின்றனர் என கூறி நெடுங்கேணி பகுதியில் 3 இளைஞர்களை சுட்டு படுகொலை செய்து அரசாங்கம் நடத்திய நாடகத்தை தவிர வேறு ஒன்றும் வடமாகாணத்தில் நடைபெற்றிருக்கவில்லை. என்பதே உண்மையாகும்.
ஆனால் அரசாங்கம் தன்னுடைய இராணுவ இயந்திரத்தைப் பயன்படுத்தி கடத்தல், காணாமல்போகச் செய்தல், துன்புறுத்தல் கொலைகள் என பல அரச பயங்கரவாதச் செயல்களை செய்கின்றது.
எனவே வடமாகாணத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளதாக எழுந்தமானமாக பேசுவதனை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதுடன், வடமாகாணத்தில் தமிழ் மக்கள் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடவில்லை.
மாறாக அரசாங்கத்தின் அரச பயங்கரவாதமும், பயங்கரவாத செயற்பாடுகளும் தொடர்ச்சியாக நடைபெற்று வருக்கின்றன என்பதனையும் நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினால் நடத்தப்படவுள்ள சர்வதேச விசாரணைகளுக்கு முழுமையான ஆதரவினையும், சாட்சிகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளையும் தாம் மேற்கொள்ளவுள்ளதாகவும்,
மேற்படி ஆணைக்குழுவில் சாட்சியமளிப்பதன் மூலம் இலங்கையின் உள்நாட்டு இரகசியங்களை வெளியிடுவதாகவும், சாட்சியமளிப்பவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்றும் அரசாங்கம் தொடர்ந்தும் விடுத்து வரும் அச்சுறுத்தல்களை கண்டிப்பதுடன்.
அவற்றை சர்வதேசத்தின் கவனத்திற்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளதுடன், இலங்கை அரசாங்கம் இன்று இந்த விடயத்தில் நடந்துகொள்ளும் முறைகளின் அடிப்படையில் கடந்தகாலத்தில் இதே அரசாங்கம் தமிழ் மக்கள் மீது எவ்வாறான மிக மோசமான வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டிருக்கும் என்பதனையும் சர்வதேசம் மிக தெளிவாக உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ad

ad