புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜூன், 2014


தீவகக் கல்வி வலய மாணவர்களுக்கு கண்டற்காட்டில் வெளிக்களப் பயிற்சி
யாழ். தீவகக் கல்வி வலய மாணவர்களுக்கு உலக சுற்றுச்சூழல் தினம் மற்றும் வடமாகாணச் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வார நிகழ்ச்சிகளில் ஒன்றாக மண்டைதீவுக் கண்டற்காட்டில் வெளிக்களப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் யூன் 5ந் திகதி உலக சுற்றுச்சூழல் தினம் ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி யூன் 5ந் திகதி தொடங்கி யூன் 11ஆந் திகதி வரையான ஒருவார காலப்பகுதியை வடமாகாண சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாரமாகப் பிரகடனப்படுத்தியிருந்த வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு அதற்கான நிகழ்ச்சியை இன்று மண்டைதீவு தெருவெளிப் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள கண்டல்நிலச் சூழலில் நடாத்தியது.
பூமி வெப்பம் அடைவதால் ஏற்படும் கடல்மட்ட உயர்வால் யாழ்ப்பாணக் குடாநாடு, குறிப்பாகக் குடாநாட்டின் சிறுதீவுகளுக்குள் கடல்நீர் புகும் ஆபத்து இருப்பதாகச் சூழலியல் விஞ்ஞானிகள் எச்சரித்து வருவதாலேயே, அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நிகழ்ச்சியை மண்டைதீவு தேர்வு செய்யப்பட்டு, தீவகக் கல்வி வலய மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் தீவகக் கல்வி வலயத்தின் பல்வேறு பாடசாலைகளிலும் இருந்து நூறு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்குச் சூழல் பாதுகாப்பு மற்றும் கண்டற்காடுகள் தொடர்பான கற்றல் குறிப்பேடுகளும், சூழல் விழிப்புணர்வு விபரணத் திரைப்பட இறுவட்டும் வழங்கப்பட்டன.
அமைச்சின் செயலாளர் யு.எல்.எம் ஹால்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், சிறப்பு விருந்தினர்களாக யாழ். பல்கலைக்கழக விவசாயபீடப் பேராசிரியர் கலாநிதி கு.மிகுந்தன், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடமாகாண பிரதிப் பணிப்பாளர் விஜிதா சத்தியகுமார் ஆகியோர் கலந்துகொண்டு, கண்டற் தாவரங்கள் பற்றியும், தீவுகளின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தில் கண்டற்தாவரங்களின் பங்கு பற்றியும் விளங்கப்படுத்தினர்.
நிகழ்ச்சியின் முடிவில் கண்டற்காட்டுச் சூழலுக்குள் மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு, கண்டற் தாவரங்களை அடையாளம் காணுவதற்கான பயிற்சியும், கண்டல் மரக்கன்றுகளின் நடுகையும் இடம்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் வடமாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், பிரதி விவசாயப் பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம், மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் சோ.சிவபாதம், பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் ந.சுதாகரன், மாகாணக் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரப் பணிப்பாளர் சி.வசீகரன், மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன், தீவக வலயக் கல்விப்பணிப்பாளர் ஜோன் குயின்ஸ்ரஸ், மாகாணசபை உறுப்பினர்களான விந்தன் கனகரத்தினம், பா.கஜதீபன், வேலணை பிரதேசசபைத் தலைவர் சி.சிவராசா உட்பட அதிபர்கள், ஆசிரியர்கள் என அதிக எண்ணிக்கையானோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

ad

ad