வியாழன், ஜூன் 26, 2014


இன்றைய சபை அமர்வில் செங்கோலை வெளியே கொண்டுசெல்ல விடாமல் சிவாஜிலிங்கம் போராட்டம்
சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்றைய தினம் வடமாகாணசபை சபா மண்டபத்தில் நிலத்தில்
உட்கார்ந்து செங்கோலை வெளியே கொண்டு செல்ல விடாமல் எதிர்ப்பு போராட்டம் நடத்தியுள்ளார்.
இன்றைய தினம் நடைபெற்ற வடக்கு மாகாணசபையின் 11வது அமர்வில் நிறைவேற்றப்படுவதற்காக சிவாஜிலிங்கம் 3தீர்மானங்களை கடந்த 12ம் திகதி பேரவைச் செயலகத்திற்கு அனுப்பி வைத்திருந்துள் ளதுடன், பேரவை தலைவருக்கும் அனுப்பியுள்ளார். ஆனால் இன்றைய அமர்வில் அவருடைய பிரேரணைகள் சபைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் தன்னுடைய பிரேரணைகள் எதற்காக எடுத்துக் கொள்ளப்படவில்லை என கேள்வி எழுப்பிய சிவாஜிலிங்கம், கூட்டம் நிறைவடைந்ததும், செங்கோலை வெளியே கொண்டுசெல்ல விடாமல் சபா மண்டபத்தின் பிரதான வாயிலில் நிலத்தில் உட்கார்ந்து தன்னுடைய சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக எதிர்ப்பு போராட்டம் நடத்தினார்.
இதன் பின்னர் சிவாஜிலிங்கம் பிரேரணையாக கொண்டுவந்திருக்கும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக் குழு தொடர்பான விடயங்கள் தேசிய அரசியலில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் கையாளப்படுகின்றது.
மேலும் இந்த விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்கும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் கூட்டமைப்பின் தலைமை 8பேர் கொண்ட குழுவினை நியமித்துள்ளது.
எனவே அவர்களுடைய முடிவுகள் கூறப்படும் வரையில் தீர்மானம் மாகாணசபையில் நிறைவேற்ற முடியாது,
ஒரு கட்சி என்ற வகையில் கட்சியின் தலைமைக்கு மதிப்பளிக்கவேண்டும், அவர்களுடைய தீர்மானத்திறகு கட்டுப்படவேண்டும்.
மேலும் தேசிய அரசியலில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராஜதந்திர ரீதியாக கையாளும் விடயங்களை, குறிப்பாக சர்வதேச விடயங்களை மாகாணசபையில் தீர்மானமாக நிறைவேற்றுவது அவர்களுடைய அந்த தேசியப் பணிக்கு இடையூறாக இருப்பதாக சபையில் பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மற்றும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் சுட்டிக்காட்டினர்.
இதனையடுத்து தன்னுடைய எதிர்ப்பு போராட்டத்தைக் கைவிட்ட சிவாஜிலிங்கம் எழுந்து ஆசனத்தில் அமைதியாக அமர்ந்து கொண்டார். அதன் பின்னர் எவ்விதமான குழப்பங்களும் உண்டாகியிருக்கவில் லை.