புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூன், 2014


அன்பு - நட்பு - அழகு! கலை ஓவியமாய் கலைஞர் கடிதங்கள்! Exclusive

சூரியனைச் சூல்கொண்ட பூமி என்று திருக்குவளையை வர்ணித்தார் வைரமுத்து. அந்த திருக்குவளை திருவாரூரிலிலிருந்து பனிரெண்டாவது  கிலோமீட்டரில் சிம்மாசனம்போட்டு உட்கார்ந்திருக்கிறது.
தியாகராஜர் திருக்கோவிலும் அதையொட்டிய நான்கு தெருக்களும்தான் அன்றைய திருக்குவளை. அங்குள்ள அங்காளம்மன் கோவில் தெருவில், நான்கைந்து வீடுகள் நெருக்கி அடித்தாற்போல் இருக்கும். அதில் ஒரு வீடுதான் முத்துவேலரின் வீடு. இவர்தான் கலைஞரின் அப்பா.


 


திருக்குவளையில் முத்துவேலரைத் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. இசை வேளாளர் குடும்பத்தைச் சேர்ந்த இவர், திருக்குவளை மக்களின் அன்பான மருத்துவர். தலைவலி முதல் பாம்புக்கடி வரை இவரிடம்தான் மருத்துவம் பார்த்துக்கொள்ள வருவார்கள். இவர் கொடுக்கும் விபூதியே நோய்களை குணமாக்குவதாக நம்பினார்கள். முத்துவேலர் பாட்டு புனைவதிலும் வல்லவராகத் திகழ்ந்தார்.

அத்தகைய முத்துவேலர், தன் முதுமை கருதி, தனது வங்கிக் கணக்கை, தன் மகனான கலைஞர் பெயருக்கு மாற்றச் சொல்லிலி வங்கிக்கு, கையெழுத்து போட்டுக் கொடுத்த அபூர்வ  கடிதம்தான் இது.

திருவாரூர் கமலாம்பிகா கோவாபரேடிவ் அர்பன்பாங்க் செகரட்டரி அவர்களுக்கு எண்: 3762 அ. முத்துவேலு பிள்ளை எழுதிக்கொண்டது. இப்பவும் எனக்கு வயது 70-க்குமேல் அதிகமாகி நடக்கமுடியாமல் பலஹீனமாயிருக்கிறபடியாலும், கண்பார்வை மங்கலாயிருப்பதினாலும் பாங்கில் வரவு- செலவு வைத்துக்கொள்ள சௌகரியமில்லாத தினால் எனக்கு பாங்கில் இருக்கும் 5 ஷேர் களையும் எனக்கு வாரிசாகவுள்ள என் மகன் கருணாநிதியின் பேரில் மாற்றிக் கொடுக்க கேட்டுக்கொள்கிறேன். நான் தற்பொழுது எனது கிராமத்தில் வசித்து வருகிறேன்.

-இப்படிக்கு
முத்துவேலு, 

தனது பால்ய காலத்தோழன் தென்னனுடன் கலைஞர் கொண்டிருந்த நட்பு, காவிய நட்பு. அந்த நண்பன் 80-வயதைத் தொட்டபோது நெஞ்சம் நெகிழ வாழ்த்துக்கடிதத்தை இப்படி எழுதுகிறார் கலைஞர்...
தென்னன் 80

அன்புள்ள தென்னன்,
உனக்கு இன்று அகவை எண்பது! (80). என்னிலும் ஒருவயதுக்குமேல் மூத்தவன். அதனால் தென்னன் அல்ல! அண்ணன் என்பேன் உன்னை! திருவாரூர் தெருமண்ணில் விளையாடியதும்; திராவிட இயக்கம் வளர்ப்பதற்காக 1942-ஆம் ஆண்டிலேயே "முரசொலி' துண்டு அறிக்கையாக வெளியிட்டதும்; அந்த முரசொலிக்கு இந்த ஆண்டு "மணிவிழா' ஆண்டு என்று பெருமிதம் கொள்வதும்; இளமையில் விளைந்த நம் நட்பை இன்றைக்கும் நினைவுபடுத்துகிறதல்லவா!பாலை மணலிலும், சோலை நிழலிலும் நாம் பயணித்திருக்கிறோம்! இரண்டுமே நமக்கு ஒரே அனுபவம்தான்!வளர்க நமது வயது என்பதைவிட வாழ்க நமது நட்பு என்பதில்தான் என் மனத்திற்கு ஒரு சுகம்!

-உன் அன்புள்ள
மு.கருணாநிதி
  







லண்டனிலிருந்து திருவாரூர் தென்னனுக்கு கலைஞர் எழுதிய போஸ்ட் கார்ட் கடிதம், நடிகரும் உறவினருமான நமச்சிவாயத்தின் மறைவு குறித்த வருத்தங்களை இப்படிப் பகிர்கிறார் கலைஞர்...
அன்புள்ள தென்னன் வணக்கம். நமசிவாயத்தின் மறைவை முரசொலியில் இன்றுதான் கண்டேன். நெஞ்சுவெடித்துவிடும் போலிருக்கிறது. பெரிய கொடுமை. தயவுசெய்து என் அனுதாபத்தை அவர்கள் வீட்டாருக்குச் சொல்லவும். ஆரூர் நண்பர்கள் அனைவருக்கும் என் வணக்கம்.

அவசரத்தில் வார்த்தைகளை கொட்டிவிட்டோமே என தன் நண்பரான நகராட்சி தலைவர் தென்னனுக்கு முதல்வரான கலைஞர் வருத்தம் தெரிவித்து எழுதிய கடிதம் இது.



அன்புள்ள நண்பர் தென்னனுக்கு;

நீ, சென்னையில் வீட்டுக்கு வந்தபோது அன்று என்னைக் கப்பியிருந்த கோபத்திலும்- சோகத்திலும், உன்னை மனம் நோகச் சொன்ன வார்த்தைகளுக்காக வருந்துகிறேன் வழக்கம்போல் பொறுத்துக் கொள்க. 
என்றும் உன் நண்பன்
-மு.க




கலைஞரின் இளமைக் குறும்பு, வட்டவட்டமாய் கடிதம் எழுதவைக்கிறது.

தோழர் தென்னன் அவர்களே! வணக்கம். தங்கள் உடல் நலத்தையறிய ஆவல் மிகவும் சி.டி.எம்.கடிதத்தில் விளக்கம் காணவும். 9.12.45 குற்றாலம் உண்டா என்பதை எழுதவும். எப்போதும்போல் அலட்சியம் வேண்டாம்.  ராமநாத அண்ணனுக்கும் வி.எஸ்.பி. யாகூப்புக்கும் வணக்கம் கூறவும். எல்லாவற்றுக்கும் பதில் வீட்டை பார்த்துக் கொள்ளவும். டி.பி.ஆர்.?

-அன்பு
மு.க

தன் நண்பனுக்கு கலைஞரே அடித்த மணவிழா அழைப்பு!

திராவிட நாடு திராவிடருக்கே!

திருமண அழைப்பு!

8-4-53 புதன்கிழமை மாலை 6.00 மணிக்கு திருவாரூர் கீழ்வீதியில், எனது நண்பர் தோழர் கு. தென்னன் அவர்கள் திருமதி சுந்தராம்பாள் அவர்களை வாழ்க்கைத் துணை நலமாகப் பெற்றிடும் மண விழாவிற்குத் தாங்கள் வருகை தந்து சிறப்பித்தருள வேண்டுகின்றேன்.

அன்பன்
மு.கருணாநிதி,
திருவாரூர்

சொந்த ஊர் பற்றிய நெகிழ்வு!
 


நான் பிறந்த மண்ணில் நான் பிறந்த இல்லத்திற்கு எத்தனை முறை வந்தால்தான் என்ன; தெவிட்டுவதில்லையே! எத்தனையோ பசுமையான கனவுகள்- எத்தனையோ மறக்க முடியாத நிகழ்ச்சிகள். தந்தையார் முத்துவேலரையும் அன்னை அஞ்சுகத்தையும் வாழவைத்த இந்த வீடு; இன்று நாடு, மக்களை வாழவைக்க என்னை எதிர்பார்க்கும் நிலையில் உயர்த்திவிட்டுள்ளதே; நான் பிறந்த மண்ணுக்கு நான் எப்படித்தான் நன்றி சொல்லப்போகிறேன்.

மு.கருணாநிதி
18.6.1996

ad

ad