புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜூலை, 2014




ந்தியாவில் நான்காவது சம்பவமாகவும் தென்னிந்தியாவிலேயே முதல் சம்பவமாகவும் 11 தளம் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சிக்கியவர்களை மீட்கும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது. பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.  மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த கட்டிடம் புதைந்து போனதில் மறைந்துள்ள விவகாரங்கள் அடங்கிய சிகப்பு நாடாவை (ஃபைல்) துருவினோம்.

சென்னையில், தரைத்தளத்துடன் கூடிய இரண்டு தளத்துக்கு மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட வேண்டுமானால் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) அப்ரூவலைப் பெறவேண்டும் என்பது விதி. இந்த விதியை அமல்படுத்துவதற்கு பல்வேறு துணை விதிகள் இருக்கின்றன. ஆனால்,  இந்த விதிகளை சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் முறையாக அமல்படுத்துகிறார்களா? என்பதுதான் மிகப்பெரிய கேள்விக்குறி. 

இதுகுறித்து சி.எம். டி.ஏ.வின் உயரதிகாரி ஒரு வரை சந்தித்து நீண்டநேரம் விசாரித்தபோது, ""அடுக்கு மாடி குடியிருப்பு கட்டு வதற்காக சி.எம்.டி.ஏ.வின் அப்ரூவலை பெறுவதற்கு ஒருவர் விண்ணப்பிக்கிறார். அந்த விண்ணப்பம் முதலில் பிளானிங் அப்ரூவல் செக்ஷனுக்குப் போகும். அங்கு உதவி திட்ட அமைப் பாளர் அந்த விண்ணப்பத்தை ஆய்வு செய்வார். அடுக்குமாடி குடியிருப்பு எனில் 60 அடி சாலை இருக்க வேண் டும். வரைபடத்தில் அது சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறதா? என கவனிக்க வேண்டும். பிறகு, விண்ணப்பத்தோடு கட்டிடம் அமையும் நிலத்தின் பட்டா, கட்டிடத்தின் வரை படம், மண்வளம் ஆதாரத்தை உறுதிசெய்யும் ஸ்ட்ரக்சுரல் ஸ்டெபிலிட்டி சர்டிஃபிகேட், போக்குவரத்துதுறையின் என்.ஓ.சி., ஃபயர் சர்வீஸ் டிபார்ட்மெண்டின் என்.ஓ. சி., சென்னை மாநக ராட்சியின் என்.ஓ.சி., சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்றும் வாரியத்தின் என்.ஓ.சி., சுற்றுப்புறச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப் பாட்டுத் துறையின் என்.ஓ.சி. ஆகியவை அனைத்தும் இணைக்கப் பட்டிருக்க வேண்டும். இவைகள் அனைத்தும் இருந்தால், கட்டிடம் அமையும் பகுதிக்கு நேரில் சென்று உதவி திட்ட அமைப்பாளர் ஆய்வு நடத்தவேண்டும். அங்கும் எல்லாம் சரியாக இருந்தால் இந்த ஃபைலை துணைத் திட்டஅமைப்பாளருக்கு அனுப்பி வைப்பார். அவரும் விண்ணப்பத்தோடு இணைக்கப்பட்டுள்ள பேப்பர்ஸையும் நேரில் சென்று இடத்தையும் ஆய்வு செய்துவிட்டு, எல்லாம் ஓ.கே.எனில் தலைமை திட்ட அமைப்பாளருக்கு ( சீஃப் ப்ளானர்) ஃபைலை ஃபார்வர்டு செய்வார். இவரும் அதேபோல, எல்லா ஆய்வுகளையும் நடத்தி முடித்துவிட்டு ஃபைலை, சி.எம்.டி.ஏ.வின் மெம்பர் செகரட்டரியாக இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு அனுப்புவார். மெம்பர் செக ரட்டரியும் இதை முழுமையாக வெரிஃபை பண்ணிவிட்டு அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு அப்ரூவல் வழங்குவதற்காக இருக்கும் கமிட்டி யின் (எம்.எஸ்.பி. கமிட்டி) முன்பு இந்த ஃபைலை வைப்பார். 


இந்த கமிட்டிக்கு சி.எம்.டி.ஏ. மெம்பர் செக் ரட்டரிதான் சேர்மன். கமிட்டியின் உறுப்பினர்களாக  தலைமை திட்ட அமைப்பாளர், போக்குவரத்து துறையின் இணை கமிஷனர், ஃபயர் சர்வீஸ் டைரக்டர், மெட்ரோ வாட்டர் நிர்வாக இயக்குநர், சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு துறையின் நிர்வாக இயக்குநர், மின்வாரிய சேர்மன், சென்னை மாநகராட்சியின் கமிஷனர் ஆகியோர் இருப்பார்கள். இத்தனை உயரதிகாரிகள் அடங்கிய  கமிட்டியின் ஒப்புதலை அந்த ஃபைல் பெறவேண்டும். அதன்பின் அந்த ஃபைல் அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறைக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு துறையின் டெபுடி செகரட்டரி, செகரட்டரி ஆகியோரின் பார்வைக்கு சென்றபிறகு அந்த ஃபைல் துறை அமைச்சரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். அமைச்சரின் ஒப்புதலுக்குப் பிறகு இது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டு சி.எம்.டி.ஏ.விற்கு அனுப்பி வைப்பர். அதை வைத்து சம்பந்தப்பட்ட பில்டிங்கிற்கு திட்ட அனுமதியும், கட்டிட அனுமதியும் சி.எம்.டி.ஏ. வழங்கும். அதன்பிறகு கட்டிடம் கட்டும்போது பிளானிங் பெர்மிஷன் கொடுக்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் கட்டடம் கட்டப்படுகிறதா என ஒவ்வொரு ஸ்டேஜிலும் சி.எம்.டி.ஏ. இன்ஜினியர்ஸ் கண்காணிக்க வேண்டும். இதுதான் நடைமுறை. ஆக, ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அப்ரூவல் தர இத்தனை ஃபார்மாலிட்டிகள் இருக்கின்றன'' என்று சுட்டிக் காட்டினார். 


 இடிந்து விழுந்துள்ள "ப்ரைம் சிருஷ்டி' அடுக்குமாடி குடியிருப்பு தொடர்பான ஃபைல் விவகாரத்தில் என்ன நடந்துள்ளது? என விசாரித்தபோது, ""ப்ரைம் சிருஷ்டி நிறுவனம் தனது மல்டி ஸோர்ஸ் பில்டிங்கை கட்டுவதற்காக கொடுக்கப்பட்ட நிலத்தின் மொத்த பரப்பளவு 10,375. 7 சதுர மீட்டர். அதாவது, ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 684 சதுர அடி.  இதில், ஓப்பன் ரிசர்வேஷன் ஸ்பேஸ், பூங்கா, நீச்சல்குளம், எஃப்.எஸ்.ஐ. ஆகியவற்றிற்கான இடங்கள் போக, 3986.17 சதுர மீட்டரில் 11 தளங்கள் கொண்ட இரண்டு பில்டிங்குகளை கட்டுவதற்கு அனுமதி கேட்டிருக்கிறது. அதாவது, 11 தளங்கள் கொண்ட ஒவ்வொரு பில்டிங்கும் 42 ஆயிரத்து 907 சதுர அடியில் அமைக்க பெர்மிஷன் கோரப்பட்டது. இந்த 2 பில்டிங்குகளிலும் தலா 44 குடியிருப்புகள் அமையும்.

இந்த ஃபைல் முதலில் பிளானிங் பெர்மிஷன் செக்ஷனிலுள்ள உதவி திட்ட அமைப்பாளர் எஸ்தரிடம் கொடுக்கப்பட்டது. அப்போதே, மண்வள ஆதார உறுதி சர்டிஃபிகேட் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் என்.ஓ.சி.க் கள் எதுவுமே இணைக்கப்படவில்லை. நிலத்தின் பட்டாவும் கட்டிட வரைபடமும் மட்டும்தான் இணைக்கப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட நிறுவனம், இப்படி ஒரு பல அடுக்கு கட்டடம் கட்டுவதற்கு திட்டமிட்டபோதே முதலில் துறையின் அமைச்சர் வைத்திலிங்கத்தை சந்தித்து விவாதித்துவிட்டுத்தான் இந்த ப்ராஜெக்டையே கையிலெடுத்துள்ளனர். அதனால்தான் அப்ளை பண்ணும்போதே இணைக்கப்பட வேண்டிய முக்கியமான சர்டிஃபிகேட்டுகளை இணைப்பதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், சி.எம்.டி.ஏ.வின் வழி காட்டுதலில் மண்வள ஆதார உறுதிக்கான சர்டிஃபி கேட்டை பெற்று இணைத்தது ப்ரைம் சிருஷ்டி நிறுவனம். மண் வள ஆதார உறுதிக்கான சான்றிதழை தருவதற்கு இன்ஜினியர்கள் பலர் அரசின் பொ.ப.துறையிடமிருந்து லைசென்ஸ் பெற்று வெளியே இருக்கிறார்கள். அந்த வகையில், சம்பந்தப்பட்ட பகுதியில் பல அடுக்கு கட்டடம் கட்டுவதற்கேற்ற மண்வளம் உறுதியாக இருப்பதாக பொறியாளர் நாகேஷ் சான்றிதழ் தந்துள்ளார். இது போலவே சில என்.ஓ.சி.க்கள் இடையிடையே வாங்கி இணைக்கப்பட்டது.  

உதவி திட்ட அமைப்பாளர் எஸ்தரிடமிருந்து இந்த ஃபைல், துணைத்திட்ட அமைப்பாளர் மீனாவிடமும் அவரிடமிருந்து தலைமைத் திட்ட அமைப்பாளர் ராஜ சேகரபாண்டியனிடம் சென்றது. சி.எம்.டி.ஏ.வின் அமலாக்கப் பிரிவில் முதுநிலை திட்ட அமைப்பாளராக இருந்த ராஜசேகர பாண்டியனை பல அடுக்கு கட்டடம் அப்ரூவல் செக்ஷனின் சீஃப் பிளானராக பதவி உயர்வு கொடுத்து உட்கார வைத்தவர் அமைச்சர் வைத்திலிங்கம். காரணம் சாதிக்காரராம். உதவி திட்டஅமைப்பாளரும் துணை திட்டஅமைப்பாளரும் ஏரியாவை விசிட் அடுத்துவிட்டு, 60 அடி அகல சாலைக்கு பதிலாக 42 அடி அகலம் மட்டுமே இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், இது கண்டுகொள்ளப்படவில்லை.


இதனையடுத்து தலைமைத்திட்ட அமைப்பாளர் ராஜசேகரபாண்டியனிடம் ஃபைல் போனது. அவரோ எந்த நேரடி ஆய்வையும் நடத்தாமலே, ஃபைலை ஓ.கே செய்து அதனை அப்போதைய மெம்பர் செகரட்டரி வெங்கடேசன் ஐ.ஏ.எஸ்.ஸுக்கு அனுப்பி வைத்தார். வெங்கடேசனும் தனது தலைமையிலான பல அடுக்கு கட்டடம் அப்ரூவல் கமிட்டியை 2012 ஆகஸ்ட்டில் கூட்டினார். கமிட்டி மெம்பர்கள் கலந்து கொண்டனர். கமிட்டியின் விவாதத்தின் போது, "வரைபடத் தில் குறிப்பிட்டதுபோல சாலையின் அகலம் இல்லை. பில்டிங்கின் பக்கவாட்டு பகுதியிலும் போதுமான காலி இடம் விடப்படவில்லை. அப்பகுதியில் சாலை விரிவாக்கத்திற்கு வழியில்லாததையும் நகரத்தின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, சாலை அகலத்திற்கான வேறுபாட்டையும் பக்கவாட்டில் காலிஇடம் விடாததையும் வரன்முறைப்படுத்தும் வகையில் இந்த விண்ணப்பத்திற்கு  விதிகளை தளர்த்தலாம்' என்று முடிவெடுத்தனர். இதற்கு கமிட்டி உறுப்பினர் கள், எந்தவித ஆட்சேபணையும் எழுப்பாமல் அதனை ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டனர். இப்படி ஒரு ஒப்புதலை கமிட்டியில் பாஸ் செய்து அனுப்பி வைக்குமாறு அமைச்சரின் விருப்பம் என்பதை அந்த கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார் வெங்கடேசன் ஐ.ஏ.எஸ்.

இதனை அடுத்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற துறைக்கு சி.எம்.டி.ஏ. இந்த ஃபைலை அனுப்பி வைக்க, துறையின் டெபுடி செகரட்டரி செல்வி, துறையின் அப்போதைய செகரட்டரி தங்க கலியபெருமாள் ஆகியோரும் இதற்கு ஒப்புதல் தந்து, அது அமைச்சரின் பார்வைக்குப் போனது. உடனே அமைச்சரும் அதற்கு ஒப்புதல் தர, சம்பந்தப்பட்ட நிறுவனத் திற்காக விதிகளை தளர்த்தியும் வரன்முறை செய்தும் இரண்டு அரசாணைகளை பிறப் பித்தது வீட்டுவசதித் துறை. இதை வைத்து 2013, ஜூன் 3-ந் தேதி அந்த நிறுவனத்துக்கு திட்ட அனுமதி வழங் கியது சி.எம்.டி.ஏ.!  ஆனால் கட்டிடம் கட்டிக் கொண்டிருக்கும் போது எந்த ஸ்டேஜிலும் சி.எம். டி.ஏ. அதிகாரிகள் ஸ்பாட்டில் விசிட் அடித்து ஆய்வு நடத்தவே இல்லை.

11 தளங்கள் கொண்ட 2 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவது குறித்து சிருஷ்டி நிறுவனம் விளம்பரம் செய்தபோதே, அப்பகுதியில் உள்ள சமூக சேவகர்கள் பலர், "இது களி மண் பூமி. இங்கு பல அடுக்கு கட்டிடங்கள் கட்ட அனுமதிக்காதீர்கள். கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யுங்கள்' என சி.எம்.டி.ஏ. விற்கு புகார்க் கடிதம் அனுப்பியுள்ளனர். ஆனால், அவைகளை பிளானிங் பெர்மிஷன் செக்சன் அலுவலர்களிலிருந்து உயரதிகாரி கள் வரை புறக்கணித்தனர். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மிக எச்சரிக்கையுடன் பில்டிங் அப்ரூவல் தர வேண்டிய அதிகாரிகள், தங்கள் மனசாட்சி யை அடகு வைத்ததுதான் இந்த பல அடுக்கு கட்டடம் இடிந்து விழுந்து பலரின் உயிரை குடித்த சோகத்திற்கு காரணம். ஆனால், அதிகாரிகளின் தவறுகளை மூடிமறைக்கும் விதமாக, "பிளானிங் அப்ரூவல்படி கட்டாமல் விதிகளை மீறி கட்டடம் கட்டியதால்தான் இந்த விபத்துக்கு காரணம்' என கட்டிட நிறுவனத்தினர் மீது மட்டும் முதல்வர் குற்றம்சாட்டுவது உண்மைகளை மறைக்கும் செயல்'' என்று விவரித்தனர் சி.எம்.டி.ஏ.வில் மனசாட்சியுள்ள அதிகாரிகள் சிலர்.

இந்த கட்டிடம் தொடர்பான முழு ரிப்போர்ட் டும் வேண்டுமென அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணனிடம் கேட்டுக்கொண்டார் முதல்வர். உடனே, சி.எம்.டி.ஏ.வின் தற்போதைய மெம்பர் செக ரட்டரி கார்த்தி ஐ.ஏ.எஸ்.ஸுக்கு உத்தரவு பறந்தது. அவரும், உடனடியாக இந்த கட்டிடத்திற்கு அனுமதி தரப்பட்டது தொடர்பான விரிவான அறிக்கையுடன் ஷீலாவை சந்தித்தார். அப்போது, சி.எம்.டி.ஏ.வின் முந்தைய மெம்பர் செகரட்டரி வெங்கடேசன், தலை மைத் திட்ட அமைப்பாளர் ராஜசேகரபாண்டியனும் கோட்டைக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். ப்ரைம் சிருஷ்டி நிறுவனத்திற்காக விதிகள் தளர்த்தப்பட்டு அரசாணை போடப்பட்டுள்ள விவகாரம், விதிகளுக் குப் புறம்பாக அவர்களுக்கு திட்ட அனுமதிக் கொடுக் கப்பட்டிருப்பது உள்ளிட்ட அனைத்தையும் அறிக் கையில் குறிப்பிட்டிருக்கிறார் கார்த்தி. அதைப் படித்துப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஷீலா, வெங்கடேசனுக்கு செம டோஸ் கொடுத்துள்ளார். அப்போது "அமைச்சரின் வழிகாட்டுதலிலேயே நான் நடந்துகொள்ள வேண்டியிருந்தது' என்று வெங்க டேசன் விளக்கமளித்ததாகவும் விவரமறிந்த கோட்டை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

ad

ad