புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜூலை, 2014


ஜெ., - சசி வருமான வரி வழக்கில் புது திருப்பம்; ஏன்? எவ்வாறு?

திமுக தலைவர் கலைஞர் எழுதியுள்ள கடிதம் :

’’30-6-2014 அன்று சென்னை எழும்பூர் 1-வது பொருளாதார குற்றப் பிரிவு நீதிமன்றத்தில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதும், அவருடைய
உடன்பிறவா சகோதரி சசிகலா மீதும், வருமான வரித் துறை தொடர்ந்த ஒரு வழக்கு நீதிபதி தெட்சிணா மூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனு ஒன்று ஏற்கப்பட்டு, விசாரணை ஜூலை 24ஆம் தேதிக்கு - ஆம் 24 நாட்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


இந்தச் செய்தி அனைத்து நாளேடுகளிலும் வெளிவந்துள்ளது. ஜெயலலிதா மற்றும் சசிகலா பங்குதாரர் களாக இருந்த சசி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் வருமான வரி கணக்குகளை 1991-92 மற்றும் 1992-93ஆம் ஆண்டுகளில் தாக்கல் செய்யவில்லை. 1993-94ஆம் ஆண்டுக்கு, ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் தனிப்பட்ட வருமானங்களுக்கான ஆவணங்களையும் வருமான வரித் துறையிடம் அவர்கள் தாக்கல் செய்யவில்லை. இதற்காக அவர்கள் மீது 1996இல் வருமான வரித் துறையினர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதலாவது பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக நிலுவையிலே உள்ளது. 30-6-2014 அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஜெயலலிதா, சசிகலா மற்றும் சசி எண்டர்பிரைசஸ் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், வருமான வரி தாக்கல் செய்யாதது தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கு வருமான வரித் துறையிடம் ஒரு மனு தாக்கல் செய்துள்ளதாகவும், அது வருமான வரித் துறையில் நிலுவையில் உள்ளதாகவும், எனவே இந்த விசாரணையைத் தள்ளி வைக்க வேண்டுமென்றும் கோரியிருக்கிறார்கள்.
வருமான வரித் துறை வழக்கறிஞர் அந்த மனு பரிசீலனையிலே உள்ளது என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில்தான் வழக்கு விசாரணையை வரும் 24ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.
வருமான வரித் துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராமசாமி இதுபற்றி செய்தியாளர்களிடம் கூறும்போது, “முதலமைச்சர் சார்பிலும், சசிகலா நடராஜன் சார்பிலும், வருமான வரித் துறை இயக்குனர் ஜெனரலிடம்மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், கம்பவுண்டிங் முறையில் அதாவது வருமான வரி பாக்கி உட்பட அனைத்துக் கட்டணங்களையும் செலுத்தி, வருமான வரி பிரச்சினையைத் தீர்க்கத் தயார் என்று அந்த மனுக்களில் கூறியுள்ளதாகவும், அந்த மனுக்கள் மீது வருமான வரித் துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது தெரிந்த பிறகு, இந்த வழக்கு விசாரணையைத் தொடரலாம் என்றும், அதுவரை வழக்கு விசாரணையைத் தள்ளி வைக்க வேண்டு மென்று தெரிவிக்கப்பட்டது. நான் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதனால் வழக்கு விசாரணையை மாஜிஸ்திரேட்டு தள்ளி வைத்துள்ளார்” என்று வருமான வரித் துறை வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.
இந்த வழக்கு பற்றி 20-4-2014 அன்று “நீதியே! நீ இன்னும் இருக்கின்றாயா?” என்ற தலைப்பில் “முரசொலி”யில் ஒரு கடிதம் தீட்டியிருந்தேன். ஜெயலலிதாவும், சசிகலாவும் தங்களை இந்த வழக்குகளிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று கோரி மனுக்களைத் தாக்கல் செய்து விட்டு, அதனை நடத்தாமல் காலம் கடத்தியதைத் தொடர்ந்து, வருமான வரித் துறை உயர் நீதிமன்றம், மற்றும் உச்ச நீதிமன்றத்தை அணுகியது. 4-9-2006 அன்று உச்ச நீதிமன்றம் நான்கு வாரக் காலத்திற்குள் விசாரணை நீதிமன்றத்தில் ஜெயலலிதாவும் சசிகலாவும் தங்களை விடுவிக்க வேண்டுமென்று தொடுத்த வழக்கை முடிவு செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டனர். அவ்வாறே முதன்மை மாநகர மாஜிஸ்திரேட் அவர்கள் விசாரித்து ஜெயலலிதாவின் மனுவினை தள்ளுபடி செய்தார்.

அதாவது 1997ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஒன்பதாண்டுகளுக்குப் பிறகு தங்களை அந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் மனு தாக்கல் செய்து, அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
எழும்பூர் மாஜிஸ்திரேட்; ஜெயலலிதா தரப்பினரின் விடுவிப்பு மனுவினை தள்ளுபடி செய்ததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் அதனை எதிர்த்து ஜெயலலிதா தரப்பினர் மேல் முறையீடு செய்து கொண்டனர். அந்த மேல் முறையீட்டு மனுவும் 2-12-2006 அன்று உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
உயர் நீதிமன்றத்தின் இந்த ஆணையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பினர் மேல் முறையீடு செய்து கொண்டார்கள். அந்த மேல் முறையீட்டினை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் குறுக்கிடுவதற்கு எந்தவிதமான அடிப்படையான காரணமும் இல்லை; மேல் முறையீட்டினை ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவுக்கு அந்த வழக்கில் எந்த விதமான நியாயமும் இல்லை என்று தெரிவித்ததோடு, விசாரணை நீதிமன்றம் இந்த வழக்கினை நான்கு மாத காலத்திற்குள் விசாரணை செய்து முடிக்குமாறு 30-1-2014 அன்று தீர்ப்பளித்தது.
வழக்கு தாக்கல் செய்யப்பட்டது 1997ஆம் ஆண்டு. மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அது 2006ஆம் ஆண்டு அதாவது 9 ஆண்டுகளுக்குப் பிறகு தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது. உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது 2-12-2006. அதை எதிர்த்து ஜெயலலிதா 2006ஆம் ஆண்டு செய்து கொண்ட அப்பீலை, எட்டு ஆண்டு களுக்குப்பிறகு உச்ச நீதிமன்றம் கடந்த 30-1- 2014இல் தள்ளுபடி செய்ததோடு, நான்கே மாதங்களில் விசாரணையை நடத்தி முடிக்குமாறு ஆணை பிறப்பித்தது. அவ்வாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து நான்கு மாதங்கள் முடிந்து விட்டன. ஆனால் விசாரணை முடிந்து விட்டதா என்றால் இல்லை.


உச்ச நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பில், “குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு குற்றம் சாட்டிய வருமான வரித் துறையின் மீதா அல்லது குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா மற்றும் சசிகலா மீதா என்பதுதான் தீர்மானிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சமாகும். இந்த வழக்கைப் பொறுத்தவரையில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு, உள்நோக்கம் இருந்திருப்பதை யூகிக்க முடிகிறது என்பதால், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள்தான்; தாங்கள் எவ்வித அய்யப்பாட்டிற்கும் இடமின்றி நிரபராதிகள் என்பதை நிரூபிக்கக் கடமைப்பட்டிருக் கிறார்கள். எனவே குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் எத்தகைய சூழலில் தாங்கள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யவில்லை என்பதை விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருப்பதில் இருந்து, இந்த வழக்கில் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்க வேண்டிய கடப்பாடு ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் தான் உள்ளது என்பதை மனதிலே கொள்ள வேண்டும்.
உச்சநீதிமன்றம் இப்படியெல்லாம் எழுதி; நான்கே மாதங்களில் இந்த வழக்கினை விசாரித்து முடிக்க வேண்டுமென்று தீர்ப்பளித்த அந்த வழக்கில்தான்; அதே உச்ச நீதிமன்றம் நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா பிரச்சாரம் செய்ய வேண்டியிருப்பதால் 3 மாதங்களுக்கு விசாரணையை தள்ளி வைத்ததுடன், (அப்போது நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரப் பணிகள் முடிவடைய நான்கு நாட்கள் மட்டுமே இருந்தன என்பது குறிப்பிடத் தக்கது) விசாரணை நீதிமன்றம் குறிப்பிடும் நாளில் ஜெயலலிதாவும், சசிகலாவும் தவறாமல் ஆஜராக வேண்டுமென்றும் ஆணை பிறப்பித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பாவது மதிக்கப்பட்டதா? ஜெயலலிதாவும், சசிகலாவும் தவறாமல் விசாரணை நீதிமன்றம் குறிப்பிட்ட நாளில் ஆஜரானார்களா?
இதோ மேலும் ஒரு நிகழ்வு.. ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் 1993-94ஆம் ஆண்டுக்கான தங்களது வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யாதது பற்றிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் 24-2-2006 அன்று நீதிபதிகள் பி.என். அகர்வால், ஏ.கே. மாத்தூர் முன்னிலை யில் விசாரணைக்கு வந்தது.
ஜெயலலிதாவின் வக்கீல் அப்போது ஆறு வாரம் அவகாசம் வேண்டுமென்றார். அப்போது நீதிபதிகள் கூறியது என்ன தெரியுமா? “நீதி பரிபாலன முறையையே நீங்கள் கேலிக் கூத்தாக்கி வருகிறீர்கள். இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்த நீதிமன்ற நடவடிக்கைகளை இழுத்துச் செல்ல முடியும்? குற்றவியல் நடைமுறைச் சட்டம் 313வது பிரிவின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜராகி கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லி மற்றவர்களுக்கெல்லாம் முன்மாதிரியாக நீங்கள் இருக்க வேண்டும்.
 இந்த விஷயத்தில் என்ன பதில் மனுவை உங்களால் தாக்கல் செய்ய முடியும்? (ஜெயலலிதாவின் வழக்கறிஞரைப் பார்த்து) உங்கள் கட்சிக்காரர் நீதிமன்றத்தில் ஆஜராகி கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டுமென்று நாங்கள் இன்றைக்கே ஆணை பிறப்பிக்க விரும்புகிறோம்.”
20-3-2014 அன்று இந்த வழக்கு எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றப் பிரிவு நீதிமன்றத்தில் இதே நீதிபதி திரு. ஆர். தெட்சிணாமூர்த்தி அவர்கள் முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய வேண்டியிருப்பதால், ஏப்ரல் 3ஆம் தேதி ஜெயலலிதாவும் சசிகலாவும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டுமென்று நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் ஏப்ரல் 3ஆம் தேதி ஜெயலலிதாவும், சசிகலாவும் நேரில் ஆஜராகவில்லை. அவர்களுடைய வழக்கறிஞர், ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதாகவும், சசிகலாவுக்கு முதுகுவலி மற்றும் சர்க்கரை நோய் என்றும் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க வேண்டு மென்றும் கோரினார்.
அப்போது வருமான வரித் துறை வழக்கறிஞர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.


அந்த நிலையில் மாஜிஸ்திரேட் ஜெயலலிதாவும், சசிகலாவும் ஏப்ரல் 10ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமென்று உத்தரவிட்டார். ஆனால் அன்றும் அவர்கள் ஆஜராகவில்லை. மே 19ஆம் தேதி அன்று வழக்கு விசாரணைக்கு வந்த போதும் ஜெயாவும் சசியும் ஆஜராகவில்லை. ஜூன் 3ஆம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அவ்வாறு ஜூன் 3ஆம் தேதியன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, வழக்கை விசாரித்த நீதிபதி 9-6-2014 அன்று ஜெயலலிதாவும் சசிகலாவும் நீதிமன்றம் வர வேண்டுமென்று உத்தரவிட்டார். ஆனால் அவர்கள் ஆஜராகவில்லை. நீதிபதி தெட்சிணாமூர்த்தி அவர்கள் ஜூன் 30ஆம் தேதி ஜெயலலிதாவும் சசிகலாவும் கண்டிப்பாக விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டுமென்று உத்தரவிட்டார். அந்த உத்தரவாவது நடைமுறைக்கு வந்ததா என்றால் இல்லை.
இப்படியெல்லாம் நீதிமன்ற உத்தரவுகளை அலட்சியப் படுத்தியவர்தான் ஜெயலலிதா. அவர் மீதான வழக்கிலே தான் நேற்றையதினம் விசாரணை நடைபெற்று 24ஆம் தேதிக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. துறை ரீதியாக வழக்கை முடித்துக் கொள்ள தற்போது மனு தாக்கல் செய்திருப்பதாகவும், அந்த மனு பரிசீலனையிலே இருப்பதாகவும் கூறி வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
15-7-1998 அன்றே “ஸ்டேட்ஸ்மேன்” நாளேடு வெளியிட்ட ஒரு செய்தியில், “மத்திய அரசுடன் ஜெயலலிதா செய்து கொண்டுள்ள தற்காலிக சமாதான உடன்பாட்டைத் தொடர்ந்து, அவர்மீது உள்ள வருமான வரி மற்றும் இதர வழக்குகளில் இருந்து அவரை விடுவிக்க வாஜ்பாய் அரசு வழிவகைகளை மேற்கொண்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்குகளை மேற்பார்வை யிட்டு வந்த ஆணையாளர் எஸ்.சி. ஜாதவ் மும்பையில் சிறந்த பதவி எனக் கருதப்படும் ஒரு பதவிக்கு மாற்றப்பட்டார். அவருடைய பதவியை கே. கோபாலன் என்பவர் ஏற்றுக் கொண்டார்.
நேர்மையுடன் செயல்படக் கூடியவரான பி.கே. ஸ்ரீதரன் வேறு ஒரு முக்கிய பொறுப்புக்கு மாற்றப்பட்டார். அவரது இடத்துக்கு என்.பி. திரிபாதி என்பவர் நியமிக்கப்பட்டார். இப்படிப்பட்ட மாறுதல்கள் மூலம் ஜெயலலிதாவும், சசிகலாவும் அவருடைய உறவினர்களும் ஒரு தற்காலிக விடுதலையை அடையக் கூடும் என்று வருமான வரித் துறை அதிகாரிகள் குற்றம் சாட்டினர். ஜெயலலிதாவை சமாதானப்படுத்தி யதன் மூலம் பா.ஜ.க. அரசு தனக்குத் தேவையான ஆதரவைப் பெற்றது. அதற்குப் பதிலாக தமிழ்நாட்டில் தி.மு.க. அரசைக் கலைக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தற்காலிகமாக நிறுத்திக் கொண் டுள்ளனர்” என்று எழுதியிருந்தது.


இன்னும் சொல்லப்போனால், பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்து, மத்திய ஆட்சியில் இருந்த போது, நிதியமைச்சராக இருந்த பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்கா அவர்கள் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அந்தப் புத்தகத்தின் பெயர்  (சுதேசி சீர்திருத்தவாதியின் வாக்குமூலம்). அந்த நூலில் பக்கம் 226இல்,  (சென்னையில் காலையில் என்னுடைய நிகழ்ச்சிகள் முடிந்தவுடன், நான் ஜெயலலிதா வீட்டிற்குச் சென்றேன். நல்லவேளையாக அங்கே எந்த புகைப்படக்காரரும் காத்திருக்கவில்லை. ஜெயலலிதா இருந்த அறைக்கு நான் சென்று சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, மதிய உணவு அருந்தினோம். மூன்று பேர் மட்டுமே சாப்பிட்டோம் - ஜெயலலிதா, திலிப் ரே (நிலக்கரித் துறை இணை அமைச்சர்), நான். சாப்பாடு நன்றாக இருந்தது. நான் புறப்படும்போது என்னிடம் ஜெயலலிதா ஒரு கவரைக் கொடுத்தார். பிறகு நான் அதனைத் திறந்து பார்த்த போது அவருடைய வருமான வரி வழக்குகள் பற்றிய குறிப்புகள் இருந்தன.
சில நாட்கள் கழித்து நான் பிரதமரைச் சந்தித்தேன். சென்னையில் ஜெயலலிதா வுடன் நடந்த பேச்சு வார்த்தை விவரங்களை அவரிடம் தெரிவித்தேன். ஆனால் ஜெயலலிதா கொடுத்த கவர் பற்றி சொல்ல மறந்து விட்டேன். அப்போது பிரதமர் (வாஜ்பாய்) “ஜெயலலிதா கொடுத்த கவரில் என்ன விஷயங்கள் இருந்தன?” என்றார். நான் திடுக்கிட்டுப் போனேன். நாட்டில் நடக்கும் விஷயங்களைத் தெரிந்து கொள்ள பிரதமர் நினைத்தால் அது முடியுமென்பதை நான் அறிந்து கொண்டேன்). இவ்வாறு யஷ்வந்த் சின்கா, முன்னாள் மத்திய நிதியமைச்சர், தான் எழுதிய நூலிலே குறிப்பிட்டிருக்கிறார்.

இது 1998இல் அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி யில் அங்கம் வகித்த போது நடைபெற்ற ஒரு சம்பவம். அதுவும் வருமான வரி வழக்கு குறித்த சம்பவம். அப்போது மத்திய நிதி அமைச்சரை ஜெயலலிதா அவருடைய வீட்டிற்கே அழைத்து உணவளித்து பரிந்துரை கவரையும் கொடுத்தார் என்பதை முன்னாள் மத்திய நிதி அமைச்சரே தன் புத்தகத்தில் குறிப்பிட்டிருக் கிறார்.


தற்போது என்ன நிலை? இதற்கு முன்பு பிரதமர் மன்மோகன் சிங் தமிழகம் வந்த போது, அவரை வரவேற்கச் செல்லாத தமிழக முதல்வர் ஜெயலலிதா தற்போது விமான நிலையத்திற்குச் சென்று இன்றைய பிரதமரை வரவேற்கிறார், வழி அனுப்புகிறார். பதினைந்து நிமிடம் தனித்து உரையாடுகிறார். அதற்குப் பிறகு தான் எழும்பூர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை சார்பாக பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள மனு கொடுத்து, அது பரிசீலனையில் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். வருமான வரித் துறை வழக்கறிஞரும் அதற்கு எதுவும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று பேட்டி அளிக்கிறார்.


நடக்கப்போவது என்ன? பா.ஜ.க. அரசு என்ன செய்யப் போகிறது? ஏற்கனவே பா.ஜ.க.வோடு அ.தி.மு.க. கூட்டணி அமைத்து, பல்வேறு பரிந்துரைகளையும், நிபந்தனைகளையும் கூறி, பா.ஜ.க. ஆட்சி கவிழவே காரணமாக இருந்த படிப்பினையை நினைவிலே கொள்ளப் போகிறதா? பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. உறவினை முறித்துக் கொண்ட அன்று தான் நிம்மதியாக இன்றிரவு தூங்குவேன் என்று கூறிய முன்னாள் பிரதமர் வாஜ்பய் அவர்களின் அறிவுரையை பா.ஜ.க.வும், அதன் பிரதமரும் மனதிலே கொள் வார்களா? இந்த வேடிக்கைகளைப் பொறுத்திருந்து பார்ப்போம்! ’’என்று தெரிவித்துள்ளா

ad

ad