புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூலை, 2014

 காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் நிலுவையில் உள்ள மனுவை காவிரி நடுவர் மன்றம் விசாரிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு பிரச்னையை தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம், கடந்த 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி தனது இறுதி தீர்ப்பை வழங்கியது.



கர்நாடகம் காவிரியில் ஆண்டுதோறும் தமிழகத்துக்கு 192 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட நடுவர் மன்றம், ஆண்டுதோறும் ஜூன் முதல் மே மாதம் வரை மாதந்தோறும் எவ்வளவு தண்ணீர் வழங்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தது.

ஆனால், இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் கேரள அரசுகள் நடுவர் மன்றத்தில் முறையிட்டன. இந்த பிரச்னை தொடர்பாக மூன்று மாநில அரசுகளும் தாக்கல் செய்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இது குறித்து நடுவர் மன்றத்தில் விசாரணை செய்ய முடியாது என்று அப்போது தலைவராக இருந்த என்.பி.சிங் கூறினார்.

இதனால், அந்த மனுக்கள் கடந்த 7 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகின்றன. நடுவர் மன்றம் கடைசியாக 10.7.2007 அன்று கூடியது. இதற்கிடையே, நடுவர் மன்ற தலைவராக இருந்த என்.பி.சிங், 2012 ஆம் ஆண்டில் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு நடுவர் மன்ற தலைவர் பதவி காலியாக இருந்தது.

இந்நிலையில், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பி.எஸ்.சவுகானை காவிரி நடுவர் மன்றத்தின் தலைவராக கடந்த மே மாதம் மத்திய அரசு நியமித்தது. இதையடுத்து, 7 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி நடுவர் மன்ற கூட்டம் டெல்லியில் கடந்த 15ஆம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் கேரள அரசுகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

அப்போது, காவிரி நதிநீர் தொடர்பாக நிலுவையில் உள்ள விளக்க மனுவை விசாரிக்க வேண்டும் என்று தமிழகம் வலியுறுத்தியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடகா, 2007ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு விளக்கம் கோரிய மனுவை விசாரிக்க கூடாது என்றது.

ஆனால், விளக்க மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்ற அனுமதி தேவை என்று காவிரி நடுவர் மன்றம் கூறியதோடு, விளக்க மனுவை விசாரிப்பதற்கான அனுமதியை தமிழகம் பெறவும் அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில், நதிநீர் பங்கீடு தொடர்பாக நிலுவையில் உள்ள மனுவை காவிரி நடுவர் மன்றம் விசாரிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு ஒன்றை இன்று தாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

ad

ad