புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூலை, 2014


இலங்கை போர்க்குற்ற விசாரணைக்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


வெளியுறவு கொள்கையை மாற்றி அமைத்து, இலங்கை போர்க்குற்ற விசாரணைக்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜிடம், டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., நேரில் வலியுறுத்தினார். 

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை, பா.ம.க. இளைஞர் அணி தலைவரும், நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் சமுதாய கூட்டணி ஆலோசகரும், தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் சமுதாய கூட்டணி ஒருங்கிணைப்பாளர்கள் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி தேவசகாயம், டாக்டர் இரா.செந்தில், வக்கீல் க.பாலு ஆகியோர் டெல்லியில் சந்தித்து பேசினர். 

அப்போது சுஷ்மா சுவராஜிடம், அன்புமணி ராமதாஸ் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- 

இலங்கை அரசு வெளிப்படையாகவே சீனாவுடன் கைக்கோர்த்துக்கொண்டு செயல்படுகிறது. சீன பாதுகாப்பு அதிகாரிகளை திரிகோணமலை துறைமுகத்திலும், கச்சத்தீவிலும் நுழைய அனுமதிக்கிறது. இவையெல்லாம் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதற்கான அடையாளங்கள் மட்டுமல்ல. இந்திய வெளியுறவுக் கொள்கை தோல்வியடைந்து விட்டதற்கான ஆதாரங்களும் ஆகும். 

இலங்கையில் நிலையான அரசு நீடிப்பதற்கு அங்கு அமைதி நிலவ வேண்டியது மிகவும் அவசியம் என்று இந்தியா நம்புகிறது. அதுமட்டுமின்றி, இந்திய பெருங்கடலில் பாதுகாப்பு உத்திகளை இந்தியா மேற்கொள்வதற்கும் இலங்கையில் நிலையான அரசு நீடிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். ஆனால், நீதியில்லாமல் அமைதி இருக்க முடியாது என்பதை இந்தியா மறந்துவிட்டது. 

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை கட்டுமானம் என்பது ரகசியம் நிறைந்த, ஆழமில்லாத, நாடாளுமன்றத்தின் மேற்பார்வையில்லாத, ஒரு குழுவினரால் நிர்வகிக்கப்படுவதாக உள்ளது. 

ஜனநாயக நாட்டின் அடிப்படை அம்சங்கள் என்னவோ, அவற்றில் ஒன்று கூட கடைப்பிடிக்கப்படாதது தான் இந்திய வெளியுறவுக் கொள்கை ஆகும். இலங்கை பிரச்சினையில் நிலவும் குளறுபடிகள் தான் இதற்கு சாட்சியமாகும். மத்தியில் புதிதாக பதவியேற்றுள்ள அரசு மிகவும் துரிதமாக செயல்படாவிட்டால், இந்த விஷயத்தில் தேசிய பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்கு மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும். 

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கையை பாகிஸ்தானும், சீனாவும் எவ்வாறு ஆதரித்தன என்பதிலிருந்தே அவற்றுக்கிடையிலான வஞ்சக உறவை புரிந்து கொள்ளலாம். இந்த உண்மைகளையெல்லாம் இந்திய அரசு வெளிப்படையாக ஒப்புக்கொண்டு வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்களைச் செய்யாவிட்டால், நமது எதிரிகளிடமிருந்து இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும். 

இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வழங்கும் அதே நேரத்தில், இந்தியாவின் பாதுகாப்பையும் உறுதி செய்யக்கூடிய நுணுக்கமான வெளியுறவுக் கொள்கையை இந்தியா கடைபிடிக்கவில்லை. மாறாக குறுகிய நோக்கங்களையும், பாரபட்சங்களையும், வணிக நோக்கங்களையும் கொண்ட கொள்கையைத்தான் இந்தியா கடைபிடித்து வருகிறது. 

இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவளிக்கப்போவதில்லை என்ற நிலைப்பாட்டை இந்தியா மீண்டும் எடுத்திருக்கிறது. இது மிகவும் துரதிருஷ்டவசமானது. இலங்கை தொடர்ந்து செய்துவரும் துரோகங்களை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, போர்க்குற்ற விசாரணையை இந்தியா ஆதரிப்பதும், அந்த விசாரணை வெற்றி பெறுவதற்காக ஆக்கபூர்வமான வழிகளில் பங்களிப்பதும் தான் சரியானதாகும். 

வெளியுறவுக்கொள்கையில் மாற்றம் செய்வது பற்றி மத்திய அரசு ஆராய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இந்த மனுவில் குறிப்பிடப்பட்ட அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு இலங்கை தமிழர்களுக்கு நீதி வழங்க வேண்டும்; இலங்கை தீவில் மீண்டும் அமைதியை ஏற்படுத்த வேண்டும்; அதன்மூலம் இந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். 

ad

ad