புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூலை, 2014

நெஞ்சை உறைய வைத்த குமுதினிப் படுகொலை
essayஅலைகளைக் கிழித்தபடி குறிகாட்டுவான் துறையை நோக்கி விரைந்து கொண்டிருந்தது குமுதினி.
நெடுந்தீவுக்கும் குறிகாட்டுவானுக்குமிடையில் சேவையிலுள்ள அரச படகு அது. நெடுந்தீவு மக்கள் தமக்குத் தேவையான
அத்தியாவசிய பொருள்களைக் கொள்வனவு செய்ய, அரச செயலகத்தில் தமது அலுவல்களை நிறைவேற்ற, தமது அன்றாட கடமைக்குச் செல்ல, குழந்தைகளின் தேவைகளைக் கவனிக்க, நோயாளர்கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்குச் செல்ல என்று தமது அன்றாட கடமைகளைச் செய்து மாலையில் வீடு திரும்பும் கனவுடன் இந்தப் படகுப் பயணத்தை மேற்கொள்வர். அன்றைய பயணமும் கூட  இவ்வாறே இடம்பெற்றது. இன்னும் 30 நிமிடத்தில் குறிகாட்டுவானில் இறங்கி விடலாம் என்ற கனவுடன் கலகலப்பாகச் சென்று கொண்டிருந்த மக்களுடன் அசைந்து ஆடி விரைந்து கொண்டிருந்த குமுதினிக்கோ தனக்கு ஒரு பெரிய ஆபத்து வரப் போகின்றது என்ற உண்மை தெரிந்திருக்கவில்லை.
 
அப்போது திடீரென சிறிய படகு ஒன்று ஏழு பேருடன் வந்து அதனை இடைமறித்த போது படகோட்டிகளும் பயணிகளும் என்ன இது கடற்படையின் வழமையான சோதனை நடவடிக்கைதானே என எண்ணிக் கொண்டனர். ஆனால் வந்தவர்கள் கொலைக் கருவிகளுடன் குமுதினியில் ஏறி படகின் பின் அறையில் இருந்த மக்களை முன்பகுதிக்குச் செல்லுமாறு பணித்து ஒவ்வொருவராக மீண்டும் பின் அறைக்கு அனுப்பிய போது தான் அந்த மக்கள் தமக்கு ஏற்படப்போகும் விபரீதத்தைப் புரிந்து கொண்டனர்.
 
பின் அறையில் முதியவர்கள், இளசுகள், சிறுசுகள், குழந்தைகள் என்ற அனைத்து மக்களுமே கண்டகோடரி, கத்தி, கம்பிகள் பொல்லுகளால் மிலேச்சத்தனமாகத் தாக்கப்பட்டனர். பெளத்த தர்மம் இரத்தத்தின் உருவில் ஓடிக்கொண்டிருந்தது. இறந்தவர்களுடன் குற்றுயிராகக் கிடந்தவர்களும் இறந்தவர்கள் போன்று வலியிலும் மெளனமாகக் கிடந்தனர். எல்லோரையுமே அனுப்பி விட்டோம் என்ற திருப்தியில் கொலையாளிகள் தமது படகில் ஏறிச் சென்றுவிட எல்லாவற்றையுமே கவனித்துக் கொண்டிருந்த குற்றுயிராகக் கிடந்த சிலர் படகில் மேல்தளத்துக்குச் சென்று கையில் கிடைத்த துணிகளை எடுத்து உயர்த்திப் பிடித்து அசைத்தனர்.
 
படகு  நீரோட்டத்துடன் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. புங்குடுதீவுக் கரையில் நின்ற சிலர் இதை அவதானித்து படகு ஏதோஆபத்தில் சிக்கிக்கொண்டுள்ளது என்பதைப் புரிந்து கொண்டு விரைந்து செயற்பட்டதில் குமுதினி குறிகாட்டுவானுக்கு எடுத்து வரப்பட்டது. 
 
தகவல் அறிந்த நெடுத்தீவு மக்கள் மட்டுமன்றி குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பெருமளவு மக்கள் குறிகாட்டுவானுக்கும் பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கும் சென்று வேண்டிய உதவிகளை வழங்கினார்கள். 
 
குற்றுயிராய்க் கிடந்த மக்களைப் பாதுகாப்பதில் யாழ்.போதனா வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் அனைவருமே சுறுசுறுப்புடன் செயற்பட்டு அவர்களைச் சாவின் பிடியில் இருந்து மீட்டெடுத்ததை நெடுந்தீவு மக்கள் இன்றும் நன்றியுடன் நினைவில் வைத்துள்ளனர்.
 
அப்போதெல்லாம் புலிகளின் தாக்குதலுக்குப் பதிலடியாக அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்படுவது வழமையாக இடம்பெற்று வந்துள்ளது. அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தின் எதிரொலியாகவே குமுதினிப் படுகொலை இடம்பெற்றதாகவும் தகவல்கள் கசிந்திருந்தன. 
 
இந்தக் கொடூர நிகழ்வு குறித்து உயிர்தப்பியவர்கள் விசாரணையின் போது வாக்கு மூலம் அளித்துள்ளனர். இந்தப் படுகொலையைச் செய்தவர்கள் கடற்படையினர் எனவும் நயினாதீவில் கடமையில் இருந்த சிலர் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் போது தெளிவாக எடுத்துக் கூறப்பட்டது.
 
இது ஒரு திட்டமிடப்பட்ட கொலை என மரண விசாரணைகளின் போது தெரிவிக்கப்பட்டது. விசாரணைகள் இடம்பெற்ற போதும் நீதியான தீர்வு இன்று வரை கிட்டவில்லை. எல்லாமே மறைக்கப்பட்டுவிட்டன. சம்பந்தப்பட்டவர்களுக்கு உயர் பதவிகள் வழங்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
 
தமது உயிர்களை அர்ப்பணித்த இந்த மக்களை ஒவ்வொரு ஆண்டிலும் இன்றைய நாளில் நினைவு கூருகிறார்கள். தமது உறவுகளின் நினைவாக நெடுந்தீவு துறைமுகத்தில் நினைவுத் தூபி ஒன்றை அமைத்து இந்தத் தினத்தில் அங்கு சென்று மலர் தூவி அஞ்சலி செய்கிறார்கள்.
 
இன்று 29 வருடங்கள் உருண்டோடி விட்ட போதிலும் நடந்து முடிந்த மோசமான இந்த நிகழ்வு படுகொலைக்குள்ளானவர்களின் சொந்தங்களை மட்டுமன்றி புலம்பெயர்ந்து வாழும் அனைத்து நெடுந்தீவு மக்களனிதும் இங்குள்ளவர்களினதும் மனங்களில் நிலைத்து நிற்கின்றது. புலம்பெயர்ந்து வாழும் மக்கள் கூட இன்றைய தினம் உயிரிழந்த உறவுகளுக்காக பிரார்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
வெளியிடங்களில் இருந்து வரும் மக்கள் தூபியுடன் கூடிய மண்டபத்தில் தங்கி அதன் புனிதத் தன்மையை மதிக்கத் தவறுவதால் மண்டபம் இடிக்கப்பட்டு தற்போது நினைவுத் தூபி மட்டுமே துறைமுகத்தில் உள்ளது. இதைப் புனித இடமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பிரதேசசபை கூறி வருகின்றது. இந்த நாள் வெறும் நினைவு நாளாக மட்டும் அமையாது தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும்  ஓர்மத்தைத் தரும் நாளாகவும் அமைய வேண்டும் என்பதே அனைத்து மக்களதும் உள்ளக்கிடக்கையாகும்.

ad

ad