புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜூலை, 2014




மிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒவ்வொரு தேர்விலும் சர்ச்சைகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் பஞ்சம் இருப்பதில்லை. அப்படி 2001-ல் தேர்வாணையம் நடத்திய தேர்வுக்கு எதிரான வழக்கில்,  "முறைகேடாக வெற்றி பெற்று தமிழக அரசில் உயர் பொறுப்புகளில் உள்ள 83 அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்யுங்கள்' என்கிற உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு ஜெ. அரசுக்கு பெருத்த நெருக்கடியை ஏற்படுத்தி யிருக்கிறது. டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தப் பட்ட அதிகாரிகள் அனைவருமே மிக முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் என்பதால் கையைப் பிசைந்து கொண் டிருக்கிறது அரசும், தேர்வாணையமும்.

தமிழக அரசின் மாவட்ட வருவாய் அதிகாரி, மாவட்ட கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளர், வணிகவரித்துறையின் துணை ஆணையர், அரசு சார்பு செயலர், கூட்டுறவு துறையின் இணைப் பதிவாளர் உள்ளிட்ட முக்கியப்பதவிகளுக்கான குரூப்-1 தேர்வினை ஜெ. ஆட்சி 2001-ல் நடத்தியது பணியாளர் தேர்வாணையம். மொத்தம் 91 இடங்களுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் முதல்கட்ட தேர்வை எழுதினர். இதில் பிரதான தேர்விற்காக (மெயின் எக்ஸாம்) 910 பேர் தேர் வானார்கள். அந்த மெயின் எக்ஸாமை 2002- பிப்ரவரி-மார்ச்சில் நடத்தியது தேர்வாணையம். இதிலிருந்து 91 நபர்களை தேர்வு செய்து 2004 ஜூன் 6-ந்தேதி ரிசல்ட் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த ரிசல்ட்டை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர் மாதவன், நடராஜன் உள்ளிட்ட 40 பேர். இந்த வழக்குதான் உச்சநீதிமன்றம் வரைபோய், தற்போது அதிரடி தீர்ப்பை பெற்றுத் தந்துள்ளது.

இந்த தேர்வை எழுதிய சீனிவாசன், ""மெயின் எக்ஸாம் எழுதுவதில் சில கண்டிஷன்களை போட்டது தேர்வாணையம். பால்பாயின்ட் பேனா மட்டுமே தேர்வில் பயன்படுத்த வேண்டும். பென்சில், கலர் பென்சில், கலர் பேனா எதையும் விடைத்தாளில் பயன்படுத்தக்கூடாது, குறியீடுகள் இடக்கூடாது, கிராஃப்பில் கூட பால்பாயின்ட் பேனாவைத்தான் பயன்படுத்த வேண்டும். பெயரை கண்ட இடங்களில் எழுதி வைக்கக்கூடாது என பல நிபந்தனைகளை போட்டது தேர்வாணையம். அதாவது, விடைத்தாளை திருத்து பவருக்கு எழுதியவர் யார் என்கிற அடையாளம் தெரியப்படுத்தக் கூடாது என்பதற்காகத்தான் இந்த நிபந்தனைகள். பரவாயில்லையே நேர்மையாக தேர்வை நடத்த தேர்வணையம் நினைக்கிறதே என்று எங்களுக்கெல்லாம் சந்தோஷம். எந்த சூழலிலும் பால்பாயின்ட் பேனா தவிர வேறு எதையும் மறந்து கூட பயன்படுத்தி விடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்தோம்..

அந்த எச்சரிக்கையுடனேயே தேர்வு நாளன்று தேர்வு அறைக்கு சென்றோம். ஆனால் சில பேர் கலர் பேனா, பென்சில் எல்லாம் எடுத்து வந்தனர். தேர்வின் போதும் கலர் கலராக எழுதினார்கள். தேர்வு முடிந்து வெளியே வந்ததும் சிலரிடம் பேசிய போது, என்னுடைய அறையில் 2, 3 பேர்  கலர் பேனாவில் எழுதினார்கள் என்றும், எனக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் பிள்ளையார் சுழி முதல் நிறைய சுழிகளை பேப்பரின் தலைப்பில் போட்டிருந்தார் என்று பலரும் சொல்ல சொல்ல, எங்களுக்கு சந்தேகம் வலுத்தது. 

 ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. தங்கள் பேப்பரை திருத்துபவருக்கு காட்டவே இப்படி அடை யாளத்தை செய்திருக்கிறார்கள் என்பதை நாங்கள் ஊர்ஜிதப்படுத்திக்கொண்டோம். உடனே தேர்வு எழுதிய மறுநாளே, தேர் வாணையத்தின் அப்போதைய சேர்மன் யாசின் அகமதுவுக்கும்  தேர்வு கட்டுப்பாட் டாளர் சந்தியா வி.சர்மா ஐ.ஏ.எஸ்.ஸுக்கும், "தேர்வாணையம் அறிவித்துள்ள நிபந்தனை களுக்கு மாறாக பலரும் பல கருவிகளை பயன்படுத்தியுள்ளனர். மேலும் பலர் குறிப்புகளை உணர்த்த சில குறியீடுகளை பயன்படுத்தியுள்ளனர். தவறு நடப்பதற்கான அறிகுறியாக தெரிகிறது. அதனால்,  நிபந்தனை களுக்கு மாறாக உள்ள விடைத்தாள்களை கண்டறிந்து அவைகளை செல்லாததாக்கி விட்டு, முறையாக உள்ள விடைத்தாளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு தகுதியானவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்' என புகார் கடிதம் எழுதினோம். ஆனால் அது கண்டுகொள்ளப்படவேயில்லை.

இந்த நிலையில்தான், மூன்று, நான்கு மாதங்களில் ரிசல்ட்டை வெளியிட வேண்டிய தேர்வாணையம் 27 மாதங்கள் கழித்து 2004 ஜூனில் ரிசல்ட்டை அறிவித்தது. யார் யாரெல்லாம் நிபந்தனைகளை மீறினார்களோ அவர்களெல்லாம் பாஸ் செய்திருந்தார்கள். இதைக்கண்டு நெஞ்சு பதறியது. உடனே, மாதவன், நடராஜன் தலைமையில் பலரும் இணைந்து தேர்வாணையத்திற்கு எதிராகவும் தேர்வுக்கு எதிராகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு போட்டோம். உடனடியாக ஸ்டே கிடைத்தது. ஆனால், அந்த காலகட்டத்தில் உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அமைவதற்கு எதிராக வழக்கறிஞர்களின் ஸ்டிரைக் நடந்துகொண்டிருந்தது. அதைப் பயன்படுத்தி ஸ்டேவை உடைத்தது தேர்வாணையம். அத்துடன்  அடுத்த 24 மணி நேரத்தில் 91 பேருக்கும் போஸ்டிங் போட்டு பதவியில் உட்காரவும் வைத்தனர். அப்படி உட்கார வைக்கப்பட்டவர்களில் 83 பேரை பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்யுங்கள் என்பதுதான் தற்போதைய தீர்ப்பு'' என்று விவரித்தார்.

"இந்த தீர்ப்பு எப்படி சாத்தியமானது?' என விசாரித்தோம். ஸ்டே உடைக்கப்பட்டதை அடுத்து 91 பேரின் நியமனத்தையும் எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் பாதிக்கப்பட்டவர்கள். இதன் உண்மை தன்மையை அறிய, இரண்டு முறை அட்வகேட் கமிஷனை நியமித்தது உயர்நீதிமன்றம். இந்த கமிஷனுக்கு எந்த ஒத்துழைப்பையும் தேர்வாணையம் தரவே இல்லை. ஆனாலும்  தேர்வில் குளறுபடிகள் நடந்ததற்கான ஆதாரமாக பலவற்றை கண்டறிந்து கோர்ட்டில் சமர்பித்தது கமிஷன். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஜோதிமணி,  ""தேர்வான 91 பேரில் 8 பேரை தவிர மற்ற 83 பேரும் தவறு செய்துள்ளதற்கு ஆதாரமாக பல இண்டிகேஷன்கள் விடைத்தாளில் இருப்பதை அறியமுடிகிறது. தவறு நடந்திருப்பது உண்மை தான். இருந்தாலும் அந்த 83 பேரும்  போஸ்டிங்கில் இருப்பதால் அவர்களை என்ன பண்ணுவது? அதனால், வழக்கு தொடர்ந்த மாதவன், நடராஜன் உள்ளிட்டவர் கள் மீண்டும் எக்ஸாம் எழுத அனுமதிக்கலாம்'' என்று சொல்லி வழக்கை தள்ளுபடி செய்து 2009-ல் தீர்ப்பு தந்தார். 

இந்தத் தீர்ப்பை ஏற்க மறுத்து இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்சில் மேல்முறையீடு செய்தனர் பாதிக்கப்பட்ட மாதவன் உள்ளிட்ட பட்டதாரிகள். நீதிபதிகள் எலிபிதர்மராவ் மற்றும் ஹரிபரந்தாமன் அடங்கிய பெஞ்ச், ""தவறுகள் நடந்திருப்பது பட்டவர்த் தனமாக தெரிகிறது. ஆனால் தவறு செய்தவர்களுக்கு தண்டனை கொடுக்கப்படவில்லை. தவறு செய்தவர்கள் பதவியில் இருக்கிறபோது தவறு செய்யாத மெரிட் பட்டதாரிகள் வேலையில்லாமல் வெளியிலிருப்பது நீதி அல்ல. அதனால் 83 பேரின் வெற்றி செல்லாது. தவறு செய்த 83 பேரையும் டிஸ்மிஸ் செய்யவேண்டும். அடுத்தடுத்து மதிப்பெண் பெற்ற தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும்'' என 2011-மார்ச்சில் பரபரப்பான தீர்ப்பை தந்தது. இந்தத் தீர்ப்பை கொண்டாடி மகிழ்ந்தார்கள் தேர்வெழுதிய பட்டதாரிகள்.

அது தேர்தல் நேரம். நடத்தை விதிகள் அமலில் இருந்தன. அதனால் அப்போதைய தி.மு.க.அரசு இந்த தீர்ப்பை அமல்படுத்த முடியாமலிருக்க, உடனே தேர்வாணையமும் சம்பந்தப்பட்ட 83 அதிகாரிகளும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். பிறகு ஆட்சி மாற்றம் நிகழ்ந்து மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியில் உட்கார, அரசும் தேர்வாணையத்துக்கு ஆதரவாக இவ்வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டது. தேர்வாணையத்தின் சார்பில், இந்தியாவில் அதிக கட்டணம் வாங்கும் மூத்த வழக்கறிஞர்கள் பலரும் ஆஜராகி, ""தேர்வாணையம் நடத்தும் எல்லா தேர்வுகளை யும் தோல்வியடைந்தவர்கள் இப்படித்தான் எதிர்க்கிறார் கள். இதனை அனுமதிக்க கூடாது. 83 பேர் தேர்வில் எந்த தவறும் நடக்கவே இல்லை. கலர் பென்சில்களை கவனக்குறைவாக பயன்படுத்தி விட்டனர். தெரிந்து எந்த தவறையும் இவர்கள் செய்யவில்லை. அதனால், சென்னை உயர்நீதிமன்ற பெஞ்ச் தந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்'' என வாதாடினார்கள்.


கடந்த இரண்டரை வருடங்களாக நடந்து வந்த இந்த வழக்கில் 30-ந்தேதி தீர்ப்பளித்த நீதிபதிகள் அனில்தவே மற்றும் தீபக்மிஸ்ரா, ""பல வண்ண பென்சில்கள் மூலம் விடைத்தாளில் விடைகளை நிரப்பியிருப்பது தேர்வு மதிப்பீட்டாளருக்கு மறை முகமாக தேர்வு எழுதியவரின் அடையாளத்தை தெரிவிப்பதற்கு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இது மோசமான கவனக்குறைவு. இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அடையாள குறியீடுகள் இடம்பெறுவது தேர்வு எழுதியவருக்கு சாதகமாக திருத்துவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும் என்பதை மறுக்க முடியாது. தேர்வு எழுதுபவர்கள் சில நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் என்கிறது தேர்வாணையம். ஆனால், தான் போட்ட நிபந்தனை யையே மீறியவர்களை தேர்வாணையமே தேர்வு செய்திருப்பது எப்படி? விதிகளை மீறுவது தவறான நடத்தைக்கு சமம். தேர்வாணையத்தின் நிபந்தனைகளை பின்பற்றாதவர்கள் அதிகாரிகளாக தேர்வு செய்யப் பட்டால் அவர்கள் சிறந்த அதிகாரிகளாக இருக்க முடியாது. பணியில் சேரும் போதே சட்டவிரோதமாக நடந்து கொள்பவர் அதிகாரியாக நியமிக்கப்பட தகுதியற்றவர். குரூப்-1 தேர்வில் முறைகேடு நடந்திருப்பது உறுதியாக தெரிகிறது. அதனால் 83 பேர் தேர்வை ரத்து செய்த உயர்நீதி மன்றத்தின் உத்தரவு சரியானது தான் என்று தெளிவான தீர்ப்பை தந்திருக்கிறார்கள்.

இந்த தீர்ப்புதான் தற்போது, அரசு நிர்வாகத்தையும் தேர்வாணையத்தையும் கடும் நெருக்கடியில் தள்ளியிருக்க, பதவியில் இருக்கும் 83 பேரும் கலக்கமடைந்துள்ளனர். தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்ய தேர்வாணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது அரசு. தேர்வாணையத்தின் பொறுப்பு சேர்மன் பாலசுப்ரமணியன் இது குறித்து தீவிர ஆலோசனை நடத்தியிருக்கிறார். இந்த வாரத்தில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்யும் பணிகள் தேர்வாணையத்தில் வேகமெடுத்துள்ளன.

இப்படி ஒரு அதிரடி தீர்ப்பு வருவதற்கு காரணமாக இருந்த மாதவனிடம் நாம் பேசிய போது, ""உண்மையும் நீதியும் எப்போதும் தோற்காது என்கிற நம்பிக்கையில் கடந்த 9 வருடங்களாக போராடினோம். எங்கள் நம்பிக்கை வீண் போகவில்லை. நீதியின் மீது மதிப்பு வைத்து தீர்ப்பில் கூறப்பட்டது போல 83 அதிகாரிகளையும் உடனடியாக தமிழக அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும். செய்ய தவறினால் அரசின் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கை தொடர்வோம்'' என்கிறார் அழுத்தமாக.

இந்தத் தீர்ப்பு குறித்து கோட்டையில் உள்ள உயரதிகாரிகளிடம் பேசியபோது, ""குறிப்பிட்ட அந்தத் தேர்வில் சிலர் தவறு செய்திருக்கலாம். ஆனால், 83 பேருமே தவறு செய்தவர்கள் என்று சொல்லிட முடியாது'' என்கிறார்கள்.

ad

ad