புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜூலை, 2014



கா, ஓகோவெனப் பேசப்படும் இலவச ஆடு வழங்கும் திட்டம், எப்படி யெல்லாம் ’பிரமாதமாக’ செயல்படுத்தப் படுகிறது என்பதை முன்னரே நக்கீரனில் ஆதாரத்துடன் செய்திகளை வெளியிட்டு இருக்கிறோம். அதன் தொடர்ச்சியாக, திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்துள்ள கூத்தை வாசகர்களுக்கு முன்வைக்கிறோம்.

இலவச ஆடு வழங்கும் திட்டத்தின் படி, ஊராட்சி மன்றத் தலைவர் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை அமைத்து, வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் மற்றும் விதவையரைத் தேர்வுசெய்யவேண்டும்; அந்தந்தப் பகுதி யில் நடக்கும் ஆட்டுச் சந்தைகளுக்கு பயனாளிகளை அழைத்துச் சென்று பத்தா யிரம் ரூபாய் மதிப் பில் ஒரு கிடா வுடன் மூன்று ஆடுகளையும் வாங்கி, அந்த ஆடுகளுக்கு அரசு முத்திரை டோக் கன் போட்டு பயனாளிகளிடம் கொடுக்கவேண் டும். அதன்மூலம் அந்த பயனாளி தன் வாழ்வாதாரத் தை உயர்த்திக் கொள்வார் என் கிறது அரசு உத் தரவு. ஆனால், இதன் விதிமுறை களையே இதர மாவட்டங்களைப் போலவே காற்றில் பறக்கவிடுகிறார்கள், திண்டுக்கல் மாவட்டத்தில். 

மாவட்டத்தின் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள விராலிப் பட்டி ஊராட்சியில் இருக்கும் பத்து ஊர்களைச் சேந்த 122 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இந்தப் பயனாளிகளை பத்து நாட்களுக்கு முன்பு நிலக்கோட்டை சந்தைக்கு அழைத்துச்சென்று, ஆடுகளையும் வாங்கிக் கொடுத்தார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் இலவச ஆடுகள் பெறுவதற்கு தகுதி இல்லாதவர்களாகவும், பணத்திற் காக ஆளுங்கட்சியைச் சேர்ந்த வசதிபடைத்த ர.ர.க்களே பயனாளியாக இடைத்தரகர்கள் மூலம் பணம் பெற்றுள்ளனர் என்றும் தகவல் கிடைக்கவே விசாரணையில் இறங்கினோம்.

""ஏழைபாழைகளுக்கெல்லாம் இலவச ஆடு குடுக் கலைங்க. வசதியானவங்களுக்குத்தான் குடுத்திருக்காங்க. இந்த ஊர்ல கிளைச்செயலாளர் தங்கராஜ் உள்பட ஆறு பேருக்கு ஆடு கொடுத்தாங்க. இதில் ஆளுங்கட்சியைச் சேந்த சிலர் வசதியானவங்க என்பதால, ஆடு வளக்கிறவங்ககிட்ட ஒரு நாளைக்கு ஒரு ஆட்டுக்கு 100 ரூபாய் வீதம் வாடகைக்குப் பேசி, கூலி ஆளுங்க மூலமா வேன்ல ஆடுகளை சந்தைக்கு ஏத்திட்டுப்போயி, அந்த கூலி ஆட்களையே ஆட்டுக்காரங்க மாதிரி செட்டப் செஞ்சி, ஆட்டுக்கு பத்தாயிரத்தை வாங்கிகிட்டு வந்துட்டாங்க; திட்டத்துல சொன்னதுபடி இவங்க ஆடு வாங்கவும் இல்லை, வளக்கவும் இல்லை''’என்று அதிர்ச்சியடைய வைக்கிறார், எருமநாயக்கன்பட்டியைச் சேந்த துரைராஜ்.

விராலிப்பட்டியைச் சேர்ந்த சில ர.ர.க்கள், ’""எங்க ’ஊராட்சிமன்றத் தலைவரான தனலட்சுமி சின்னமுத்துவின் ஊரான குரும்பபட்டியில் 26 பயனாளிகளுக்கு ஆடு கொடுத்தாங்க. இதில் 10 பேரு அவங்க சொந்தக்காரங்க. இவங்களுக்கு ஏற்கனவே பசுமைவீடு கொடுத்திருக்கு. நிலபுலனும் உள்ளவங்கதான். ஆனா, அவங்களுக்கு ஆடுகளைக் குடுத்திருக்காங்க. துணைத்தலைவரான ராஜாவும் அவரோட ரத்த பந்தங்களான அஞ்சு பேருக்கு ஆடு களை ஒதுக்கிக் குடுத்திருக்காரு. இதுபோல பதவியில உள்ள கட்சிக்காரங்க பலரும் அவுங்கவுங்க வீட்டுக்காரம்மா பேர பய னாளினு போட்டு, பணத்தை வாங்குறதுங் கிற நோக்கத்திலதான் செயல்பட்டு இருக்காங்களே தவிர, அரசாங்கத் திட்டப்படி இலவச ஆடு வாங்கி வளர்த்து பயனடையணும்கிற நோக்கம் எல்லாம் இல்லைங்க.  இதுல ஆட்டுக்குக் கொட்டகை போடுறதுக்கு இரண்டாயிரம் தருவாங்க. அந்தப் பணத்தை வாங்கி உங்ககிட்ட குடுக்கிறோம். அதுவரைக்கும் ஆட்டுக் காதுல அரசு முத்திரை டோக்கன் இருக்கட்டும்னு ஆட்டுக் காரங்ககிட்ட பேரம்பேசி வச்சிருக்காங்க. இங்க பாத்தாலே தெரியும், மந்தை ஆடுகளோடு, டோக்கன் போட்ட ஆடுகளும் இருக் கிறதைப் பாக்கமுடியும். பக்கத்துல பண்ணப்பட்டி அ.தி.மு.க. கிளைப் பிரதி நிதி பால்பாண்டி, அவரு மனைவி ராஜம்மாளைப் பயனாளியா சேர்த்து ஆடு வாங்கியதோட, வாட கைக்கு சந்தைக்கு ஏத்தி வந்த ஆடுகளுக்கு உரிமை யாளரைப் போல நடந்து கிட்டு, கால்நடைத்துறை உதவி இயக்குநர் வினிதா விடம் பணத்தை வாங்கி, பலருக்கும் பட்டுவாடா செய்துருக்காரு. இப்படி விதிமுறைகளை மீறியதைக் கண்டுக்காம இருக்கிறதுக்காக, அதிகாரிங்களுக்கும் கணிசமான தொகை போகுது; ஆனா, ஏழை சனத்துக்கு திட்டம் போய் சேரல''’என்று ஆதங்கப்பட்டனர். 

ஆனால், குற்றச்சாட்டுக்கு உள்ளான பண்ணைப்பட்டி அ.தி.மு.க. கிளை பிரதிநிதியான பால்பாண்டி, ""எங்க ஊர்ல ஒதுக்கப்பட்ட ஏழு பயனாளிகளுடன் சந்தைக்குப் போனப்போ, ஆட்டு உரிமை யாளரா வந்து நில்லுனு கட்சி நிர்வாகிங் களும் தலைவரும் சொன்னதனால நானும் அப்பிடி நின்னு டாக்டருகிட்ட பணம் வாங்கி பலருக்குக் குடுத்தேனே தவிர, அந்த ஆடுங்க எல்லாம் யாருதுன்னு தெரி யாது''’என்றார் வெளிப் படையாக. 

விராலிப்பட்டி அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் ஜெயாவோ, ""இலவச ஆடுகள் திட்டம் முறையாக பயனாளிகளுக்கு போய்ச்சேரலைனு யூனியன் கூட்டத்துல நான் பேசினவுடனே, நான் சொன்னதால 5 பேருக்கு ஆடு கொடுத்திருக்காங்கனு யூனியன் சேர்மன் மோகன் சொன்னாரு. அத உடனே நான் மறுத்தேன். யாரு அந்த அஞ்சு பேருனு நான் கேட்டதுக்கு இதுவரைக்கும் பதில் சொல்லல. என் பேரைச் சொல்லி, இலவச ஆடுகளை யாருக்கு தலைவர் குடுத்தார்னு தெரியலை. எனக்குக் கெட்ட பேரை உண்டாக்கின தலைவரைப் பத்தி எங்க மந்திரி (நத்தம் விஸ்வநாதன்)கிட்ட புகார் குடுத்திருக்கேன்''’என வேறொரு கதையைச் சொன்னார். 

இந்த மோச டிக் குற்றச்சாட்டு தொடர்பாக, ஊராட்சி மன்றத் தலைவர் தன லட்சுமியிடம் விளக்கம் கேட்க, பலமுறை முயன் றும் அவரை செல்ஃபோனில் பிடிக்க முடிய வில்லை. அவர் சார்பில் நம்மிடம் பேசிய அவரின் கணவர் சின்ன முத்து, ""’100 சத விகிதம் வறுமைக் கோட்டிற்கு கீழ உள்ள மக்களுக்குதான் இலவச ஆடு குடுத்திருக்கோமேதவிர, இதில எந்த ஒரு தவறும் நடக்கல. ஒன்றிய கவுன்சிலர் பரிந்துரைப்படியும் பயனாளிகளுக்கு ஆடு குடுத்திருக்கோம். வேணும்னே எதிர்க்கட்சிக்காரங்க இப்படி பொய்யா குற்றம்சாட்டுறாங்க'' என்றார் ஒரேயடியாக. 

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலத்திடம் பிரச்சினை பற்றிக் கேட்டபோது, ’’""வாடகைக்கு ஆடுகளை ஏற்றிவந்து பணம் வாங்கிச் சென்றார்கள் என்பதை நீங்கள் சொல்லித்தான் கேள்விப்படுகிறேன். ஊராட்சி உதவி இயக்குநர் தலைமையில் ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்யச் சொல்கிறேன். விதிமுறையை மீறி அந்த ஊராட்சி நிர்வாகம் செயல்பட்டு இருந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்''’என்றார் ஆட்சியர்.

அரசுத் திட்டத்தால், உரியவர்களுக்குப் பலன் கிடைக்க வேண்டும். இதில் மாவட்ட நிர்வாகம் என்ன செய்கிறது, பார்ப்போம்.  

ad

ad