புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஆக., 2014


ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு கடந்த வந்த பாதை
 
கடந்த, 17 ஆண்டுகளாக நடந்து வந்த, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் செப்டம்பர் 20ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று பெங்களுரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா அறிவித்திருக்கிறார்.

கடந்த 1996ல், ஜெயலலிதா, 1991 முதல், 1996 வரை முதல்வராக இருந்த காலத்தில், ஊழல் செய்து, 66.65 கோடி ரூபாய் சொத்து சேர்த்தார் என, லஞ்ச ஒழிப்பு போலீசார், குற்றம் சாட்டி வழக்கு பதிவு செய்தனர்.
ஜெயலலிதாவின், 36, போயஸ் கார்டன் வீடு, 31, போயஸ் கார்டன் அலுவலகம், ஐதராபாத், திராட்சை தோட்டம், கொடநாடு எஸ்டேட், சிறுதாவூர் பங்களா உட்பட பல இடங்களில், சோதனை நடத்தப்பட்டது.
ஜெயலலிதா வீட்டில் வைரம், தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் கைப்பற்றப்பட்டு, சென்னை ரிசர்வ் வங்கி கருவூலத்தில் வைக்கப்பட்டன. பின், பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டு, விதான சவுதாவில் வைக்கப்பட்டுள்ளன.

ஜெயலலிதா, ஊழலில் சம்பாதித்த பணத்தை, 32 கம்பெனிகளில் முதலீடு செய்தார். இதற்கு, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பினாமிகளாக உள்ளனர் என, ஊழல் தடுப்பு போலீசார் குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளனர். ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டு, பின் ஜாமீனில் வந்தனர்.
இவ்வழக்கு, சென்னை நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த போது, தமிழகத்தில் ஆட்சி மாறி, மீணடும் ஜெயலலிதா முதல்வரானார்.

அப்போது, தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகன், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு, தமிழகத்தில் நடந்தால், நேர்மையான தீர்ப்பு கிடைக்காது. வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். சுப்ரீம் கோர்ட், வழக்கை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியது.

கடந்த, 2004ல், பெங்களூருவுக்கு வழக்கு மாற்றப்பட்ட போதும், மூன்று ஆண்டுகளாக விசாரணை நடக்கவில்லை. தமிழிலிருந்த வழக்கு ஆவணங்களை, ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதில் மூன்றாண்டுகள் ஆகி விட்டன. பின், அரசு தரப்பு வக்கீலாக ஆச்சார்யா நியமிக்கப்பட்டார்.

பெங்களூரு, பரப்பன அக்ரஹாராவிலுள்ள, 25வது கூடுதல் நகர சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில், ஜெயலலிதா ஆஜராகி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு விடையளித்தார். விசாரணை நடந்து கொண்டிருந்த போதே, அரசு தரப்பு வக்கீல் ஆச்சார்யா, வழக்கில் தொடர முடியாது என, 2012 ஆகஸ்ட், 16ம் தேதி ராஜினாமா செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி பாலகிருஷ்ணா, பதவி காலம் முடிந்து ஓய்வு பெற்றார். அரசு வக்கீலாக பவானி சிங் நியமிக்கப்பட்டார். பின், நீதிபதியாக ஜான் மைக்கேல் குன்ஹா நியமனம் செய்யப்பட்டார். வழக்கை, தினமும் விசாரித்து, விரைவில் முடிக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ஆஜராகி, கேள்விகளுக்கு பதிலளித்தனர். சசிகலா, இளவரசிக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால், மொழி பெயர்ப்பாளராக, வக்கீல் ஹரீஷ் செயல்பட்டார்.

ஜெயலலிதா தரப்பு வக்கீலாக குமாரும், சசிகலா தரப்பு வக்கீலாக மணி சங்கரும், சுதாகரன், இளவரசி சார்பில் அமீத் தேசாயும், வழக்கில் வாதிட்டனர். குமார், 25 நாட்கள், மணிசங்கர், 10 நாட்கள், அமீத் தேசாய், எட்டு நாட்கள் வாதிட்டனர்.

தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகன் தரப்பில், வக்கீல்கள் குமரேசன், நடேசன், பாலாஜி சிங், சரவணன் ஆகியோர், வாதத்தை எழுத்து பூர்வமாக நீதிபதியிடம் கொடுத்தனர். அரசு வக்கீல் பவானி சிங், தன் இறுதி வாதத்தை நேற்று முன் வைத்தார்.

இதையடுத்து, நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா, “வழக்கின் தீர்ப்பு, வரும் செப்.,20ம் தேதி கூறப்படும், அன்று குற்றம்சாட்டப்பட்டுள்ள, ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும்,” என, உத்தரவிட்டுள்ளார்

ad

ad