புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஆக., 2014

ரோஜர் கோப்பை டென்னிஸ் தொடர்:

சோங்கா, அக்னிஸ்கா சம்பியன்

கனடாவின் டொரான்டோ நகரில் நடைபெற்ற ரோஜர் கோப்பை டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவில் பிரான்ஸின் வில்பிரைட் சோங்காவும், மகளிர் பிரிவில் போலந்தின் அக்னிஸ்கா ரத்வன்ஸ்காவும் சம்பியன் பட்டம் வென்றனர்.

ஆடவர் இறுதி ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் - சோங்கா மோதினர். சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் பெடரர் மூன்றாவது இடத்திலும், சோங்கா 13-வது இடத்திலும் உள்ளனர். பரபரப்பான இறுதி ஆட்டத்தில் சோங்கா 7-5, 7-6(3) என்ற செட் கணக்கில் பெடரருக்கு அதிர்ச்சி தோல்வி அளித்து சம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த பருவகாலத்தில் சோங்கா வென்றுள்ள முதல் ஏடிபி சம்பியன் பட்டம் இது. ஒட்டு மொத்தமாக அவர் 11 பட்டங்களை வென்றுள்ளார்.
இந்த போட்டித் தொடரில் சோங்கா தொடர்ந்து 4 ஆட்டங்களில் முன்னணி வீரர்களை வீழ்த்தியுள்ளார். 3-வது சுற்றில் முதல் நிலை வீரர் ஜோகோவிச்சை வீழ்த்திய சோங்கா, காலிறுதியில் அண்டி முர்ரேவை தோற்கடித்தார். தொடர்ந்து அரையிறுதியில் கிரிகோரியை வீழ்த்தினார். இப்போது இறுதி ஆட்டத்தில் முன்னணி வீரர் பெடரரை தோற்கடித்துள்ளார்.
வெற்றி குறித்து சோங்கா கூறியது:
இந்த போட்டியில் நான் முன்னணி வீரர்கள் பலரை வீழ்த்தியது எனக்கு மிகவும் பெருமை அளிக்கிறது. நான் இத்தகைய வெற்றிகளைப் பெறுவேன் என்று எவரும் நினைத்திருக்க மாட்டார்கள். இந்த வெற்றிகள் எனது நினைவில் நீங்கா இடம் பெற்றிருக்கும். ரோஜர் பெடரர் நான் மிகவும் மதிக்கும் வீரர். அவரை என்னால் வெல்ல முடிந்தது சாதனைதான். முன்னணி வீரர்களுக்கு எதிராக என்னால் சிறப்பாக விளையாட முடியும் என்ற புதிய நம்பிக்கையை அளித்துள்ளது என்றார் சோங்கா.
அக்னிஸ்கா சம்பியன்
மகளிர் பிரிவில் போலந்தின் அக்னிஸ்கா ரத்வன்ஸ்கா - முன்னாள் முதனிலை வீராங்கனையான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் ஆகியோர் இறுதி ஆட்டத்தில் மோதினர். இதில் அக்னிஸ்கா 6-4,6-2 என்ற நேர் செட் கணக்கில் மிக எளிதாக வென்று சம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இது அவரது 14 வது ஒற்றையர் பட்டமாகும்.
25 வயதாகும் அக்னிஸ்கா கடைசியாக கடந்த செப்டம்பரில் சியோல் டென்னிஸ் போட்டியில் சம்பியன் பட்டம் வென்றார். இந்த ஆண்டு தொடக்கத்தில் இண்டியன்வெல்ஸ் போட்டியில் இறுதி ஆட்டம்வரை முன்னேறி தோல்வியடைந்தார்.
வெற்றி குறித்து அக்னிஸ்கா கூறியது: இந்த நாள் எனக்கு சாதகமாக அமைந்தது என்றே கூற வேண்டும். எனவேதான் வெற்றி எளிதில் வசமானது. இந்த வெற்றி உத்வேகம் அளிக்கிறது. அடுத்து நடைபெறவுள்ள அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியிலும் சிறப்பாக விளையாடுவேன் என்றார்.
ரோஜர் கோப்பை மகளிர் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா - ஸிம்பாபாப்வேயின் காரா பிளாக் ஜோடி தோல்வியடைந்தது. எர்ரானி - வின்சி ஜோடியிடம் 7-6, 6-3 என்ற செட் கணக்கில் சானியா இணை வீழ்ந்து கோப்பையை நழுவவிட்டது.

ad

ad