புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஆக., 2014

இறுதி வாதம் மற்றும் விசாரணை முடிந்தது :
ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில்
செப்டம்பர் 20ல் தீர்ப்பு!


ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் செப்டம்பர் 20ல் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி குன்ஹா தெரிவித்துள்ளார். விசாரணை முடிவடைந்ததை அடுத்து நீதிபதி குன்ஹா தீர்ப்பு தேதியை அறிவித்தார்.

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா, வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்துகளை கம்பெனிகளில் முதலீடு செய்ய மற்ற குற்றவாளிகளான சசிகலா, சுதாகரன், இளவரசியுடன் இணைந்து கூட்டு சதி செய்ததாக குற்ற அறிக்கையில் போலீசார் கூறியுள்ளனர். அதை நீக்கும்படி 4 பேரும் மனு செய்தனர். இதை விசாரித்த நீதிபதி, மனு மீதான தீர்ப்பை வழக்கின் இறுதி தீர்ப்புடன் சேர்த்து வழங்குவதாக கடந்த 20ம் தேதி அறிவித்தார்.

இந்நிலையில், குற்றவாளிகள் சார்பில் வக்கீல் பரணி குமார் கடந்த 22ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த புதிய மனுவில், ‘கூட்டுசதி தொடர்பான தீர்ப்பை வழங்கிய பின், இறுதி தீர்ப்பை வழங்க தனி நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட வேண்டும். மேலும், இம்மனு மீதான விசாரணை முடியும் வரை தனி நீதிமன்றத்தில் நடந்து வரும் மூல வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கோரினார்.

இது நீதிபதி ஜாவத் ரஹிம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் அமித் தேசாய் ஆஜராகி, ‘கூட்டு சதி குற்றச்சாட்டில் ஆதாரமில்லை. அதை நீக்கும்படி நாங்கள் வைத்த கோரிக்கையை விசாரித்த தனி நீதிமன்றம், தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. அதை எதிர்த்து நாங்கள் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரணைக்கு ஏற்க வேண்டும். அதுவரை மூல வழக்கிற்கு தடை விதிக்க வேண்டும்’’ என்றார்.

அரசு சிறப்பு வக்கீல் பவானி சிங் வாதிடுகையில், ‘‘17 ஆண்டுகளுக்கு முன் வழக்கு தொடரப்பட்டது. கூட்டுசதி தொடர்பான குற்ற அறிக்கையை ரத்து செய்யக்கோரி குற்றவாளிகள் 21.10.1997ல் சென்னை தனி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீடு மனுவை, 1999ல் குற்றவாளிகள் வாபஸ் பெற்றனர். தற்போது தனி நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து தீர்ப்புக்கு காத்திருக்கும் நேரத்தில் குற்ற அறிக்கையை நீக்க கோரும் மனுவை தாக்கல் செய்து வழக்கின் போக்கை திசை திருப்ப முயற்சிக்கின்றனர். இந்த மனு விசாரணைக்கு ஏற்றதல்ல. ஆகவே, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். மூல வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கும் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்’’ என்றார்.

அதே கருத்தை தி.மு.க சார்பில் ஆஜரான வக்கீல் சரவணனும் வலியுறுத்தினார். இருதரப்பு வாதங்களை கேட்ட பின் நீதிபதி ஜாவத் ரஹிம் பிறப்பித்த உத்தரவில், ‘‘17 ஆண்டுகளுக்கு முன் தாக்கல் செய்த குற்ற அறிக்கையை இப்போது நீக்கும்படி கேட்பது என்ன நியாயம்? உங்கள் வாதம் சரியாக இருந்தாலும் கூட, அதை தனி நீதிமன்றத்தில் தான் வைத்திருக்க வேண்டும்.

உங்கள் மனு மீதான தீர்ப்பை வழக்கின் இறுதி தீர்ப்புடன் வழங்குவதாக தனி நீதிமன்ற நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் தவறில்லை. ஆகவே, மூல வழக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தார். இதனையடுத்து இன்று இறுதி வாதம் மற்றும் விசாரணை முடிந்ததால் செப்டம்பர் 20ல் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி குன்ஹா தெரிவித்துள்ளார்.

ad

ad