புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஆக., 2014


சர்வதேச காணாமல்போனோர் தினம்: வவுனியாவில் இன்று அணிதிரளுமாறு தமிழ்க் கட்சிகள், அமைப்புகள் அழைப்பு 
"சர்வதேச காணாமல்போனோர் தினமான இன்று வவுனியாவில் நடைபெறவுள்ள காணாமல்போன உறவுகளைக் கண்டுபிடித்துத் தருமாறு வலியுறுத்தும்
ஜனநாயகப் போராட்டத்திலும், பொதுக் கூட்டத்திலும் அனைவரும் கலந்துகொண்டு தமிழர் உணர்வைச் சர்வதேசத்துக்கு வெளிப்படுத்துவோம்'' - என்று தமிழ்க் கட்சிகளும், சிவில் அமைப்புகளும் அழைப்பு விடுத்துள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய தமிழ்க் கட்சிகளும், காணாமல்போனோரைத் தேடியறியும் குழு மற்றும் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் பிரஜைகள் குழுக்களும் மேற்படி அழைப்பை விடுத்துள்ளன.
'எங்கள் பிள்ளைகள் எங்கே? எங் கள் உறவுகள் எங்கே? அரசே பதில் சொல்' என்ற தொனிப்பொருளில் இன்று வவுனியாவில் நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தையும், பொதுக் கூட்டத்தையும் காணாமல்போன உறவுகளைத் தேடும் குடும்பங்களின் இணையம் ஏற்பாடு செய்துள்ளது.
இன்று காலை 9 மணிமுதல் பிற்பகல் ஒரு மணிவரை வவுனியா நகரசபை மண்டபத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும். ஒரு மணியிலிருந்து பிற்பகல் 2 மணிவரை வவுனியா நகரசபை மண்டபத்திலிருந்து வவுனியா பஸ் நிலையம் வரை காணாமல்போனோரைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி ஜனநாயகப் போராட்டம் நடைபெறும். அதன் பின்னர் அங்கிருந்து பேரணியாக மாவட்ட செயலகம் வரை செல்லும் காணாமல்போனோரின் உறவுகள், காணாமல்போனவர்கள் தொடர்பில் இலங்கை அரசு பொறுப்புக் கூறவேண்டும் என வலியுறுத்திய ஜனாதிபதிக்கான தமது மகஜரை மாவட்ட செயலகத்திடம் கையளிப்பர்.
காணாமல்போனோரைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி வவுனியாவில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கும் ஜனநாயகப் போராட்டத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் முழு ஆதரவு வழங்குகின்றது என்றும், இதில் அனைவரும் கலந்துகொண்டு தமிழர் அவலங்களை வெளியுலகத்திற்கு எடுத்துக்கூற வேண்டும் என்றும் அக்கட்சிகளின் பொதுச் செயலாளர்களான மாவை சேனாதிராஜா எம்.பி., செ.கஜேந்திரன் ஆகியோர் நேற்று 'சுடர் ஒளி'க்குத் தெரிவித்தனர்.
அதேவேளை, ஜனநாயக மக்கள் முன்னணியும் காணாமல்போனோர் தினமான இன்று வவுனியாவில் நடைபெறும் நீதிக்கான போராட்டத்திற்கு முழு ஆதரவை வழங்குகின்றது என்றும், அனைவரும் இதில் கலந்துகொள்ளவேண்டும் என்றும் அக்கட்சியின் ஊடக செயலாளர் சி.பாஸ்கரா நேற்று 'சுடர் ஒளி'க்குத் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், எஸ்.வினோநோகராதலிங்கம் ஆகியோர் வவுனியா போராட்டம், பொதுக் கூட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையில்,
"வடக்கில் பல ஆயிரக்கணக்கானவர்கள் காணாமலாக்கப்பட்டுள்ள நிலை யில் இந்தத் தினத்தில் அவர்களின் நிலை குறித்துச் சர்வதேசத்தின் கவ னத்தை ஈர்க்கும் வகையில் நாம் அமைதியான முறையில் எமது உணர்வுகளை வெளிக்கொண்டு வரவேண்டும்.
காணாமல்போன உறவுகளைக் கண்டுபிடிக்கக்கோரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒட்டுமொத்த ஆதரவை வழங்குகிறது. காணாமல்போன உறவுகளின் சொந்தங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அமைதியான முறையில் இடம்பெறும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு எமது உறவுகளின் நிலை என்ன என்று கண்டறிய சர்வதேசத்திடம் வலியுறுத்த வேண்டும்'' - என்றனர்.
இதேவேளை, காணாமலாக்கப் படுதலுக்கெதிராக இன்று வவுனியாவில் நடைபெறும் ஜனநாயகப் போராட்டத்திலும், பொதுக்கூட்டத்திலும் காணாமல்போனோரின் உறவுகள், சிவில் சமூகத்தினர் அனைவரும் கலந்துகொண்டு நீதிக்காக அச்சமின்றி குரல் கொடுக்கவேண்டும் என்று காணாமல்போனோரைத் தேடியறியும் குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
வவுனியா, மன்னார், முல்லைத் தீவு ஆகிய மாவட்டங்களின் பிரஜைகள் குழுக்கள் இன்று வவுனியாவில் நடைபெறும் பொதுக்கூட்டம், ஜனநாயகப் போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையில்,
"இலங்கையில் யுத்தம் முடிவ டைந்த பின்னரும் காணாமல்போ னோர் பிரச்சினை தீர்க்கப்படாததோடு காணாமல்போகும் சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. காணாமல்போனோரை மீட்பதிலும் அவர்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுவதிலும் அரசு தொடர்ந்து அசமந்தப் போக்கையே காட்டிவருகிறது.
இலங்கை அரசின் இந்தச் செயற்பாட்டை உலகின் கவனத்திற்கு எடுத்துச்செல்வதற்கு இன்று 30ஆம் திகதி அனைத்துல காணாமல்போனோர் தினத்தை முன்னிட்டு காணாமல்போன குடும்ப அங்கத்தவர்களை ஒருங்கிணைத்து சமூக அமைப்புக ளால் வவுனியாவில் முன்னெடுக்கப்படுகின்ற நீதிக்கான சாத்வீக ஊர்வலங்களிலும் பொதுக் கூட்டங்களிலும் அனைவரும் கலந்துகொண்டு தமது மனிதநேயத்தை வெளிப்படுத்த முன்வரவேண்டும்" - என்று தெரிவித்தன.

ad

ad