புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஆக., 2014


ஈழத்து நகைச்சுவைக்கலைஞர் ஐசக் இன்பராஜா ஜேர்மனி நாட்டில் காலமானார்.அனுதாபங்கள்.

வாழ்வின் பெரும் பகுதியைக் கலைவாழ்வில் அர்ப்பணித்த
அரும்பெரும் கலைஞர் “லூஸ் மாஸ்ரர்” ஐசக் இன்பராஜா ஜேர்மனி நாட்டில் ஜூலை 29ம் திகதி காலமானார்.
மேடை நாடகம், வில்லுப்பாட்டு என்பவற்றில் நகைச்சுவையால் மக்கள் மனங்களை வென்ற ஓர் உன்னதமான கலைஞராக ஐசக் இன்பராஜா விளங்கினார்.
ஈழத்தின் திரைப்பட இயக்குனர் நிரமலா புகழ் அருமைநாயகம் அவர்களின் இயக்கத்தில் பல நாடகங்களில் கலைஞர் ஐசக் இன்பராஜா நடித்துள்ளார்.
“லூஸ் மாஸ்ரர்” என்கின்ற நகைச்சுவையின் மூலம் ஈழத்தின் பல பகுதிகளிலும் புகழ் பெற்று விளங்கினார்.
ஆடி, பாடி நடிப்பதில் வல்லவரான “லூஸ் மாஸ்ரர்” ஐசக் இன்பராஜா அவர்களுக்கு ‘மாப்பிள்ளை தேவை’ என்ற நாடகம் மிகப்பெரும் புகழை ஈட்டிக்கொடுத்திருந்தது.
செய்ய வேண்டும்…செய்யவேண்டும்….உடனடியாச் செய்ய வேண்டும்…..இப்பவே செய்ய வேண்டும்……….அவசரமாச் செய்ய வேண்டும்………..என கலைஞர் ஐசக் இன்பராஜா அவர்கள் மேடையில் பாடி நடித்தமை நினைவுக்கு வருகின்றது.
இந்த நாடகத்தில் நிர்மலா திரைப்பட இயக்குனர் அருமைநாயகம் அவர்களும் நடித்திருந்தார்.
நகைச்சுவை நடிப்பு என்பது இலகுவானது அல்ல. இந்தத் துறையில் மேதைகளாக விளங்கியவர்கள் இது பற்றி விளக்கியிருக்கிறார்கள்.
கலைஞர் ஐசக் இன்பராஜா அவர்களுக்கு இயற்கையாகவே நகைச்சுவைப்பாத்திரம் அமைந்து விட்டது.
அவர் வேடமிட்டு மேடைக்கு வந்துவிட்டால் ரசிகர்களின் சிரிப்பொலி அடங்குவதற்கு மிக நீண்ட நேரம் எடுக்கும்.
ஈழத்து நகைச்சுவையாளர்கள் என்று பார்க்கின்ற போது, தம்பி கொழும்பில் புகழ் குமார்.தனபால், முகத்தார் – எஸ்.ஜேசுரட்ணம், நகைச்சுவை இரட்டையர் டிங்கிரி – சிவகுரு, சக்கடத்தார் – ராஜ், கோமாளிகள் – மரிக்கார் – ராம்தாஸ், உப்பாலி – செல்வசேகரன், அப்புக்குட்டி – ராஜகோபால், அண்ண ரைட் – கே.எஸ்.பாலச்சந்திரன் என கலைஞர்கள் பெயர்கள் நினைவுக்கு வருகின்றன.
இவர்களில் குமார்.தனபால், முகத்தார் – எஸ்.ஜேசுரட்ணம், நகைச்சுவை இரட்டையர் டிங்கிரி – சிவகுரு, சக்கடத்தார் – ராஜ், உப்பாலி – செல்வசேகரன், அண்ண ரைட் – கே.எஸ்.பாலச்சந்திரன் ஆகியோர் காலமாகிவிட்டார்கள்.
இவர்கள் ஒவ்வொருவருடைய நடிப்பும் – நகைச்சுவையும் வித்தியாசமானவை.
இவர்களிலிருந்து ஐசக் இன்பராஜா அவர்கள் மிகவும் வித்தியாசப்பட்டிருந்தார்.
வில்லிசை கலைஞர் சின்னமணி அவர்களின் கலைவாணர் வில்லிசைக் குழுவிலே நீண்ட காலமாக விகடக்கலைஞராக வலம் வந்தார்.
மிக யதார்த்தமான நகைச்சுவைத்துணுக்குகளை வில்லிசையிலே கதையோடு கூறிவிடுவார்.
புலம்பெயர்ந்து ஜேர்மனி நாட்டில் வாழ்ந்து வந்த இவர் ஜேர்மனி உட்பட பல்வேறு நாடுகளில் தனது நகைச்சுவை விருந்தை வழங்கி வந்துள்ளார்.
பிரான்ஸில் ஆர்.ரி.எம் பிறதர்ஸ் தயாரித்த முகத்தார் வீடு என்னும் திரைப்படத்தில் ஐசக் இன்பராஜா நடித்துள்ளார்.
ஜேர்மனி நாட்டிலிருந்து தாயகம் திரும்பி சொந்த ஊரிலேயே வாழ்வதற்கு அவர் முடிவுசெய்து அதனை முறைப்படி ஜேர்மனி அரசுக்கு அறிவித்துவிட்டதாக அவரது நண்பர்கள் தகவல் வழங்கியுள்ளனர்.
ஆகஸ்ட் முதலாம் திகதி அவருடைய பயணம் தாயகத்துக்கு அமையவிருந்தது.
அவரது ஒரே மகனின் திருமணத்தை நடாத்தி வைப்பதற்காகவும் அவர் தாயகம் திரும்ப இருந்தார் என்றும் கூறப்பட்டது.
கலைஞர் ஐசக் இன்பராஜா அவர்களின் இழப்பு ஈழத்துக் கலையுலகிற்குப் பேரிழப்பே ஆகும். அன்னாரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

ad

ad