புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஆக., 2014


காஸாவுக்கு ஆதரவாக காத்தான்குடியில் பாரிய கண்டனப் பேரணி - ஊவா தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டி?


பலஸ்தீன் காஸா நகரில் இஸ்ரேலியர்களால் முஸ்லிம்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அராஜகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள் என எவ்வித பாகுபாடுமின்றி அங்கு இடம் பெறும் மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டித்து வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையின் பின்னர் பாரிய கண்டனப் பேரணி ஒன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடிப் பிரதேசத்தில் இடம்பெற்றது.
காத்தான்குடி பிரதான வீதிக்கருகாமையில் அமைந்துள்ள காத்தான்குடி முஹைதீன் மெத்தைப் பெரிய ஜூம்ஆப் பள்ளிவாயலிலிருந்து பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.எம்.ஏ.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற இம்மாபெரும் கண்டனப் பேரணியில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக், காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் அஸ்பர், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மூபீன், நகர சபை உறுப்பினர்கள், காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் காழி நீதிபதி மௌலவி எஸ்.எம்.எம்.அலியார் (பலாஹி) உட்பட ஆயிரக் கணக்கான பொது மக்கள், இளைஞர்கள், சிறுவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர்.
இக்கண்டனப் பேரணியில், கலந்து கொண்டோர், அரபு உலகமே கண்களைத் திற, காஸாவில் குழந்தைகளைக் கொள்வதை நிறுத்து, சியோனிசப் பயங்கரவாதத்தின் அழிவுக்குப் பிரார்த்திப்போம், காஸாவுக்காக பிரார்த்திப்போம், பலஸ்தீனுக்குச் சுதந்திரம் போன்ற பல்வேறு தமிழ், சிங்கள, ஆங்கிலப் பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
பேரணி இறுதியில், காஸா நகரில் இஸ்ரேலியர்களால் முஸ்லிம்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டித்தும், அதனை நிறுத்தக் கோரியும், இலங்கை அமெரிக்கத் தூதரகம், முஸ்லிம் நாடுகளுக்கான தூதுவராயலயங்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு அனுப்புவதற்கான மகஜர் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் காத்தான்குடிப் பிரதேச செயலகம் முன்பாக வைத்து கையளிக்கப்பட்டது.
இப்பாரிய கண்டனப் பேரணி, காத்தான்குடி முஹைதீன் மெத்தைப் பெரிய ஜூம்ஆப் பள்ளிவாயலிலிருந்து ஆரம்பமாகி காத்தான்குடிப் பிரதேச செயலகம் வரை சென்றமை குறிப்பிடத்தக்கது.
பேரணி இறுதியில், இஸ்ரேரல் நாட்டுக் கொடி தீ மூட்டி எரிக்கப்பட்டது. கண்டனப் பேரணி இடம்பெற்ற பகுதிகளில் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் குவிக்கப்பட்டிருந்தனர்.

ad

ad