புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2014






செப்டம்பர் 18ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ள கோவை, நெல்லை, தூத்துக்குடி மேயர் பதவிகளுக்கு அ.தி.மு.க. வேட்பாளர் தேர்வு, அக்கட்சியில் பல தரப்பினருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. 

கோவை மேயர் பதவியிலிருந்து செ.ம.வேலுச்சாமி விலகியதும்(?), அந்தப் பதவியைப் பிடிக்க மலரவன் அணி, வேலுச்சாமி அணி, எஸ்.பி.வேலுமணி அணி மூன்றுமே கடுமையான முயற்சியில் இறங்கின. வேலுச்சாமியின் ஆதரவாளரான கிழக்கு மண்டலத் தலைவர் ஜெயராமன் பகீரதப் பிரயத்தனம் செய்துபார்த்தார். ஆனால், எந்த அணியிலும் சிக்காதவர் எனப் பெயரெடுத்துள்ள ராஜ்குமாருக்குதான் வாய்ப்பு கிடைத்தது.

செ.ம.வேலுச்சாமியின் இடத்தைப் பிடித்த காரணத்துக்காகவே, வேலுச்சாமி கோஷ்டியால் எதிராகப் பார்க்கப்படுகிறார். சில நாட்களுக்கு முன்னர்கூட, கோவைக்கு ரூ.263 கோடி ஒதுக்கியதற்காக ஜெ.வுக்கு நன்றி தெரிவித்து வைக்கப்பட்ட பேனரில், ராஜ்குமாரின் பெயரை வேலுச்சாமி கோஷ்டியினர் கிழித்து எறிந்தனர். வேட்பாளர் அறிவிப்புக்கு முந்தைய கடைசிநேரம் வரை, ராஜ்குமாரைப் பற்றி புகார் மேல் புகார் அனுப்பியபடி இருந்தது செ.ம. தரப்பு. 

செ.ம.வேலுச்சாமியின் பதவிவிலகலை அடுத்து நடந்த ஒரு மாமன்றக் கூட்டத்தில், வார்டு பிரச்சினைகள் பற்றிப் பேசினார் தி.மு.க. கவுன்சிலர் மீனா லோகநாதன். உடனே அவரை சஸ்பெண்ட் செய்வதாக பொறுப்பு மேயர் லீலாவதி அறிவிக்க, அப்போதே குறுக்கிட்ட ராஜ்குமார், "வார்டு பிரச்னைகளைப் பற்றிப் பேசியதற்காக சஸ்பெண்ட் செய்வது சரியான முறை இல்லை. இதை மாமன்றத்தில் பேசாமல் வேறு எங்கு போய்ப் பேசுவது? உடனே சஸ்பெண்டை வாபஸ் வாங்கவேண்டும்'’ எனப் பேசினார். அதைக் குறிப்பிட்டு ராஜ் குமாருக்கு எதிராகப் புகார் அனுப்பியும், செ.ம. தரப்புக்கு பலன் கிடைக்கவில்லை. கடந்த தி.மு.க. ஆட்சியில் மாமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ராஜ்குமார், மூன்றாவது முறையாக இப்போது கவுன்சிலராக இருக்கிறார்; மாநகராட்சி யின் வடக்கு மண்டலத் தலைவரும்கூட. கோவை கணபதி பேருந்துநிலையப் பகுதி, இவருடைய குடும்பத்துக்கே சொந்த மானதாக இருந்துள்ளது. மெட்ரிக் பள்ளி ஒன்றை நடத்திவரு கிறார். கொங்கு வேளாளக் கவுண்டர் சாதியைச் சேர்ந்தவர். ’அம்மாவின் வளர்ச்சி’ என்ற தலைப்பில் ஜெ. பற்றி பிஎச்.டி. ஆய்வும் செய்துவருகிறார். அதிர்ந்துகூடப் பேசாதவர் எனப் பெயர் எடுத்திருக்கும் ராஜ்குமார் மேயர் பதவிக்கு வந்தால் நல்லதுதான் என்கின்றனர். 

தூத்துக்குடியில் மேயராக இருந்த சசிகலாபுஷ்பம் மாநிலங்களவை எம்.பி. ஆக, இருபதுக்கும் மேற்பட்டவர்கள் அந்த இடத்துக்குப் போட்டியிட்டனர். 16-ம் வார்டு கவுன்சிலர் மெஜிலாவுக்காக சசிகலாபுஷ்பமும் முன்னாள் மீன்வளவாரியத் தலைவர் அமிர்தகணேசனின் மனைவி ராஜேஸ்வரி, வ.உ.சி. கல்லூரி பேராசிரியரான சரோஜா இருவருக்காக அமைச்சர் சண்முகநாதனும் தீவிர முயற்சி செய்தனர். மாவட்ட மகளிரணிச் செயலாளர் குருத்தாய் விண்ணரசிக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியனும் முயன்று பார்த்தார். ஆனால் வென்றதோ முன்னாள் கவுன்சிலர் அந்தோணி கிரேசி.

ள்ளூரில் பெரிய செல்வாக்கு இல்லாவிட்டாலும், முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தொடங்கி ஓ.பன்னீர் என மேல்மட்ட செல்வாக்கு இவருக்கு அதிகம். ஆக.22-ல் மதுரை ஜெ.பாராட்டுவிழாவில், விண்ணரசி, கிரேசி இருவரையும் ’மேயர்’ நேர்காணலுக்காக சென்னைக்கு வரும்படி தெரிவித்துள்ளார் ஓ.பி. நேர்காணலின்போது விண்ணரசி, கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடி 10ஆவது வார்டில் அந்தோணிகிரேசி தன் மகனை சுயேட்சையாகப் போட்டியிடவைத்து, அ.தி.மு.க. வேட்பாளரைத் தோற்கடித்தார் என கூறியுள்ளார். கிரேசியின் முறை வந்தபோது, ""1984ஆம் ஆண்டு தருவைகுளம் பொதுக்கூட்டத்துக்கு ’அம்மா’ வந்தபோது, அவங்க வந்தது முதல் கிளம்பியதுவரை நான்தான் கூட இருந்தேன்''’ என்றதுடன், அப்போதைய புகைப்படங்களையும் காட்டியுள்ளார். இந்தத் தகவல்கள் போயஸ் தோட்டத்துக்கு அனுப்பப்பட, வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் கிரேசி. 

நெல்லை வேட்பாளர் புவனேசுவரி, எம்.ஏ., பிஎச்.டி. முடித்தவர். 1994-ல் அ.தி.மு.க.வில் சேர்ந்தவர், ஜெயலலிதா கைதாகி சிறையில் இருந்தபோது, நெல்லையப்பர் கோயிலில் மண் சோறு சாப்பிட்டு, அப்படியான முன்மாதிரியை ஏற்படுத்தியவர். 96-2001 தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தனி ஆளாக நெல்லை ஜங்சன் பேருந்துநிலையத்தில், பேருந்து மீது ஏறிநின்று திடீர்ப் போராட்டம் நடத்தியதில் ஒரே நாளில் பிரபலம் ஆனார். ஜெயலலிதாவுக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு ரத்துசெய்யப்பட்டதைக் கண்டித்து கோட்டையில் திடீர் உண்ணாவிரதம் நடத்த முயன்றது, ஜெயலலிதாவை மரியாதைக்குறைவாகப் பேசியதாக நடிகை குஷ்புவின் காரை மறித்தது என புவனேசுவரியின் போராட்டங்களுக்கு விளம்பர வெளிச்சம் எக்கச்சக்கம்! பரிந்துரை இல்லை என புவனேசுவரி தரப்பில் கூறப்பட்டாலும், கட்சியின் மா.செ. முத்துக்கருப்பன், புறநகர் மா.செ. முருகையாபாண்டியன், அமைச்சர் ஓ.பன்னீர் ஆகியோரின் பலமான ஆதரவு இவருக்கு உண்டு என்கிறார்கள், ர.ர.கள். கடந்த வாரம் சென்னையில் ஜெயலலிதா தலைமையில் நடந்த மா.செ. முருகையா பாண்டியனின் மகன் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக அவர் சென்றபோது, புவனேசுவரியும் போயஸ்தோட்டம் சென்றுள்ளார். ஜெ.விடம் தனியாகப் பேச வாய்ப்பு கிடைக்க, அப்போதே புவனேசுவரியின் வாய்ப்பு உறுதியாகியுள்ளது. 

செப்.1 அன்று காலையிலேயே நெல்லை ஜங்சன் சந்திப்பிள்ளையார் கோயிலில் சாமிகும்பிட்டு, மாவட்ட முன்னாள், இந்நாள் நிர்வாகிகளுடன் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டார், புவனேசுவரி. தூத்துக்குடியிலோ கிரேசிக்கு எதிராக சமுதாயரீதியாக அதிருப்தி தெரிவித்து, இந்து முன்னணி பெயரில், சுவரொட்டிகள் ஒட்டியிருக்கிறார்கள். 

மனுத்தாக்கல் முடியும்வரை மாறாமல் இருக்குமா, இந்த வேட்பாளர் பட்டியல்?

ad

ad