புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 செப்., 2014


அரசியல் இல்லாத ஆயுதம்தான் புலிகளை அழித்தது! 25 ஆண்டுகள் கழித்து வரதராஜ பெருமாள்!
வரதராஜ பெருமாள், ஈழ அரசியல் அறிந்தவர்களுக்கு மறக்க முடியாத பெயர். இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை ராஜீவ் காந்தி அமுல்படுத்திய நேரத்தில் வட கிழக்கு மாகாணத்தின் முதல்வராக நியமிக்கப்பட்டவர்.
புலிகளின் கொலைப் பட்டியலில் அவர் இடம்பெற்றதாகச் சொல்லப்பட்ட நிலையில் வரதராஜ பெருமாள் அங்கிருந்து தப்பினார். எங்கே இருக்கிறார் என்பதே தெரியாமல் இருந்த சூழலில் அவரைச் சென்னையில் சந்தித்த ஜூனியர் விகடன் நிருபருக்கு அவர் வழங்கிய செவ்வி வருமாறு, 
இத்தனை ஆண்டுகள் எங்கேதான் இருந்தீர்கள்?
11 வருடங்கள் ராஜஸ்தானிலும் பத்து வருடங்கள் டெல்லியிலும் இருந்தேன். இலங்கையில் இருந்திருந்தால் இப்போது நான் இருந்திருக்க மாட்டேன். ராஜீவ் ஒப்பந்தத்துக்கு ஆதரவாக இருந்ததால், என்னைக் கொல்வதும் இந்தியாவை அடிப்பதும் ஒன்று என புலிகள் கருதினார்கள். தலைமறைவாக இருந்ததில் எந்தத் தவறுமில்லை. அது என்னுடைய விருப்பமும்கூட. இந்தியாவின் பாதுகாப்பில் இருந்ததைப் பெருமையாகதான் கருதுகிறேன்.
நான்கு சுவற்றுக்குள் இத்தனை ஆண்டுகளை எப்படி கடந்தீர்கள்?
அதுவும் ஐந்தாறு ஆண்டுகளுக்குதான். அப்போது தொழில்கூட செய்ய முடியாத சூழல். அதனால் டெல்லி பல்கலைக்கழத்தில் சட்டம் படித்தேன். நான் படிக்கப் போனதுகூட பாதுகாப்புத் துறை தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஒவ்வொரு நாளும் சட்டக் கல்லூரிக்குப் போய் வந்தேன். இந்த காலத்தில் இந்திய மற்றும் உலக பொருளாதாரத்தைப் படித்தேன். அதுபற்றி 'நாடுகளுடைய பொருளாதார கணக்கு’ என்ற புத்தகத்தையும் எழுதினேன். 2009-ம் ஆண்டுக்குப் பிறகு சூழல் மாறிவிட்டது.
புலிகள் வீழ்ச்சிக்குக் காரணம்?
அரசியல் இல்லாத ஆயுதம்தான் அவர்களை அழித்தது. வெறுமனே ஆயுதங்களை மட்டுமே நம்பி விட்டார்கள். உலக அரசியல் மாற்றங்கள், இந்திய உபகண்டத்தில் நடந்த அரசியல் போக்குகள், உறவுகள் ஆகியவற்றைப் புலிகள் சரியாகக் கணக்கிட்டிருந்தால், அதற்குத் தக்கப்படி தங்களையும் மாற்றியமைத்து கொண்டிருந்தால் தமிழர்களுக்குப் பெரும் நன்மையை செய்திருக்க முடியும்.
பிரபாகரன் மரணத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
யுத்தம் தவிர வேறு ஒன்றுக்கும் புலிகள் தயாராக இல்லை. தமிழர்களுக்குக் கிடைத்த எல்லா சந்தர்ப்பங்களையும் பிரபாகரன் கிடைக்கவிடாமல் செய்து, 'தமிழ் ஈழத்தைப் பெற்றுத் தருவேன்’ என்ற நம்பிக்கையை ஊட்டினார். கடைசியில் எதையும் செய்து கொடுக்காமல் போய்விட்டார். தமிழ் மக்கள் நம்பியதற்குப் பிறகும் கடைசியில் அறுவடை ஒன்றுமில்லாமல் போய்விட்டது.
நல்ல உழவனுக்கு அழகு எவ்வளவு அறுவடை செய்தான் என்பதுதான். எவ்வளவு திறமையாக உழுதான் என்பது அல்ல. உழுததற்கும் மேலும் உழுது ஒரு நெல் மணியையும் எடுக்க முடியவில்லை என்றால் என்ன பயன்?
இந்தியா ஆதரவோடுதானே இலங்கை இறுதியுத்தம் நடைபெற்றது?
யாரையும் புலிகள் விட்டு வைக்காததால் எல்லோரும் புலிகளை எதிரிகளாகக் கருதினார்கள். புலிகளின் ஊடாக, ஒரு அரசியல் தீர்வை ஏற்படுத்த எல்லா நாடுகளும் முயற்சித்தன. அது பலன் அளிக்காததால் அத்தனை நாடுகளும், 'புலிகள் இருக்கும் வரை எதுவும் செய்ய முடியாது’ என நினைத்து ஒன்றுபட்டுவிட்டன.
இலங்கையில் பிரச்சினை என்றால் அது இந்தியாவைத்தானே பாதிக்கும்? 'நாங்கள் பிரிவினைக்கு ஆதரவு அளிக்க மாட்டோம்’ என இந்திராவும் ராஜீவும் மீண்டும் மீண்டும் சொன்னார்கள். நாங்கள்தான் தவறாகக் கற்பனை செய்துகொண்டோம். இந்தியா கண்ணைக்கட்டி கையைப்பிடித்து தமிழ் ஈழத்தைப் பெற்றுத் தந்துவிடும் என்பது எங்களின் கற்பனை.
இறுதிப் போரின்போது 'எதிர்தாக்குதல் ஆயுதங்களை நாங்கள் வழங்கவில்லை. தற்காப்பு ஆயுதங்கள்தான் கொடுத்தோம்’ என்று இந்தியா சொன்னது. ஒன்றுமே கொடுக்காவிட்டால் இலங்கை அரசு, பாகிஸ்தானோடு அல்லது சீனாவோடு சேர்ந்திருக்கும்.
ஸ்ரீபெரும்புதூருக்கும் முள்ளிவாய்க்காலுக்கும் தொடர்பு உண்டுதானே?
முடிச்சு போடுவது தவறு. காகம் உட்கார பனம்பழம் விழுந்த கதை இது. ராஜீவ் கொலைக்கும் முள்ளிவாய்க்காலுக்கும் அறிவியல் பூர்வமாகப் பார்த்தால் சம்பந்தம் இல்லை.
ராஜீவ் கொலைக்குப் பிறகும்கூட இந்தியா உட்பட முக்கிய நாடுகள் எல்லாம் இலங்கைப் பிரச்சினையைத் தீர்க்க முயன்றன. நோர்வே எடுத்த முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவு அளித்தது. புலிகள் எதற்கும் இடமளிக்கவில்லை. புலிகள் இருக்கும் வரையில் எந்த அரசியல் தீர்வையும் தொடங்கக்கூட முடியாது என்பதால் புலிகளை முடித்துவிட வேண்டும் என உலகம் முழுவதும் தீர்மானித்தன.
உலக நாடுகளின் ஆதரவு இல்லாமல் குறிப்பாக இந்தியாவின் ஆதரவு இல்லாமல் புலிகள், தாக்கு பிடிக்கவே முடியாது. புலிகள் வேறு இயக்கங்களை அழித்தார்கள். கொன்றார்கள். அதனால் ஏனைய இயக்கங்களும் புலிகளை அழிக்க ஒன்றாக இருந்தன. இப்படி பல காரணங்கள்தான் புலிகளை அழித்தது.
ராஜீவ் கொலையோடு முடிச்சு போடுவது சரியில்லை.

ad

ad