புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 செப்., 2014


தடை விதிப்பதால் அப்பாவி தமிழர்கள்கூட வரமுடியவில்லை!- புலிகள் தடை தீர்ப்பாயத்தில் விசாரணை தொடக்கம்
தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வந்தது. 2013-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இரண்டு ஆண்டுகள் தடையை ஐந்து ஆண்டுகளாக நீட்டித்துச் சட்டத் திருத்தம் செய்தது. அந்த அடிப்படையில், இந்த ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகள் மீதான தடை ஐந்து ஆண்டுகள் என்று அறிவிக்கப்பட்டது.
அந்தத் தடையை நீக்கக் கோரி, தன்னையும் ஒரு தரப்பாகத் தீர்ப்பாய விசாரணையில் சேர்க்க வேண்டும் என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மனுத்தாக்கல் செய்தார்.
தீர்ப்பாயத்தின் நீதிபதி ஜி.பி.மிட்டல் முன்னிலையில், டெல்லியில் செப்டம்பர் 3-ம் தேதி வைகோ மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது வைகோ தனது வாதங்களை எடுத்து வைத்தார்.
நான் விடுதலைப் புலிகளின் முழு ஆதரவாளன். இலங்கையைத் தளமாகக் கொண்டு இயங்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு, இந்தியாவில் ஆதரவாளர்களும், அனுதாபிகளும், பிரதிநிதிகளும் இருக்கிறார்கள் என்று தடை ஆணை கூறுகிறது. நான் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசினேன் என்பதற்காக, பொடா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, 19 மாதம் சிறையில் இருந்திருக்கிறேன். இன்னமும் அந்த வழக்கு முடியவில்லை. தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
2010-ம் ஆண்டு விடுதலைப்புலிகளை நான் ஆதரித்துப் பேசினேன் என்பதற்காக, இதே சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் 13-ம் பிரிவின் கீழ், என் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு, தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. 2010-ம் ஆண்டில் அமைக்கப்பட்ட தீர்ப்பாய நீதிபதி, விக்ரம்ஜித் சென் தனது இறுதித் தீர்ப்பில், 'மறுமலர்ச்சி தி.மு.க விடுதலைப் புலிகள் ஆதரவு இயக்கம்’ என்று குறிப்பிட்டிருந்தார். நான் அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளராக இருக்கிறேன். எனவே, என்னை இந்தத் தீர்ப்பாய விசாரணையில் ஒரு தரப்பாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இலங்கைத் தீவில் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அங்கு வாழ முடியாமல் உலகின் பல நாடுகளுக்கு ஈழத்தமிழர்கள் அடைக்கலம் தேடிச் செல்கிறார்கள். ஏழரைக் கோடித் தமிழர்கள் வாழுகின்ற தமிழ்நாட்டுக்கு ஈழத் தமிழர்கள் வருகிறார்கள். 2010 வரை புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று யாரையும் தமிழகத்தில் கைது செய்யவில்லை.
இந்த வாதத்தை நான் ஒவ்வொரு வழக்கிலும் முன்வைத்து வருவதால் 2010-க்குப் பிறகு மத்திய அரசின் வழிகாட்டுதலுடன் தமிழக கியூ பிரிவு போலீசார், தஞ்சம் தேடி வரும், ஈழத் தமிழர்களை அவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று காவல் துறை பொய் வழக்குப் போட்டுச் சிறையில் அடைக்கிறது. அதனால், ஈழத் தமிழர்களுக்கு நீதி மறுக்கப்படுகிறது.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் கூறியுள்ள ஷரத்துக்களின்படி விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தடை செய்திருப்பது அபத்தமானது. அந்தச் சட்டத்தில் கூறியுள்ளதுபோல, இந்திய இறையாண்மைக்கோ, ஒற்றுமைக்கோ அவர்களால் எந்த ஆபத்தும் தீங்கும் இல்லை. தமிழீழ தாயகம்தான் அவர்களின் இலட்சியம். இலங்கையில் வடக்கு, கிழக்கு என்ற பூர்வீகப் பகுதியைத்தான் அவர்கள் கேட்கிறார்கள்.
அதற்கு ஆதரவாக தந்தை செல்வாவின் வட்டக்கோட்டை தீர்மானம், மாவீரர்கள் தினத்தில் பிரபாகரன் உரையாற்றும் போது அவருக்கு பின்னால் இருக்கும் தமிழீழம் 'லோகோ’வில் காட்டப்படும் நிலப்பரப்பு அடையாளங்களையும் ஆவணமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளேன். இந்தியாவில் ஒரு அங்குல மண்ணைக்கூட அவர்கள் கேட்கவில்லை. ஆனால், இந்தியாவோ தமிழீழம் என்பது தமிழ்நாட்டையும் சேர்த்துதான் என்கிறது.
உலகம் முழுவதும் ஈழத் தமிழர்கள், தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் வாழும் இடங்களை எல்லாம் சேர்த்தா தமிழீழம் என்கிறார்கள். புலிகள் மீது தடைபோட இந்திய அரசு சொல்லும் வாதம் அடிப்படையிலேயே அபத்தமானது, பிழையானது. ஈழத் தமிழர்களுக்குக் கேடு செய்யும் நோக்கத்தோடுதான் தடை கொண்டு வரப்பட்டுள்ளது.
தீர்ப்பாயம் மேற்கொள்ளும் விசாரணையில் புலிகள் அமைப்பின் நிர்வாகிகள் யாரும் ஆஜராகவில்லை. எனவே, என்னை ஒரு தரப்பாக ஆஜராக அனுமதிக்க வேண்டும்'' என்று வைகோ தனது வாதங்களை எடுத்து வைத்தார்.
மத்திய அரசு வழக்கறிஞர் சஞ்சய் ஜெயின், ''வைகோ நல்ல நோக்கத்தோடு போராடியிருக்கலாம். ஆனால் அவர் விடுதலைப்புலிகளின் அமைப்பில் பொறுப்பாளராகவோ, உறுப்பினராகவோ இல்லை. எனவே, அவரை ஒரு தரப்பாக ஏற்கக் கூடாது. அப்படி நீங்கள் அவருக்கு அனுமதி அளிப்பதாக இருந்தால், கடந்த தீர்ப்பாயங்களில் எவ்வகையான அனுமதி கொடுக்கப்பட்டதோ அதுபோன்ற அனுமதி கொடுக்கலாம்'' என்று கூறினார்.
நீதிபதி ஜி.பி.மிட்டல், ''வைகோவை ஒரு தரப்பாக இந்த விசாரணையில் சேர்க்க முடியாது. ஆனாலும், அவர் இந்த அமர்வு விசாரணையில் பங்கு ஏற்கவும், வாதங்களை முன்வைக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது. புலிகள் தடை மீதான தீர்ப்பாய விசாரணை செப்டம்பர் 26, 27 தேதிகளில் சென்னையில் நடைபெறும்'' என்று அறிவித்தார்.
சென்னை விசாரணை சூடு கிளப்பும்!

ad

ad