புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 செப்., 2014


முல்லைத்தீவில் இராணுவத்திடமிருந்து காணியை மீட்க போராடியவர் திடீர் மரணம்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில்  படையினர் நிலை கொண்டிருக்கும் தன்னுடைய காணியை தன்னிடமே வழங்குமாறு கோரி வந்த உரிமையாளர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.
அவர் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்ததாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலத்தை படைமுகாமிற்கு முன்னால் வைத்து, அவரின் உறவினர்கள் எதிர்ப்பு போராட்டம் ஒன்றிணை நேற்றைய தினம் முன்னெடுத்துள்ளனர்.
குறித்தசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
புதுக்குடியிருப்பு மாத்தளன் வீதியில் விடுதலைப் புலிகள் காலத்தில் இயங்கி வந்த பொன்னம்பலம் வைத்தியசாலை 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் படைமுகாமாக மாற்றப்பட்டது. இதற்காக பொன்னம்பலம் வைத்தியசாலை காணியுடன் சேர்த்து பொதுமக்களின் காணிகளும் படைமுகாமிற்காக எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுமக்களுடைய காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் பலதடவைகள் கோரிக்கை விடுத்து வந்த போதும் அவை விடுவிக்கப்படாத நிலையில் இருந்து வருவதுடன், விடுதலைப் புலிகள் அந்தப் பகுதியை பயன்படுத்தினர் என படையினர் தொடர்ச்சியாக காரணம் கூறி வருகின்றனர்.
குறித்த படைமுகாம் அமைந்துள்ள பகுதியில் கனகசபை சிங்கரட்ணம் என்பவரின், காணியும் நான்கு வீடுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தன்னுடைய காணிகளை மகள்களுக்கு சீதனமாக வழங்கி விட்டதாகவும், தன்னுடைய காணியையும் வீட்டையும் தன்னிடமே வழங்குமாறும் அவர் பல தடவைகள் படையினரிடம் கேட்டு வந்ததாகவும், எனினும் அவ்வாறு வழங்க மறுத்த படையினர் அந்தக் காணி அரசுடமையாக்கப்பட்டு விட்டதாக கூறியதாகவும்  உறவினர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை தன்னுடைய வீட்டை பார்ப்பதற்கு அனுமதிக்குமாறு படையினரிடம் சென்று  கேட்டுள்ளார். அதற்கமைவாக படையினர் அவருடைய வீட்டை பார்க்க அனுமதித்ததாகவும் ,பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து மிகுந்த கவலையுடன் அவர் காணப்பட்டதாகவும் கூறும் உறவினர்கள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை திடீரென சுகயீனமுற்று மரணமடைந்ததாகவும் கூறினர்.
இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலத்தை இறுதியாக அவருடைய வீட்டில் சில மணிநேரம் வைப்பதற்கு உறவினர்கள் நேற்றையதினம் படையினரிடம் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் அவ்வாறு அனுமதிக்க முடியாது என படையினர் மறுத்து விட்டனர்.
பின்னர் நேற்றையதினம் பிற்பகல் 2 மணியளவில் அவரது சடலம் இறுதிக் கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்பட்ட போதும், உறவினர்கள் மீண்டும் அனுமதி கேட்டுள்ளனர். அதற்கும் அனுமதி மறுத்த படையினர் படைமுகாமைச் சுற்றி படையினரை நிறுத்தி பாதுகாப்பு முன்னேற்பாடு செய்திருந்தனர்.
மேலும் அனுமதியை வழங்க உறுதியாக மறுப்பு தெரிவித்து விட்டனர். இதனால் இறந்தவரின் சடலத்தை படைமுகாமின்  வாயிலில் வைத்த உறவினர்கள் சடலத்திற்கு முன்பாக இருந்து ஒப்பாரியிட்டு அழுது, கேட்டபோதும் படையினர் அனுமதி வழங்க மறுத்துள்ளனர். இதனையடுத்து ஏமாற்றமடைந்த உறவினர்கள் சடலத்தை அங்கிருந்து தகனத்திற்காக எடுத்துச் சென்றனர்.
மேற்படி இறுதிச் சடங்கில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோதராதலிங்கம் கலந்து கொண்டிருந்ததுடன், படையினரிடம் அவர் அனுமதியும் கேட்டிருந்தார். அவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ad

ad