புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 செப்., 2014


இலங்கையால் கூலிக்கு அமர்த்தப்பட்டு கும்மாளம் போடுகின்றனர் எவ்வளவு தான் கோடி கோடியாகக் கூலி அள்ளிக் கொட்டினாலும் உண்மைகளின் முன்னே அதர்மம் தோற்றுப் போய் விடும் என்பது தான் வரலாறு.  
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தால் நியமிக்கப்பட்ட சர்வதேச விசாரணைக்குழுவின் இறுக்கமான முன்நகர்வுகள்,

இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் என்பன தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வேளையில் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தமிழ்தேசியக் கூட்டமைப்பை அழைத்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
இந்த இரு விடயங்களுமே இலங்கை அரசைப் பொறுத்த வரையில் மிகக் கசப்பான நகர்வுகளாகும்.இலங்கையின் அரச தரப்பினர் நாட்டின் இறைமை, வெளியார் தலையீடு, உள்ளக விசாரணைகளில் சர்வதேச நிபுணர்களின் ஆலோசனைகள் என வெவ்வேறு முகமூடிகள் போட்டுக் கொண்டுள்ளனர். எனினும் எவையயல்லாம் நடந்தேற வேண்டுமோ அவையெல்லாம் ஒரு நேர் கோட்டில் முன் சென்ற வண்ணமே உள்ளன. சர்வதேச அளவில் இலங்கை தனது நியாயம் தவறிய போக்குகள் காரணமாக நம்பிக்கை இழந்து கொண்டிருக்கும் அதே வேளையில் சிங்கள மக்கள் மத்தியிலும் இலங்கை அரசு தொடர்பான நம்பிக்கையீனம் அதிகரித்துள்ளது. உலக அளவில் இலங்கை தனிமைப்படுத்தப்பட்டு விடுமோ என்ற அச்சம் சிங்கள மக்கள் மத்தியில் மெல்ல மெல்லப் பரவ ஆரம்பித்துள்ளது. ஜனாதிபதியும் அவரது பட்டாளமுமே காட்டி நிற்கும் வீரதீர விம்பம் உடைந்து சிதறும் நிலை உருவாகி வருகிறது. இந்த வீரதீர மாயையைக் கலைந்து போக விடாமல் காப்பதற்கு என இப்போது கூலிக்கு மாரடிக்கும் ஒரு கும்பல் களமிறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இலங்கையில் இடம்பெற்ற பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்ள இந்திய ஜனதாக்கட்சி என்ற தனிநபர் கட்சியின் தலைவர் சுப்பிரமணிய சுவாமி வந்திருந்தார். அவர் இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களில் ஒருவராகவும் இந்திய அரசின் பிரதிநிதியாகவும் தன்னைக் காட்டிக் கொண்டார்.
இலங்கை அரசும் அரச ஊடகங்களும் அப்படி ஒரு மாயையை பிரபலப்படுத்தும் முனைப்புடன் புனைந்தன. ஆனால் அவர் வெறும் விம்பம் மட்டுமே என்பதை சுப்பிரமணிய சுவாமியையும் மீறி கூட்டமைப்பினர் நரேந்திரமோடியைச் சந்தித்ததன் மூலம் அம்பலமாகியுள்ளது.
சுப்பிரமணிய சுவாமி மூக்குடைபட்டு மூச்சுத்திணறி விட்ட நிலையில் அடுத்தவர் ஒருவர் இப்போது இலங்கை அரசால் களமிறக்கப்பட்டுள்ளார். அவர் தான் பிரபல மனித உரிமைச் செயற்பாட்டாளர் என இலங்கை அரசால் பிரபலப்படுத்தப்படும் கெள­ஷால். இலங்கையில் காணாமற் போனோர் தொடர்பான விசாரணைகளை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரங்கள், இலங்கையில் இடம் பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றையும் விசாரிக்கும் வகையில் விரிவாக்கப்பட்ட பின்பு அதற்கு ஆலோசனை வழங்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவில் கெளஷாலும் ஒருவர்.
இப்போது அவர் தனக்கு வழங்கப்பட்ட பணிகளை விடவும் மேலதிகமாக தானாகவே சில பொறுப்புக்களை விரிவாக்கியுள்ளார். அதாவது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இந்தியப் பிரதமரை சந்தித்தது தொடர்பாகவும், பிரதமர் மோடி எப்படி நடந்து கொள்ள வேண்டுமெனவும், தமிழர் தரப்பு எப்படி நடக்க வேண்டுமெனவும் ஆலோசனை வழங்கியுள்ளார். அவரது ஆலோசனைகளை சம்பந்தப்பட்ட எவரும் கோரவில்லை என்பதுடன் அவற்றைப் பொருட்படுத்தப் போவதுமில்லை. ஆனாலும் அவர் வாங்கிய கூலிக்கு விசுவாசமாக செயற்பட வேண்டும் என்பதற்காகச் சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். "இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரம் தொடர்பில் இந்தியப் பிரதமர் இலங்கை ஒரு இறைமையுள்ள நாடு என்ற வகையில் நடந்து கொள்ளவேண்டும். இந்தியா இலங்கைக்கு ஆலோசனைகளை வழங்கலாமோயொழிய எந்த விதத்திலும் அழுத்தம் கொடுக்கக் கூடாது'' எனவும் கெளஷால் கேட்டுள்ளார். அதே வேளையில் அவர் தமிழர் தரப்பிடம் "இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தை மஹிந்த நடத்த வேண்டுமெனவும், மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் கோரக்கூடாது'' எனவும் ஆலோசனை வழங்கியுள்ளார். கூலிக்கு மாரடிக்கும் போது அவர்கள் வெளியிடும் கருத்துக்களே உள்ளகமாக ஒன்றுடன் ஒன்று முரண்படுவதில் ஆச்சரியம் எதுவுமில்லை. அந்த வகையில் அவர் வெளியிட்ட இந்தக் கருத்திலேயே ஏகப்பட்ட உள்முரண்பாடுகளும், குழப்பங்களும் தொக்கி நிற்கின்றன. 1987 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக 13ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்த ஒப்பந்தத்துக்கு முரணாக நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றின் மூலம் இலங்கை வடக்கையும், கிழக்கையும் பிரித்தது.

"திவிநெகும' சட்ட மூலம் மாகாண சபைகளுக்குரிய 12 அதிகாரங்களையும் பின்னர் அரசு பறித்தது. இப்படி பல வழிகளில் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தை மீறியுள்ளது இலங்கை அரசு. அது மட்டுமன்றி மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்க மறுப்பதன் மூலம் ஒப்பந்தத்தை முற்றுமுழுதாக உதாசினப்படுத்தி விட்டது. இரு தரப்பினதும் சம்மதத்துடன் செய்யப்பட்ட ஒரு உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தும்படி கேட்டால் அது எப்படி ஒரு நாடு மற்ற நாட்டின் இறைமையைப் பாதிப்பதாகக் கொள்ளப்பட முடியும்? அப்படியானால் அந்த ஒப்பந்தத்தின் அர்த்தம் என்ன? அது ஏன் செய்யப்பட்டது? கூலிக் குரல்கள் இதற்குப் பதில் சொல்ல முடியுமா? இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிடக் கூடாது என்றால் தமிழர் தரப்பை அரசியலமைப்புக்கு விசுவாசமாக நடக்கும்படி கோரவும், பொலிஸ் அதிகாரம் கோரக்கூடாது எனக் கேட்கவும் இவர் யார்? இவருக்கு என்ன உரிமை உண்டு? இலங்கைத் தமிழர்கள் எடுப்பார் கைப்பிள்ளைகளா?
இலங்கையின் அரசியலமைப்பு என்பது வேதமுமல்ல; பைபிளுமல்ல; குர் ஆனுமல்ல; அது பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்ட ஒன்று . இனியும் திருத்தப்படக் கூடியது. இந்த நாட்டு மக்கள் என்ற முறையில் அதில் திருத்தங்களைக் கோர உரிமையுண்டு. யதார்த்தம் இப்படி இருக்க அதை மறந்து விட்டு அரசின் பக்கம் நின்று தமிழர்களுக்கு விரோதமாக ஒரு தலைப்பட்சமான கருத்துக்களை வெளியிடும் கெள­ல் ஆலோசனை வழங்கப் போகும் ஐனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் எப்படி அமையும் எனச் சொல்லித் தான் தெரிய வேண்டுமென்றில்லை. இந்துசமய சம்மேளனம் என்ற பேரில் இன்னுமொரு கூலிப்பட்டாளமும் இப்போது களமிறக்கப்பட்டுள்ளது. அது பொதுபலசேனாவுக்கு நற்சான்றிதழ் வழங்கியதுடன் வடக்கில் பெளத்த சிலைகள் அமைப்பது ஆக்கிரமிப்பு இல்லையயனவும் கூறியுள்ளது. அது மட்டுமல்ல இந்துக்களை கிறிஸ்தவர்கள் மதம் மாற்றுகிறார்கள் என அது ஒப்பாரியும் வைத்திருந்தது.

தமிழர்கள் மத்தியிலேயே மத அடிப்படையில் பிளவுகளை ஏற்படுத்தி ஐக்கியத்தை சீர்குலைக்க அவிழ்த்து விடப்பட்ட ஏவற் பேயே இந்த அமைப்பு என்பதில் எள்ளளவு சம்பந்தமில்லை. இலங்கை அரசு இலங்கை தொடர்பாக களப்பிரசாரம் செய்ய லிப்பேர்ட்டி இன்ரந­னல் என்ற நிறுவனத்துக்கு மாதம் அறுபத்து மூவாயிரம் டொலர் அவர்களை கூலியாக வழங்கி வருகிறது. அதைப் போன்றே பல்வேறு முகவர்களும் வெவ்வேறு விடயங்களுக்காக இலங்கையால் கூலிக்கு அமர்த்தப்பட்டு கும்மாளம் போடுகின்றனர் எவ்வளவு தான் கோடி கோடியாகக் கூலி அள்ளிக் கொட்டினாலும் உண்மைகளின் முன்னே அதர்மம் தோற்றுப் போய் விடும் என்பது தான் வரலாறு.

ad

ad