புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 செப்., 2014


பெங்களூர்  பயமா ஜுரமா 
'ஒரு மன்னர், யானை மீது அமர்ந்தபடி நாட்டைச் சுற்றி வலம் வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார். குறிப்பிட்ட ஒரு கிராமத்துக்கு மன்னர் ஒவ்வொரு முறை போகும்போதும், ஓர் இளைஞன் யானையின் வாலைப் பிடித்து இழுப்பதும், யானை மேற்கொண்டு நடக்க முடியாமல் நின்றுவிடுவதும் தொடர்ந்தன. அவன் 'யார்’ என்று மன்னர் விசாரித்தார். 'பலம் வாய்ந்த யானையை, சாதாரண ஓர் இளைஞன் எப்படி இழுத்து நிறுத்துகிறான்?’ என்று கேட்டார். 'அந்த இளைஞனின் மனவலிமைதான் அதற்குக் காரணம்’ என்றார் மந்திரி. இந்த மனவலிமையை மாற்ற மன்னர் யோசித்தார்.
'தினமும் அவனுக்கு ஒரு தங்கக் காசு கொடுங்கள். மாலை நேரத்தில் அருகில் உள்ள கோயிலில் விளக்கு ஏற்றச் சொல்லுங்கள்’ என்றார். அந்த இளைஞனுக்கு, தினமும் தங்கக் காசு தரப்பட்டது. தினமும் தங்கக் காசுகளை எண்ணினான். '100 தங்கக் காசுகளைச் சேர்க்க எவ்வளவு நாளாகும்’ என்று யோசித்தான்.
ஒரு மாதம் கழித்து, யானை மீது மன்னன் வலம் வந்தார். அந்த இளைஞன் வழக்கம்போல யானையின் வாலைப் பிடித்து இழுத்தான். அவனால் யானையை நிறுத்த முடியவில்லை. 'காசை சேர்க்க ஆரம்பித்ததும் அவனுடைய கவனம் சிதறிவிட்டது. அவனது மனம், பணத்தின் பக்கம் போய்விட்டது. அவனது பலமும் போய்விட்டது’ என்றார் மந்திரி. 'மனம் இருந்தால் மார்க்கம் உண்டு’ என்பார்கள். அதுவும் சிதறாத மனமாக இருக்க வேண்டும்!''
- இந்தக் கதையை எழுதியது யார் என்று தெரியாது. ஆனால், தமிழ்நாட்டு மக்களுக்கு இதைச் சொன்னவர் முதலமைச்சர் ஜெயலலிதா.
''இந்தக் கதையில் வருபவரைப்போல், கருணாநிதியின் மனம் ஸ்பெக்ட்ரம் பக்கம் இருந்ததால், தமிழரின் நலன் பற்றி கருணாநிதி கவலைகொள்ளவில்லை'' என்று காரணம் சொன்னார் ஜெயலலிதா. அவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு, செப்டம்பர் 20-ம் தேதி அளிக்கப்படவிருக்கிறது. ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வில் இது கிட்டத்தட்ட திருப்புமுனைத் தருணம். 'செப்டம்பர் 20-க்கு முன்’ (செ.மு.), 'செப்டம்பர் 20-க்குப் பின்’ (செ.பி.) எனக் குறிக்கப்படும் அளவுக்கு இந்த வழக்கின் தீர்ப்பு, ஜெயலலிதா வாழ்க்கையில் அதிதீவிர தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஆகவே, இப்போது பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹாவை நோக்கியே அனைவரின் பார்வையும் குவிந்துள்ளது. ஆரம்பத்தில் லோக் ஆயுக்தா நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் குன்ஹா. சட்ட மீறலும் குற்ற மனமும் கொண்ட வழக்குகள்தான் லோக் ஆயுக்தா நீதிமன்றத்துக்கு வரும். பின்னர் கர்நாடக அரசின் விஜிலன்ஸ் துறை பதிவாளராக இருந்தவர். ஊழல் முறைகேடுகளை உன்னிப்பாகக் கவனிக்கக்கூடியவர் என்ற அடிப்படையில்தான் சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணைக்கும் இவர் தகுதியானவராக இனம் காணப்பட்டார். தான் இந்தப் பொறுப்புக்கு வந்த ஓர் ஆண்டுக்குள், இருந்த அத்தனை தடைகளையும் தகர்த்து, சட்ட சம்பிரதாயங்களை முடித்து, வழக்கை தீர்ப்பு தேதிக்குப் பக்கத்தில் கொண்டுவந்து நிறுத்தியதே நீதிபதி குன்ஹாவின் குறிப்பிடத்தக்க சாதனைதான்.
அரசுத் தரப்பு தன்னுடைய வாதங்களை தெளிவாகவைத்துள்ளது. ''1991 வரை ஜெயலலிதாவின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு 2 கோடியே 1 லட்சத்து, 83 ஆயிரத்து, 957 ரூபாய். 1996-ல் அவர் தமிழ்நாடு முதலமைச்சர் பதவியைவிட்டு இறங்கும்போது அதுவே 66 கோடியே 44 லட்சத்து 73 ஆயிரத்து 573 ரூபாய்'' என்று அரசு வழக்கறிஞர் பவானி சிங் சொல்லி, அதற்கான ஆதாரங்களையும் அடுக்கியுள்ளார்.
''சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவருக்கும், ஜெயலலிதாவுக்கும் என்ன தொடர்பு?'' என்று நீதிபதி குன்ஹா கேட்டபோது, ''இவர்கள் மூவரும் ஜெயலலிதாவின் வீட்டில்தான் இருந்தார்கள். அந்த முகவரியில்தான் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது. எனவே, அனைவரும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களே'' என்றார் பவானி சிங்.
ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞரான குமார், இந்த வாதங்களை கடுமையாக மறுத்தார். ''இவர்கள் மூவரும் ஜெயலலிதாவின் உறவினர்கள் அல்ல. சுதாகரன், ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனும் அல்ல. உறவினர்கள் பெயரில் இருந்தால்தானே, அது 'பினாமி சொத்துக்கள்’ என்று சொல்ல முடியும்? சொத்துக்களின் மதிப்பு மிகைப்படுத்திக் காட்டப்பட்டுள்ளது. அவருடைய வருமானத்தைக் குறைவாகக் காட்டியுள்ளார்கள். இது அரசியல் நோக்கம் கொண்ட வழக்கு'' என்பது இவரது வாதம்.
இதில் உன்னிப்பாகக் கவனிக்கவேண்டியது சசிகலாவின் வழக்கறிஞர் மணிசங்கர் சொன்னவைதான். ''சசிகலாவும் ஜெயலலிதாவும் பிசினஸ் பார்ட்னர்கள். இந்த வழக்கு காலகட்டத்துக்கு முன்பே இருவருக்கும் நட்பு இருந்தது. ஒரே வீட்டில் இருக்கிறார்கள் என்பதற்காக, ஜெயலலிதாவின் பணத்தில் பல கம்பெனிகளில் சசிகலா முதலீடு செய்துள்ளார் என்பது ஏற்புடையது அல்ல. சசிகலாவுக்கு ஜெயலலிதா பணம் கொடுக்கவும் இல்லை; ஜெயலலிதாவிடம் சசிகலா பணம் வாங்கவும் இல்லை. வழக்கு காலகட்டத்துக்கு முன்பே சசிகலாவுக்கு தொழில், விவசாய வருமானங்கள் உண்டு. என் மனுதாரர் வாங்கிய சொத்துக்கும் ஜெயலலிதா வுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. கொடநாடு எஸ்டேட் வாங்கப்பட்டதற்கும் ஜெயலலிதாவுக்கும் துளியும் சம்பந்தம் இல்லை'' என்றார் சசிகலாவின் வழக்கறிஞர்.
தனது தரப்பினரான சசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பதைவிடவும், ஜெயலலிதா குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கவே இவர் பெரும் நேரத்தை செலவுசெய்தார். தனது கட்சிக்காரர் வசதியானவர், சொத்துக்கள் வாங்கும் தகுதி படைத்தவர். ஆனால், வாங்கிய சொத்துக்களின் மதிப்பை அதிகரித்துக் காண்பித்திருக்கிறார்கள் என்பதே இவரது வாதத்தின் சாராம்சம்.
வி.என்.சுதாகரன், ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனே அல்ல. யாரும் உதவிக்கு இல்லாததால் இளவரசி, போயஸ் கார்டனில் வந்து தங்கி இருந்தார். ஜெயலலிதாவிடம் இருந்து சசிகலா பணமே வாங்கவில்லை - இதுதான் சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பு வாதங்கள்.
''சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் ஜெயலலிதாவின் உறவினர்களாக இல்லாத நிலையில், அவர்கள் பெயரில் உள்ள சொத்துக்களையும் சேர்த்து எப்படி வழக்கு தாக்கல் செய்ய முடியும்?'' - என்பது ஜெயலலிதா தரப்பு வாதம்.
''இந்த மூவருக்கும் எந்த வருமானமும் கிடையாது. இவர்கள் மூவரும் ஜெயலலிதாவின் ஏஜென்ட்கள்'' - என்பது அரசுத் தரப்பு வாதம்.
எது குடும்பம், யார் உறவினர்கள், யார் பினாமிகள், நண்பர்களின் சம்பாத்தியத்துக்கும் நாம் கணக்குச் சொல்ல வேண்டுமா? நண்பர்கள் பேரில் இருந்தால், நாம் பொறுப்பேற்க வேண்டுமா? - இப்படி எத்தனையோ குழப்பங்களில் இருந்துதான் நீதிபதி குன்ஹா நீதியை எடுத்துத் தர வேண்டும்.
இந்த நிலையில் கடந்த வாரத்தில் இன்னொரு நெருக்கடியை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கொடுத்துள்ளது. 'குற்றப் பின்னணி கொண்டவர்களை, ஊழல் உள்ளிட்ட கடுமையான குற்றங்களில் ஈடுபட்டு, குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டவர்களை அமைச்சர்கள் ஆக்கக் கூடாது. குற்ற வரலாறுகொண்டவர்களால் ஜனநாயக அரசு ஆளப்படுவதை மக்கள் விரும்பவில்லை’ என்று மத்திய அரசின் உச்சி மண்டையில் உச்ச நீதிமன்றம் கொட்டியுள்ளது. இதன் பிறகு உஷாரான மத்திய அரசு, புதிய சட்டம் ஒன்றைக் கொண்டுவர முடிவு செய்துள்ளது.
''சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாட்டில் சட்டரீதியான நடவடிக்கையை எதிர்கொண்டவர்களிடம் எப்படி நிர்வாகத்தை ஒப்படைக்க முடியும்?''
- உச்ச நீதிமன்றம் கேட்ட கேள்விக்கு, எல்லா கட்சிகளும்தான் பதில் அளிக்க வேண்டும்!

குற்றப்பின்னணி அரசியல்வாதிகளை இறுக்கும் புதிய கடிவாளங்கள்!
1. இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்குமேல் தண்டனை பெற்றவர்கள், ஆறு ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது.
2. மூன்று ஆண்டுகள் தண்டனை பெற்றால், உடனடியாக கைது செய்யப்படுவார்கள்.
3. தற்போது நீதிமன்றங்களால் தண்டனை பெற்றவர்கள்தான் தேர்தலில் போட்டியிட தடை உள்ளது. புதிய சட்டம் வந்தால், குற்றச்சாட்டு பதிவானதும் (7 ஆண்டு தண்டனை பெறக்கூடிய குற்றமாக இருந்தால்) 13 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது.
4. தண்டனை என்று தீர்ப்பு வந்ததும் அப்பீல் போய்விட்டால் பதவியில் தொடரலாம் என்ற நிலையை உச்ச நீதிமன்றம் தடுத்துவிட்டது. எனவே, உடனடியாக பதவி விலக வேண்டும்.
5. குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவதை, பிரதமர், மாநில முதல்வர்கள் தவிர்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதாவின் மனநிலை என்ன?
ஜெயலலிதா, இதற்கு முன் இவ்வளவு பதற்றமாக இருந்தது இல்லை. மாநிலத்திலும் மத்தியிலும் அரசியல்ரீதியாக பெருவெற்றி பெற்று நிற்கும் நேரத்தில், அதற்குப் பாதகமாக தீர்ப்பு வந்துவிடக் கூடாது என்பதே காரணம். தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்ட மறுநாள், கட்சியின் தலைமைக் கழகத்துக்கு ஜெயலலிதா வந்திருந்தார். அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக ஏழாவது முறை அவர் பொறுப்பேற்றுக்கொண்டார். அ.தி.மு.க-வில் பொதுச்செயலாளர் தேர்தல் என்பது சம்பிரதாயம்தான். ஆனால், அது இந்த முறை கொண்டாட்டமாக இருந்தது. 7 என்பது ராசியான எண், அதைக் கொண்டாட வேண்டும் என்று ஜெயலலிதா சொன்னதால் இந்த ஆர்ப்பாட்டமாம்.
அதே சமயம், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு சாதகமாக வந்தாலும், பாதகமாக வந்தாலும் திருப்புமுனையாகவே அமையும். ஏற்கெனவே அவர் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தன. அவை அனைத்திலும் சிறப்பு நீதிமன்றத்தில் தண்டனை பெற்றாலும், அப்பீலுக்குச் சென்று உயர் நீதிமன்றத்தில் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார். டான்சி வழக்கில் மட்டுமே உயர் நீதிமன்றமும் தண்டனையை உறுதிப்படுத்தியது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்காகக் காத்திருந்தார். இடைப்பட்ட காலத்தில் ஆட்சியைப் பிடித்து முதலமைச்சர் பதவி ஏற்கும்போது சிக்கல் வந்தது. அதனால் பதவி விலகி, ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் ஆக்கினார். உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் அவரது தண்டனையை ரத்துசெய்த பிறகு, மீண்டும் தேர்தலில் நின்று முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். எனவே, அவர் சட்டச் சறுக்கலை ஏற்கெனவே அனுபவித்தவர்தான்.
தற்போது இந்த வழக்கில், நிரபராதி என்று அவர் விடுதலை செய்யப்பட்டால், 'கருணாநிதியால் போடப்பட்ட பழிவாங்கும் வழக்கில் இருந்து விடுதலை பெற்றுவிட்டோம். களங்கம் துடைக்கப்பட்டது’ என்று அ.தி.மு.க-வினர் பெருமை பொங்க சொல்வார்கள். அதுவே அடுத்த தேர்தலை சந்திக்க வெற்றி அஸ்திரமாக மாறும். எதைச் சொல்லி ஜெயலலிதாவுக்கு  நெருக்கடி கொடுத்து வந்ததோ, அந்த ஆயுதத்தை தி.மு.க-வும் இழக்க வேண்டிவரும். இதைவிட பலமான ஆயுதம் தி.மு.க வசம் இப்போதைக்கு இல்லை.
ஒருவேளை தண்டனை தரப்பட்டால், 'அம்மாவை கருணாநிதி பழிவாங்கிவிட்டார்’ என்று அனுதாபம் தேடுவதற்கும் இந்தத் தீர்ப்பு காரணமாக அமைந்துவிடும்.  எனவே, இந்தத் தீர்ப்பு இரண்டு விதமாகவும் அ.தி.மு.க-வினருக்கு அரசியல்ரீதியாகப் பயன்படும்!

ad

ad