புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 செப்., 2014


தூக்கு மேடையில் ஜனநாயகம்
தேர்தல் என்பது ஜனநாயகப் பண்பில் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்ததும் அடிப்டையானதுமான ஒரு அம்சமாகக் கருதப்படுகின்றது.

ஆட்சி பீடம் ஏறி, நாட்டை யார் வழிநடத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை மக்களுக்கு இந்தத் தேர்தல்கள் மட்டுமே வழங்குகின்றன.
பல்வேறு கட்சிகளும் தங்கள் கொள்கைகளையும் வேலைத்திட்டங்களையும் மக்கள் முன் வைக்கும் போது மக்கள் அவற்றைப் பரிசீலனை செய்து, நாட்டைப் பயனுள்ள முறையில் வழி நடத்தக் கூடிய வேட்பாளர்களை இனம்கண்டு, அவற்றைத் தமது வாக்குகள் மூலம் தெரிவு செய்யும் பொழுதே ஜனநாயகம் முழுமை பெறுகிறது. ஆனால் தேர்தல்களில் சுதந்திரமான வாக்களிப்பு முறை இடம்பெறாத போது ஜனநாயகத்தின் ஆணிவேரே ஆட்டம் கண்டு விடுகிறது. இலங்கையும் ஒரு ஜனநாயக நாடு என்றே கருதப்படுகிறது. அந்தவகையில் ஜனாதிபதித்தேர்தல் , நாடாளுமன்ற பொதுத் தேர்தல், மாகாணசபைத் தேர்தல், உள்ளூராட்சிசபைத்தேர்தல் எனப் பல்வேறு தேர்தல்களிலும் மக்களுக்கு வாக்களிக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது. எல்லா நாடுகளிலும் தேர்தல் , நீதித்துறை, பரீட்சை , சிறைச்சாலை என்பவற்றுக்கான ஆணையாளர்கள் சுதந்திரமாகவே இயங்கி வருகின்றனர். இதில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது என்ற மரபு ஜனநாயக நாடுகளில் மிக இறுக்கமாகவே பின்பற்றப்பட்டு வருகின்றது. இதுவே ஜனநாயகத்தின் உயிர்நாடியாக கருதப்படுகின்றது. ஆனால் 1978 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனாவால் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்புக் சட்டமும், அதையடுத்து மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களும் ஜனநாயகத்தின் அடிப்படைப் பண்புகளையே கேள்விக்குட்படுத்தி விட்டன. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை மூலம் ஆணைக்குழுக்கள், நீதிச்சேவை அகியவற்றின் சுதந்திரமான இயக்கம் வலுவிழந்து விட்டது. ஜனாதிபதியே இந்த ஆணையாளர்களை நியமிக்கும் அதிகாரம் கொண்டவராயிருக்கின்றார். பதவி வழி வரும் ஆணையாளர்கள் அதிகாரத்தில் இருக்கும் போது அவர்கள் சுதந்திரமாக இயங்க முடியும். ஆனால் ஜனாதிபதி என்ற அரசியல்வாதியால் நியமிக்கப்படும் போது அவர்களின் சுதந்திரமான நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்படுகின்றன. அண்மையில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட சட்ட மூலத்தை அங்கீகரிக்க மறுத்த காரணத்தால் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் ´ராணி பண்டாரநாயக்கா பதவி விலக்கப்பட்டார். அது மட்டுமன்றி அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார். முன்னாள் நீதியரசர் சரத் என்.சில்வா கூட அரசியல் நிர்ப்பந்தம் காரணமாகக் சில முறையற்ற தீர்ப்புகளைக் தான் வழங்கியுள்ளதாக அண்மையில் கவலை தெரிவித்துள்ளார். இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையின் கீழேயே தேர்தல் ஆணையாளர் கூட செயற்பட வேண்டிய நிலை உள்ளது. கடந்த காலங்களில் தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக ஒவ்வொரு முறையும் தேர்தல் கண்காணிப்புக் குழுக்களால் நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் முன் வைக்கப்பட்டன. ஆனால் அவை தொடர்பாக இது வரை எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டதே கிடையாது. எனவே தேர்தல் முறைகேடுகளும் தேர்தலும் பிரிக்க முடியாதவாறு பிணைக்கப்பட்டவையாகிவிட்டன. அரச அதிகாரம், காடைத்தனம், வன்முறைகள் என்பன தாராளமாகவே தேர்தல் காலங்களில் அரங்கேற்றப்படுகின்றன. இவை தொடர்பான முறைப்பாடுகளை தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் எழுதி வைத்து வெறும் காகித அறிக்கை விடுமளவுக்கு மட்டுமே நிலைமை உள்ளது. கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களைப் போன்றே ஊவாமாகாண சபைத் தேர்தலிலும் தேர்தல் முறைகேடுகள் ஜனநாயகத்தை தூக்கு மேடையில் ஏற்றிக் கொண்டிருக்கின்றன. அதிகார துஷ்பிரயோகம், வன்முறைகள், அரசஅதிகாரங்கள், அரச வளங்கள் என்பவற்றை ஆளும் கட்சியினர் தமக்குச் சாதகமாக பயன்படுத்தல், மிரட்டல் நடவடிக்கைகள், தேர்தல் பரப்புரைக் கூட்டங்களை வன்முறைகள் மூலம் குழப்புதல், தேர்தல் காரியாலயங்களை உடைத்தல் போன்ற தேர்தல் முறைகேடுகள் காரணமாகவே இடம்பெற்று வருகின்றன. இவை தொடர்பான முறைப்பாடுகள் மூன்று இலக்கங்களில் வேகமாக உயர்ந்து கொண்டு செல்கின்றன. கட்சிகளின் தேர்தல் காரியாலயங்கள் தாக்கப்பட்டமை தொடர்பாக மட்டும் இந்தப் பத்தி எழுதப்படும் வரை 41 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. தேர்தல் முறைகேடுகள் நூறைத் தாண்டி வெற்றி நடை போட்டு வருகின்றன. அதே வேளையில் தேர்தல் வன்முறை தொடர்பாக ஜே.வி.பியினர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். அந்த முறைப்பாடுகள் தொடர்பாக உடன் நடவடிக்கை எடுக்கப்படா விட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் பொலிஸாரோ ஊவா மாகாணத்தில் எந்தவித தேர்தல் வன்முறைகளும் இடம்பெறவில்லையயனத் தெரிவித்துள்ளனர். அதே வேளையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதி அமைச்சர் ஒருவர் தேர்தல் காரியாலயங்கள் பொதுமக்களாலேயே தாக்கப்பட்டன எனவும், அந்தத் தாக்குதலுக்கும் தமது கட்சிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லையயனவும் தெரிவித்துள்ளார். அரசாங்க அதிகாரிகள் தேர்தல் பயன்படுத்தப்படுவது தொடர்பாக கருத்து வெளியிட்ட ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் ""அரச பணியாளர்கள் தாம் சார்ந்திருக்கும் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த கட்சிகளுக்களுக்காகவே தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகின்றனரேயயாழிய ஒருபோதும் ஆளும் கட்சி அவர்களைப் பயன்படுத்தவில்லை'' என்று தெரிவித்துள்ளார். எப்பிடியிருப்பினும் தேர்தல் வன்முறைகளும், அரச பணியாளர்கள், அரச வாகனங்கள் போன்ற வளங்களும் ஆளுங்கட்சிக்குச் சார்பாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதே உண்மை. ஆயினும் இந்த விடயங்களைப் பொலிஸார் மறைக்க முயல்கின்றார்கள் என்பதும், ஆளும் கட்சியினர் நொண்டிச் சாட்டுகளை முன்வைத்துத் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் அதைவிட நம்பகத் தன்மை மிக்க உண்மை. அதாவது மக்கள் தங்களுக்கு விருப்பமான வேட்பாளர்களைச் தேர்ந்தெடுக்கும் ஜனநாயக உரிமை பல்வேறு வழிகளிலும் மக்களிடமிருந்து பறிக்கப்படுகின்றது. அதற்குத் தேர்தல் ஆணையாளர், பொலிஸார் ஆகிய தரப்பினர் மறைமுகமாகவும் நேரடியாகவும் துணை போய்க் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே இடம்பெற்ற தேர்தல்களைப் போன்றே ஊவாமாகாணசபைத் தேர்தலிலும் ஜனநாயகம் தூக்கு மேடையில் ஏற்றப்பட்டு விட்டது என்பது தெட்டத் தெளிவான உண்மையாகும். மக்கள் தங்களுக்குரிய வேட்பாளர்களை சுதந்திரமான முறையில் தங்கள் விருப்பப்படி தெரிவு செய்வது ஏகாதிபத்திய முறை எனவும், இலங்கை ஒரு இறைமையுள்ள நாடு என்ற வகையில் தனக்கே உரித்தான முறையில் மக்களை நிர்ப்பந்தித்து வாக்களிக்க வைக்கும் வகையில் தேர்தலை நடத்துகிறது என ஆளுங்கட்சியினர் சர்வதேசத்துக்கு புதிய விளக்கம் கொடுத்தால் கூட ஆச்சரியப்பட முடியாது. அந்தளவுக்கு ஜனநாயகத்துக்கு சாவுமணி அடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ad

ad