புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 நவ., 2014

ராஜபக்ஸ சாம்ராச்சிய வீழ்ச்சி ஆரம்பம்? 28 அமைச்சர்கள் வெளியேறும் ஆபத்து

ராஜபக்ஸ சாம்ராச்சியத்தின் வீழ்ச்சி ஆரம்பமாகிவிட்டதா? என்ற கேள்வி தென்னிலங்கையில் பரவத் தொடங்கியிருப்பதாக தெரியவருகிறது. அரசாங்கத்தின் வீழ்ச்சியின் கட்டியங் கூறலை ஜாதிக ஹெலஉறுமயவின் அத்துரலியே ரத்தனதேரர் ஆரம்பித்து வைத்தார்… அவரின் பின்னால் அரசாங்கத்துடன் மிக நெருக்கமாக இருந்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க மற்றும் மேல்மாகாண அமைச்சர் உதயகம்மன்பில பதவிகளையும் சலுகைகளையும் தூக்கி எறிந்து சென்றனர்.

ஏற்கனவே களுத்துறையில் ஜேவிபியின் முக்கியஸ்தராக இருந்த நந்தன குணத்திலக (விமல் வீரவன்சவுடன் பிரிந்து சென்று அரசாங்கத்துடன் இணைந்திருந்தவர்) தனது நகரசபைத் தலைவர் பதவியைத் துறந்து எதிரணியில் இணைந்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் முக்கியஸ்தராக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்க இன்று (20.11.14) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டார்.
இவற்றின் தொடர்ச்சியாக 28 ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு விலகி வெளியில் வர இருப்பதாக கூறப்படுகிறது.
இவர்களுக்கு தலைமைதாங்கி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினரும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளருமான மைத்திரிபால சிரிசேன அரசாங்கத்தை விட்டு வெளியேற இருப்பதாக பலமான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
பாரம்பரிய சிறீலங்கா சுதந்திரக் கட்சியைக் காப்பாற்றும் குழுவாக இந்த கிளர்ச்சிக் குழு விளங்க இருப்பதாகவும் இவர்களின் பிரதான ஆலோசகரா முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க பண்டாரநாயக்கா விளங்குவதாகவும் கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வகையில் ஜேவீபீ – ஜாதிக ஹெலஉறுமய – ஐக்கியதேசியக் கட்சி – சரத்பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி, மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி உள்ளிட்ட பிரதான கட்சிகள் மைத்திரிபால சிரிசேனவை பொது வேட்பாளராக்க இணங்கி இருப்பதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு மைத்திரிபால சிரிசேன பொது வேட்பாளர் என்பது நாளை அறிவிக்கப்பட்டால் இவருடன் அமைச்சர்கள் ராஜிதசேனாரட்ண, ரத்ணசிறி விக்ரமநாயக்கா, ரெஜினோல்ட்குரே உள்ளிட்டவர்களும் பாராளுமன்ற உறுப்பினர் பேராசியர் ரஜீவ விஜயசிங்க, நவீன் திஸ்ஸநாயக்கா உள்ளிட்ட 28பேரும் ஆளும் தரப்பை விட்டு வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் இலங்கையில் இன்று இரவும் மகிந்த சகோதரர்கள் ஆளும் தரப்பில் இருந்து எதிர்த் தரப்பிற்கு எவரும் செல்லாதிருப்பதற்கான அனைத்து முயறிசிகளையும் எடுத்துக்கொண்டு இருப்பதாகவும் மகிந்த சகோதர பொறியில் இன்று இவர்கள் விழாதிருப்பின் நாளையோ நாளை மறுதினமோ பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன என்பதும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியை மீட்கும் அணி உதயமாகிறது என்பதும் பத்திரிகையாளர் மகாநாட்டில் வெளிவரும் என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே வேளை ராஜபக்ஸசாம்ராட்சிய வீழ்ச்சியின் ஆரம்பத்திற்கு கட்டியம் கூறும் மற்றும் ஒரு நிகழ்வாக இன்று ஆளும் கட்சி அதிகாரத்தில் உள்ள பாலிந்த நுவர பிரதேச சபையின் வரவு-செலவுத்திட்டம் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை தனது சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கு தானே மண்ணை அள்ளி தன் தலையில் கொட்டியதாகவும் ஆளும் தரப்பில் இருந்து பேச்சுக்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
சர்வதேச அளவில் ராஜதந்திர மட்டத்தில் தனக்கு விசுவாசமாகவும் நுட்பமாகவும் பணி புரிந்த, தயான் ஜயத்திலக, தமரா குணநாயகம், நோனிஸ், பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க போன்றோரை புறந்தள்ளி தனதும் தனது குடும்பத்தினதும், நண்பர்களதும் நலன் பேணும் சண்டியர்களை களமிறக்கி சர்வதேச அளவிலும் பலவீனமான நிலைக்கு தன்னை இட்டுச் சென்றதாக ஆளும் கட்சி முக்கியஸ்த்தர்கள் தெரிவிக்கின்றனர்.
உள்நாட்டிலும் ஆளும் கட்சியில் இருப்பவர்களை சந்தேகக் கண்ணுடன் நோக்கி அவர்களை உளவு பார்ப்பதற்கு தனது சகோதரன் கோத்தாபயவின் ஒற்றர் படையை களமிறக்கியது, குறிப்பாக மைத்திரிபால சிரிசேனவின் வீடு அலுவலகத்தில் கருவிகள் பொருத்தியமை உள்ளிட்ட விடயங்கள் கடுமையான விரக்த்திக்குள் ஆளும் கட்சி உறுப்பினர்களை இட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.
இதுவே அவரது நெருங்கிய சகாவாக இருந்த மைத்திரிபால சிரிசேனவே அவருக்கு எதிரான வேட்பாளராக களமிறங்க வேண்டி ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் நாட்டின் பிரதான சிரேஸ்ட ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் புத்திஜீவிகள், மதகுருமார், பெள்த்த பீடங்கள் என அனைத்து தரப்பினரும் ராஜபக்ஸ சாம்ராட்சியத்தின் வீழ்ச்சிக்காக பகிரங்கமாகவே வேலை செய்யத் தொடங்கியுள்ளதாகவும், குடும்ப ஆட்சியின் அகோரங்களை இனி நாடு தாங்காது என சிந்திப்பதாகவும் கொழும்பின் முக்கிய பிரமுகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

ad

ad