புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 நவ., 2014

மாவீரர் நாள் - ஒரு பார்வை

-நடராஜா முரளிதரன்-கனடா 
உலகெங்கணும் விடுதலைக்காகவும் தாங்கள் கொண்ட இலட்சியத்திற்காகவும் போராடி உயிர் நீத்தவர்களை அந்தச் சமூகங்கள் நினைவுடன் போற்றுவதை, தொழுவதை வரலாறு நெடுகலும் நாம் பார்க்கின்றோம். பழங்குடிச் சமூகங்கள்
தொட்டு இடதுசாரி அரசியல் பேசும் பொதுவுடமையாளர்கள் மற்றும் முதலாளித்துவத்தை வரித்துக் கொண்டவர்கள் ஈறாக இதற்குள் அடங்குவதை வரலாற்றின் பக்கங்கள் தெட்டத் தெளிவாக எடுத்தியம்புகின்றன. வெற்றி பெற்ற வரலாறுகள் மட்டுமேயல்லாது தோல்வியடைந்த மக்கள் சமூகங்கள், அமைப்புக்கள் கூட அதனை விட்டுவிட்டுத் தப்பியோடுவதில்லை என்பதை சமகால உலக நிகழ்வுகளின் தாற்பரியங்களுக்கூடாக உணர்ந்து கொள்ள முடியும்.
இன்று உலகம் ஒரு கிராமமாகச் சுருங்கிவிட்டதாகப் பெரும்பாலானவர்கள் எழுதியும் பேசியும் வருவது வாடிக்கையாகி விட்டது. ஆனால் நவீன தொழில் நுட்ப யுகத்தில் மக்கள் எவ்வளவு தூரம் நெருங்கிவிட்ட போதிலும் தங்கள் தனித்துவத்தை மற்றவர்கள் விழுங்கிவிடுவார்களோ என்ற அச்சத்தில் உறைகிறார்கள். உறைவது மட்டுமல்லாது தங்களது இருப்புக்காக தம்மை இழத்தலை ஒரு பொருட்டாக மதிக்காது தாங்கள் வரித்துக் கொண்டவைகளுக்காக அர்ப்பணித்தலை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு மரணிப்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
இது எங்கள் சமூகத்தில் நிகழ்ந்தது, முப்பது வருடங்கள் தொடர்ச்சியாக ஈழத்து மண்ணில் இது நடைபெற்றது. ஈழத்துத் தமிழ் மனோநிலை குறித்த நடுத்தர வர்க்க குணாம்சம் பற்றிய எத்தனையோ சித்தாந்தங்கள் உரைக்கப்பட்டுள்ளன. ஆய்வுகளும் அறிக்கைளும் குவிந்து கிடக்கின்றன. கிடைக்கின்ற வசதிகளோடும் வாய்ப்புக்களோடும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு சந்ததியைப் பெருக்கித் தன் சுய அடையாளங்களைப் பேணி வாழ முனைய வேண்டிய சமூகம் ஏன் தன்னைத் தொலைக்க வேண்டி வந்தது ?
எல்லாவற்றுக்கும் இருப்பது போல இதற்கும் ஒரு அரசியல் காரணம் இருந்திருக்கின்றது. அந்த அரசியல் காரணத்தின் நடைமுறை வெற்றி, தோல்வி பற்றி எங்களுக்குள் பல்வேறு கருத்து மோதல்கள் இருந்திருக்கின்றது. இன்றும் அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் அந்த முரண்களுக்கு அப்பால் அந்த எல்லைகளைத் தாண்டி அதை நம்பிக்கொண்டு பலர் உயிர் நீத்திருக்கின்றார்கள். அவர்களை நாங்கள்தான் உருவாக்கியும் வளர்த்தும் வந்திருக்கின்றோம். அவர்கள் எங்களது நண்பர்களாக, உறவினர்களாக, ஊரவர்களாக, அயலவர்களாக வாழ்ந்து மடிந்து இந்தப் பிரபஞ்சத்தின் துணிக்கைகளாக, மூலக்கூறுகளாக நிலைபெற்றும் உழன்றும் கொண்டிருக்கிறார்கள்.
இறுதியில் தப்பிப் பிழைத்த நாம் அவர்களை ''மாவீரர்கள்'' என்று கொண்டாடிவிட்டு நிம்மதியாகத் தூங்கி விடுகின்றோம். அல்லாவிட்டால் சில மணித்துளிகள் எங்கள் மனங்களை உலுக்கிய அவர்களது நினைவுகள் பிடுங்கப்பட்டுச் சிதிலமாகி விடுகின்றன. ஏனெனில் நாங்கள் வழமையான வாழ்வுக்குள் திரும்பியே ஆக வேண்டியுள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவர் வன்னியில் நித்திகைக்குளத்தில் 1989 இல் தனது இயக்கப் போராளிகளின் மரணங்களைத் தியாகத்துக்குரிய போற்றுதற்குரிய அர்ப்பணிப்புக்களாக அஞ்சலி செய்யும் பொருட்டு கார்த்திகை 27இனை மாவீரர் நாளாகப் பிரகடனம் செய்கிறார். அந்நாள் தொடர்பான நிகழ்வுகள் கடந்த இருபத்தைந்து வருடங்களாக ஈழத்தமிழர் வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் படைத்ததாகவே நடைபெற்று வந்துள்ளன. ''2009 மே'' தோல்விக்குப் பின்னரும் அந்த நாளுக்கு ஈழத்தமிழ் மக்கள் கொடுக்கும் முக்கியத்துவம் குறைந்தததாக இல்லை. கனடா உட்பட மேற்கத்தேய நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் அந்த நாளில் வெள்ளமெனத் திரண்டு இறந்த போராளிகளுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்.
இந்தச் சந்தர்ப்பத்திலே என் மனதிலே பல காலங்களாகக் குடைந்து கொண்டிருக்கும் கேள்வியை எழுப்புவது குறித்துச் சிந்திக்கின்றேன். இந்தக் கேள்வி முன்னரே பலரால் எழுப்பப்பட்ட கேள்வியும்தான். ஏன்...நான் கூட இவ்வளவு காலதாமதத்திற்குப் பின் இக் கேள்வியைக் கேட்பது பற்றிப் பலர் என் மீது குற்ற விசாரணையைத் தொடங்கவும் வாய்ப்பு இருக்கிறது. தமிழ் மக்களுடைய உரிமைகளுக்காகப் போராடப் புறப்பட்டு மரணித்த அனைத்து அமைப்புப் போராளிகளுக்குமான அஞ்சலியையும் இந்த மாவீரர் நாளில் இணைத்துச் செலுத்துவதன் மூலம் ஒரு புதிய அத்தியாயத்தை ஈழத்தமிழ்ச் சமூகத்தில் தோற்றுவிக்க முடியாதா ? என்று அபிப்பிராயப்படுகின்றேன்.
1983களில் போராட்டம் என்று புறப்பட்ட இளைஞர்கள் இயக்க வேறுபாடுகளுக்கு அப்பால் 'தமிழீழம்' என்ற கனவுக்காக, இலட்சியத்துக்காகத் தாம் சந்திக்க நேர்ந்த அமைப்புகளிலே இணைந்து கொண்டார்கள். அவ்வாறு இணைந்து கொண்டு போராடப் புறப்பட்ட இளைஞர்கள் பொது எதிரிக்கு எதிரான யுத்தத்திலும் இயக்க மோதல்களிலும் உட்கட்சிக் களையெடுப்புகளிலும் கொல்லப்பட்ட சோகமான வரலாறு ஈழத்தமிழ்ச் சமூகத்தின் மன ஆழங்களிலே பதிந்து கிடக்கிறது. அந்த இளைஞர்களும் நம்மவர்களே! நமக்காகவே அவர்களது இரத்தமும் சிந்தப்பட்டது. எனவே மாண்டு விட்ட மறந்து விடப்பட்ட அந்தத் தியாகக் குருத்துகளுக்கும் மாவீரர் நாளிலே நாம் மீள் வாழ்வு கொடுக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்த உரையாடல் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதன் அவசியத்தை நான் இந்தச் சந்தர்ப்பத்திலே வலியுறுத்த விரும்புகின்றேன்.
ஈழத்தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் ''மாவீரர் நாளினைக்'' கொண்டாடும் வேளையில் எமது மக்கள் தங்களது சொந்தத் தாயகத்தில் இறந்த தங்களது குழந்தைகளை நினைந்து இதனைக் கொண்டாட முடியாத அவலத்தை என்னவென்பது ? போராளிகள் பிரதேசங்களைக் கட்டுக்குள் வைத்திருந்த வேளையில் நடைபெற்ற ''மாவீரர் நாள்'' நிகழ்வுகளை ஒரு கணம் நான் நினைத்துப் பார்க்கின்றேன். ஆனால் ஜே.வி.பியினர் தங்களது இறந்த தோழர்களுக்காக அஞ்சலி நாளினைப் பிரகடனப்படுத்திக் கொண்டாடுவதை சிறிலங்கா அரசுகள் என்றுமே தடுப்பதில்லை. ஏனெனில் இதற்கூடாகத் தங்களது அரசியல் அதிகாரத்தை நிறுவுவது சுலபமென அரசுகள் நம்புகின்றன. ஆனால் இறந்த போராளிகள் போராடிய அரசியல் என்பது அவ்வாறானதொன்றல்ல. அது ஒடுக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனத்துக்கான சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டுவதற்காக விதைக்கப்பட்டவை. தமிழ் மிதவாதத் தலைமைகளும் சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற் போல் அவர்களது தியாகங்களைப் போற்றுவதும் பின்பு பழிப்பதும் தமிழ் மக்களின் விருப்புகளை நிலைநாட்டுதற்கான அரசியலில் உரிய அறமாக அமையாது.
தமிழ் மக்களின் கூட்டு மன உளவியலிலே வீரர்களைப் போற்றுதலும் வணங்குதலும் மரபின் தொடர்ச்சியாக நீண்டு வந்துள்ளது. வீழ்ந்து மடிந்த வீரர்களைத் தெய்வங்களாகத் தொழுத வரலாறு தமிழ் நாட்டுக்கு உண்டு. அத்தகைய வரலாறுகளின் தொடர்ச்சி எம்மிடமும் நீண்டு கொண்டே செல்கிறது. ஆயினும் அதற்கான ''அரசியல் மொழி'' வளர்த்தெடுக்கப்பட வேண்டியுள்ளது. மீண்டும், மீண்டும் சிந்திக்க வேண்டியுள்ளது. தவற விடப்பட்டவையையும் தவிர்க்கப்பட்டவையையும் எந்தச் சமூகம் இணைத்துக் கொண்டு முன்னேறத் தயாராக இருக்கின்றதோ அந்தச் சமூகமே ஈற்றில் வெற்றியைத் தனதாக்கிக் கொள்ள இயலும்

ad

ad