புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 நவ., 2014

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் முன்னால் உள்ள தேர்வுகள் -நோலாந்தன் 
தென்னிலங்கையில் ஜனாதிபதித் தேர்தலை நோக்கி விறுவிறுப்பாகக் காய்கள் நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், தமிழ்ப் பகுதிகளில் இது குறித்து
எத்தகைய பரபரப்பையும் காண முடியவில்லை. தமிழ் மக்களிற் பெரும்பாலானவர்கள் இது குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இது தங்களுடைய வீட்டுத் தேர்தல் அல்ல. பக்கத்து வீட்டுத் தேர்தல்தான் என்பது போன்ற ஒரு மனோ நிலையே அதிகம் தென்படுகின்றது. 
தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின் தமிழ்க் கட்சிகள் எப்படிச் செயற்படப்போகின்றன என்பதைப் பொறுத்து தமிழ் மக்கள் அருட்டப்படக்கூடும். இணக்க அரசியலைச் செய்யும் கட்சிகளைப் பொறுத்த வரை இத்தேர்தல் தொடர்பில் ஒரே தெரிவுதான் உண்டு. அதாவது அரசாங்கத்தைப் பாதுகாப்பது. ஆனால், ஏனைய கட்சிகளின் முன்னால் ஒன்றுக்கு மேற்பட்ட தெரிவுகள் உண்டு. இத்தெரிவுகள் அனைத்தும் பிராந்திய மற்றும் உலகளாவிய பேரரசுகளின் நலன்களோடு பின்னிப் பிணைந்தவைதான். எனினும், சக்திமிக்க வெளித்தரப்புகளின் நிகழ்ச்சி நிரல்களுக்குள் தமிழ் மக்களின் நிகழ்ச்சி நிரலைக் கொண்டு போய்ப் பொருத்துவது எப்படி என்பதே இப்பொழுது தமிழ்க்கட்சிகளின் முன்னாலுள்ள சவாலாகும்,
அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் ஆட்சி மாற்றத்தையே விரும்புகின்றன. இது மிக வெளிப்படையான ஒரு போக்கு. மேற்கு நாடுகளின் தூதுவர்கள் இது தொடர்பாக கூட்டமைப்பினருடன் உரையாடியிருப்பதாகவும் உத்தியோகப்பற்ற தகவல்கள் உண்டு. ஆனால், இதில் கூட்டமைப்புக்குள்ள பெரிய பிரச்சினை என்னவென்றால் அவர்கள் யாரை ஆதரித்தாலும் ஆதரிக்காவிட்டாலும் அது அரசாங்கத்துக்கு சாதகமாக அமையக்கூடிய வாய்ப்புகளே அதிகம் தென்படுகின்றன என்பதுதான்.
கடைசியாக நடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் இதுதான் நடந்தது. கூட்டமைப்பு சரத் பொன்சேகாவை ஆதரிக்கப்போய் அது அரசாங்கத்தை நோக்கி சிங்கள இனவாத வாக்குகளைத் தள்ளி விடுவதில் முடிந்தது. அதாவது தமிழ் மக்களின் பிரதிநிதிகள் யாரை ஆதரிக்கின்றார்கள் என்பது பொறுத்து ஜனாதிபதித் தேர்தல் களம் மேலும் மேலும் இன ரீதியாக பிளவுபடும்.
எதிர்க்கட்சிகள் இதைத் தவிர்ப்பதற்காகவே இனப்பிரச்சினை தொடர்பில் பம்மிக் கொண்டிருக்கின்றன. அதாவது சிங்கள இனவாதத்திற்கு தலைமை தாங்காவிட்டால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்ற ஒரு நிலை.
எனவே, கூட்டமைப்பு அரசாங்கத்தை ஆதரித்தாலும் அரசாங்கம் வெல்லக்கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கும். எதிர்க்கட்சிகளை ஆதரித்தாலும் அது அரசாங்கத்திற்கே சாதகமாக அமையக்கூடும். ஆயின் தமது நிகழ்ச்சி நிரலைப் பலவீனப்படுத்தும் ஒரு முடிவை எடுக்குமாறு மேற்கு நாடுகள் கூட்டமைப்பிடம் கேட்குமா?.
இலங்கைத் தீவின் கடந்த ஐந்தாண்டு கால நிலைமை அப்படித்தானுள்ளது. அதாவது அரசாங்கத்தை எதிர்க்கும் எந்தவொரு நடவடிக்கையும் அரசாங்கத்தைப் பலப்படுத்துவதாகவே அமைந்து வந்துள்ளது. ஏனெனில், இலங்கைத்தீவின் வெற்றிவாதத்தின் தன்மை அத்தகையது. இலங்கைத் தீவைப் பொறுத்த வரை வெற்றிவாதம் எனப்படுவது இனவாதம்தான். எனவே, எந்தளவுக்கு இனவாதம் தூண்டப்படுகின்றதோ அந்தளவுக்கு வெற்றிவாதம் வெற்றிபெறும்.
இப்படியாகத் தமது நிகழ்ச்சி நிரலைப் பின்னுக்கிழுக்கும் ஒரு தெரிவை மேற்கு நாடுகள் எடுக்கத் துணியுமா? அப்படி ஒரு முடிவை எடுக்காவிட்டால் கூட்டமைப்பு வேறெந்த முடிவை எடுக்கலாம்?
நிச்சயமாக அவர்களால் அரசாங்கத்தை ஆதரிக்க முடியாது. அப்படி ஆதரித்தால் அடுத்த வருடம் ஜெனீவாவுக்குப் போக முடியாது. மட்டுமல்ல பொதுத் தேர்தலில் தமது சொந்த மக்களை நோக்கி வரவும் முடியாது. ஆயின் மூன்றாவது தெரிவு எது? வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது விடுவதா? அல்லது இது தொடர்பாக கடந்த வாரத்திற்கு முதல் வாரம் நானெழுதிய கட்டுரைக்கு இணையத்தத்தில்; எழுதப்பட்ட ஒரு பின்னூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டதுபோல தமிழ் மக்கள் வாக்களிக்கச் சென்று அங்கு வாக்குச் சீட்டுகளை சேதமாக்கி அதை ஓர் எதிர்ப்பு நடவடிக்கையாக முன்னெடுக்க வேண்டுமா?
ஆனால், இத்தகைய தெரிவுகளை அதாவது தேர்தலைப் புறக்கணிப்பது அல்லது வாக்களிக்காது விடுவது போன்ற தெரிவுகளை மேற்கு நாடுகள் பொதுவாக ஆதரிப்பதில்லை. சில நெருக்கடியான நிர்ணயகரமான தருணங்களில் வாக்களிக்காமல் விடுவதும் ஒரு ஜனநாயக உரிமைதான் என்பதை மேற்கத்தய நாடுகள் ஏற்றக்கொள்வதில்லை.
இந்தியாவில் நோட்டா எனப்படும் ஒரு தெரிவு கடந்த ஆண்டு தேர்தலில் அனுமதிக்கப்பட்டிருந்தது. அதன்படி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாரையும் ஏற்றுக்கொள்ளாத வாக்காளர்கள் நோட்டா என்ற தெரிவை எடுக்கலாம். கடைசியாக நிகழ்ந்த இந்தியப் பொதுத் தேர்தலில் ஏறக்குறைய 60 இலட்சம் வாக்காளர்கள் இவ்வாறு நோட்டா தெரிவுக்கு வாக்களித்ததை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இது மொத்த வாக்களிப்பில் 1.1 விகிதமாகும். ஆனால். நோட்டா தெரிவு என்பது வாக்களிப்பைப் புறக்கணிப்பதல்ல. வேட்பாளர்களைப் புறக்கணிப்பதே. வாக்களிப்பதன் மூலம் வேட்பாளர்களை நிராகரிக்கும் ஒரு தெரிவு இது.
வாக்களிப்பது எப்படி ஒரு ஜனநாயக உரிமையோ அப்படியே வாக்களிக்காமல் விடுவதும் ஒரு ஜனநாயக உரிமைதான் என்ற வாதத்தை மேற்கு நாடுகள் ஒருவித ஒவ்வாமையோடுதான் பார்க்கின்றன. வாக்களியாமை என்பது ஜனநாயக முறைமையின் ஆன்மாவைப் பலவீனப்படுத்திவிடும் என்பது அவர்களுடைய வாதமாகக் காணப்படுகின்றது.
சிறிய மக்கள் கூட்டங்களின் அச்சங்களைக் கவனத்திற்கொள்வதா அல்லது ஒட்டுமொத்த ஜனநாயக அமைப்பைப் பாதுகாப்பதா என்ற விவாதம் எழும் போதெல்லாம் மேற்கத்திய ஜனநாயக பாரம்பரியமானது சிறிய மக்கள் கூட்டத்தின் அச்சங்களைப் புறக்கணித்த சந்தர்ப்பங்கள் அதிகமுண்டு.
அதேசமயம், ஐ.நா. மன்றத்தில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும்போது முக்கிய நாடுகளே வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத சந்தர்ப்பங்களையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
மிகவும் குறிப்பாக, அண்மை ஆண்டுகளில் ஐ.நா.வில் நிகழும் வாக்கெடுப்புக்களின்போது இப்படியாக வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமை என்பது ஒரு புதிய பலமான போக்காக உருவாகி வருவது ஏற்கனவே அவதானிக்கப்பட்டுள்ளது. ஒரு துருவ உலக ஒழுங்கில் ஏற்பட்ட விலகல்களைப் பிரதிபலிக்குமொரு போக்காகவும் இது பார்க்கப்படுகின்றன. சிரியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு எதிரான ஐ.நா. தீர்மானங்களின் போது இவ்வாறு பல நாடுகள் வாக்களிப்பிலிருந்து விலகியிருந்தமையை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
எனவே, ஓர் உலகப் பொதுமன்றிலேயே சக்திமிக்க நாடுகள் தமது ராஜிய நலன்களை முன்னிறுத்தி வாககெடுப்பிலிருந்து விலகி நிற்கலாம் என்றால், சிறிய பாதிக்கப்பட்ட மக்கள் கூட்டங்கள் உள்நாட்டுத் தேர்தல்களிலும் ஏன் அப்படிப்பட்ட முடிவுகளை எடுக்கக்கூடாது?
இவையெல்லாம், தமிழ்த் தலைவர்கள் மேற்கத்தைய ராஜதந்திரிகளிடம் கேட்கவேண்டிய கேள்விகள். தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்படுவது என்பதை ஒரு புனிதச் சடங்காகப் போற்றும் எவரும் இலங்கைத் தீவில் கடந்த சுமார் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்களுக்கு இழைக்ப்பட்ட அனைத்து அநீதிகளும் இதே தேர்தல் முறைமைக்கூடாகத் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கங்களாலேயே இழைக்கப்பட்டன என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எனினும் இத்தகைய எல்லா விவாதங்களுக்கும் அப்பால் தேர்தல் முறைமையைப் பலப்படுத்த வேண்டும் என்பதே மேற்கு நாடுகளின முடிவாயிருக்கும். தமிழ்க் கட்சிகளிடமும் அதுவே அறுவுறுத்தப்படும்.
மேலும் வெற்றிவாதத்தைத் தோற்கடிக்கக் கிடைக்கும் எல்லா வாய்ப்புக்களையும் பயன்படுத்த வேண்டும் என்றும் மேற்கு நாடுகள் சிந்திக்கின்றன. இது ஒரு சூதாடியின் மனோநிலையைப் போன்றது. வெற்றி கிடைக்குமோ இல்லையோ விளையாடிப் பார்க்கலாம் என்ற ஓர் மனோநிலை. அண்மை ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் அரசாங்கத்தின் வாக்கு வங்கி வீழ்ச்சியுற்று வருவதாகக் கணிப்புகள் கூறுகின்றன. எனவே, எதிர்க்கட்சிகளைப் பலப்படுத்தி அரசாங்கத்தை வீழ்த்தக் கிடைக்கும் எந்தவொரு வாய்ப்பையும் தவறவிட மேற்கு நாடுகள் தயாரில்லை.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி கிடைக்காவிட்டாலும் கூட, அத்தேர்தலை நோக்கி ஒன்று திரட்டப்பட்டு பலப்படுத்தப்பட்ட எதிர்க்கட்சிகளை சில சமயம் பொதுத் தேர்தல் ஒன்று நடக்குமாயிருந்தால் அதில் வெற்றிகரமாகக் களமிறங்கலாம் என்றொரு நம்பிக்கையும் மேற்கு நாடுகளிடம் உண்டு. குறைந்த பட்சம் பாராளு மன்றத்திலாவது எதிர்க்கட்சிகளைப் பலப்படுத்துவதன் மூலம் முன்பு சந்திரிகா – ரணில் காலத்தில் காணப்பட்டதுபோல ஒருவித இரட்டை ஆட்சி முறையையாவது உருவாக்கலாமா என்று ஓர் எதிர்பார்ப்பும் அவர்களிடம் இருக்கக்கூடும். இவை யாவும் ஊகங்களே. எதுவாயினும், இலங்கைத் தீவின் வெற்றிவாதத்தின் பண்பை, அதாவது இனவாதத்தின் பண்பை மேற்கு நாடுகள் சரியாக எடைபோட்டிருக்கின்றனவா இல்லையா என்பதை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளிக்கொண்டு வந்துவிடும்.
அதேசமயம், இந்தியாவும் ஏறக்குறைய இப்படித்தான் சிந்திப்பதாகத் தெரிகிறது. அதாவது, ஆட்சி மாற்றம். மோடியின் அரசாங்கம் அது திட்டமிட்டிருக்கும் பொருளாதார வளர்ச்சியை எட்டுவதாயிருந்தால் அதற்கு பிராந்தியத்தில் பதற்றமற்ற ஓர் அரசியல் சூழல் அவசியம். எனவே, பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகப்படுத்ததாக ஓர் அரசாங்கமே இந்தியாவின் தெரிவாயிருக்கும்.
சீன நீர்முழ்கிகளைத் தனது கடல் எல்லைக்குள் கொண்டுவரும் ஓர் அரசாங்கத்தை விடவும், மேற்கிற்கு அதிகம் விசுவாசமான எதிர்க்கட்சிகளின் கூட்டு ஒப்பீட்டளவில் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையைப் பேண உதவும் என்று இந்தியா சிந்திக்க முடியும்.
பதற்றமில்லாத ஓர் பிராந்திய அரசியலே இப்போது மோடி அரசாங்கத்தின் முதன்மைத் தெரிவாயுள்ளது. அந்த அடிப்படையில்தான் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முடிவுகளும் எடுக்கப்படும். இது தொடர்பில் இந்தியா ஏற்கனவே கூட்டமைப்புத் தலைவர்களுடன் உரையாடியிருப்பதாகவும் நம்பப்படுகின்றுது. அதாவது ஆட்சி மாற்றத்தை ஆதரிக்கும்படி.
ஆனால், அதை இந்தியா வெளிப்படையாகச் செய்யுமா? எதிர்க்கட்சிகளின் வெற்றி வாய்ப்புக் குறித்த சந்தேகங்கள் இருக்கும் வரை இலங்கை அரசாங்கத்தை வெளிப்படையாக முரண் நிலைக்குத் தள்ள புதுடில்லி முயற்சிக்காது.
இது தான் இப்போதுள்ள நிலைமை. இதற்கேற்பவே தெரிவுகளும் அமையும். இதுதவிர வேறு ஒரு தெரிவைக் குறித்தும் தமிழர்களில் ஒரு பகுதியினர் சிந்திப்பதாக அறிய முடிகிறது. அதாவது ஜனாதிபதித் தேர்தலைத் தமிழர்கள் புறக்கணிப்பதற்குப் பதிலாக அதை ஒரு பொதுசன வாக்கெடுப்பாக பயன்படுத்தலாமா? என்ற தெரிவே அது.
ஜனாதிபதித் தேர்தல் எனப்படுவது சிங்கள மக்கள் தங்களுடைய தலைவரை தெரிவு செய்யும் ஒரு தேர்தலே என்று கருதும் மேற்படி தரப்பானது, இதில் தமிழ்க் கட்சிகள் தங்களுடைய பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி தமிழ் மக்களின் ஒட்டுமொத்தக் கோரிக்கைகளுக்கான உத்தியோகப்பற்றற்ற ஒரு ஒப்பம் கோரலாக அத்தேர்தலைப் பயன்படுத்தலாமா? என்றும் சிந்திப்பதாக அறிய முடிகிறது.,
இரண்டு பிரதான வேட்பாளர்களும் போதியளவு பெரும்பான்மையை பெறத்தவறும் போது இரண்டாவது சுற்றுக்கணக்கெடுப்பில் தமிழ் மக்களுடைய வாக்குகளே தீர்மானிக்கும் வாக்குகளாக அமையக் கூடும் என்று ஓர் எதிர்பார்ப்பும் உண்டு.
இது விசயத்தில் தமிழ்க் கட்சிகள் எத்தகைய முடிவுகளை எடுக்கும்? தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பெரும்பாலும் தேர்தலைப் புறக்கணிக்கக்கூடும் என்றே தெரிகிறது. அவர்கள் அப்படி ஒரு முடிவெடுத்தால் அதன் பின் தேர்தலை வேறுவிதமாகக் கையாள்வது என்ற தெரிவுக்கு இடமில்லை. அதேசமயம் கூட்டமைப்பு எத்தயைதொரு முடிவை எடுக்கும்? சக்திமிக்க நாடுகளின் அறிவுறுத்தல்களுக்குக் கீழ்ப்படியும் ஒரு முடிவையா? அல்லது வெளித்தரப்புகளின் நிகழ்ச்சி நிரல்களுக்குள் தமிழ் மக்களின் நிகழ்ச்சி நிரலைக் கொண்டு போய்ப் எப்படி பொருத்துவது என்ற ஒரு முடிவையா?!
(ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்க் கட்சிகள் என்ன மாதிரியான முடிவை எடுப்பார்கள் என்பது தொடர்பில் பத்தியாளர் நிலாந்தனின் தினக்குரலுக்கான இந்தக் கட்டுரை பேசுகின்றது. 

ad

ad