புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 நவ., 2014

வைகோவுக்கு மிரட்டல் விடுத்த பாஜகவின் எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்! எஸ்.டி.பி.ஐ கண்டனம்!

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

மோடியையோ, மத்திய அரசையோ அல்லது ராஜ்நாத் சிங் போன்ற பாஜக தலைவர்களையோ வைகோ விமர்சித்தால் அவர் செல்லும் இடங்களில் பேசிவிட்டு பாதுகாப்பாக திரும்ப முடியாது என பாஜக வின் தேசிய செயலாளர் எச்.ராஜா மிரட்டல் விடுத்துள்ளார். தமிழக அரசியல் தலைவருக்கு ஊடகங்களின் வாயிலாக விடுத்த இத்தகைய மிரட்டல் கடும் கண்டனத்திற்குரியது. நாகரீகமற்றது. இதற்காக பாஜகவின் எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

கலவரம், வன்முறை, மிரட்டல் மூலம் சமூகங்களுக்கிடையே பிரித்தாளும் கொள்கை பூண்டு அரசியல் நடத்திவரும் பாஜகவுடன் கூட்டணி வைத்ததன் பலனாகவே இந்த மிரட்டலை பார்க்கிறோம்.

பள்ளிக் கல்வி, அரசு அலுவலகங்களில் மத்திய அரசின் கட்டாய இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்த்து வரும் நிலையில்தான் மதிமுக தலைவர் வைகோவுக்கு பாஜகவின் எச்.ராஜா இந்த மிரட்டலை விடுத்துள்ளார். எச்.ராஜா அவர்களின் இந்த மிரட்டல் ஒரு குறிப்பிட்ட அரசியல் தலைவருக்கு மட்டும் விடுத்துள்ள மிரட்டல் அல்ல. அது ஒட்டுமொத்த தமிழர்களுக்குமான மிரட்டல்.

பல்வேறு கூட்டங்களில் தந்தை பெரியார் பற்றியும், பல்வேறு சமூக தலைவர்கள் பற்றியும் மோசமான முறையில் அவதூறு பேசிவரும் எச்.ராஜாவே தமிழகத்தில் சுதந்திரமாக சுற்றித்திரியும் போது, மோடி அரசின் தவறான கொள்கைகளை விமர்சிப்பதற்கு எதிராக இத்தகைய நாகரீகமற்ற மிரட்டல் விடுத்திருப்பது கண்டனத்திற்குரியது. 

அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. அரசியலில் விமர்சனங்களை எதிர்கொள்ள திராணியில்லாதவர்கள் ஜனநாக நாட்டில் ஆட்சி, அதிகாரங்களில் அமர்வதற்கு தகுதியற்றவர்களாகவே இருக்க முடியும்.

மத்தியில் ஆட்சி பீடம் என்ற மமதையில் இதுபோன்ற சர்வாதிகார போக்குடன் விடுக்கும் மிரட்டலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். பாஜகவின் வன்முறை அரசியல் தமிழக மக்கள் மத்தியில் ஒருபோதும் எடுபடாது.

தமிழக நலனுக்காக குரல்கொடுக்கும் அரசியல் கட்சி தலைவர் ஒருவருக்கு விடுக்கப்பட்ட இதுபோன்ற அரசியல் நாகரீகமற்ற மிரட்டலுக்கு எதிராக அனைவரும் ஒன்று திரள வேண்டும். சர்வாதிகார போக்குடன் திணிப்பு கொள்கைகள், தமிழர் விரோத கொள்கைகளை முன்னெடுக்கும் பாஜகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ad

ad