புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 நவ., 2014

அரசியல் கைதிகள் விடுதலை; சுவிஸ் தூதருக்கு எடுத்துரைப்பு
இலங்கைக்கான சுவிட்சர்லாந்தின் புதிய தூதுவரிடம் விசாரணைகள் இன்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் எடுத்துக் கூறப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் தெரிவித்தார். 
 
மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ள இலங்கைக்கான சுவிஸ் நாட்டின் புதிய தூதுவர் கீன்ஸ் வோக்கர் நிடர்கோன் உள்ளிட்ட குழுவினர் இன்று காலை வடக்கு மாகாண பேரவைச் செயலகத்தில் வடக்கு மாகாண அவைத்தலைவர், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடினர். 
 
அதன்போதே குறித்த விடயம் தூதுவர் உள்ளிட்ட குழுவினருக்கு சுட்டிக்காட்டியுள்ளதாக சந்திப்பினையடுத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது தெரிவித்தார். 
 
அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
இலங்கைக்கான சுவிஸ் நாட்டின் புதிய தூதுவரிடம் அரசியல் கைதிகள் குறித்தும் முக்கியமாக  எடுத்துக் கூறியுள்ளோம். அதன்படி கடந்த யுத்தகாலத்தில் சந்தேகத்தின் பேரில் இராணுவம் மற்றும் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் எவ்வித விசாரணையும் இன்றி பல ஆண்டுகளாக தொடர்ந்தும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
 
யுத்தம் முடிவடைந்து சமாதானம் ஏற்பட்டுள்ளதாக அரசினால் அறிவிக்கப்பட்டு 5 வருடங்களை கடந்த நிலையிலும் விசாரணைகளோ அல்லது விடுதலைக்கான நடவடிக்கைளோ எவையும் அரசினால் மேற்கொள்ளப்படவில்லை.
 
பயங்கரவாதம் முடிவுக்கு வந்த நிலையிலும் இன்னமும் அவர்கள் பயங்கரவாத சட்டம் உள்ளிட்ட பாரிய சட்டங்களின் அடிப்படையிலேயே நியாயமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
 
அவர்களுக்கு விசாரணைகளை மேற்கொண்டு பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்படுவதே நல்லது என்ற கோரிக்கையினையும் அவர்களிடம் முன் வைத்துள்ளோம்.
 
குறித்த விடயங்கள்  தொடர்பில் உரிய நேரத்தில் உரிய இடங்களுக்கு தெரியப்படுத்துவதாக உறுதியளித்துள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 
 
கலந்துரையாடலை முடித்துக் கொண்ட குழுவினர் வடக்கு மாகாண அவைத்தலைவரது அலுவலகத்தை பார்வையிட்டதுடன் அவை அமைப்பினையும் பார்வையிட்டதுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.
 
இதேவேளை, அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பிலும் கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்ற மாகாண சபையின் மாதாந்த அமர்வில் தீர்மானம் இயற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

ad

ad