புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2014

ஜெ.ஜெ.நகரில் தொடர் கொள்ளை : கொள்ளையடித்த பண கட்டுகள் மீது படுத்து தூங்கியவர் கைது 

சென்னை முகப்பேர் கிழக்கு ஜெ.ஜெ.நகர் நகர் பகுதியில் இந்த ஆண்டு கொள்ளை, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் அதிகளவில் நடந்து உள்ளது. இதில் ஒரு சில குற்ற செயல்களில் ஈடுபட்ட திருடர்கள் சிக்கினாலும், தொடர்ந்து சங்கிலி தொடராக கொள்ளை, வழிப்பறி போன்ற செயல்களில் நூதன முறையில் கலக்கி வரும் கொள்ளையர்கள் போலீசார் கண்ணில் சிக்காமல் இருந்து வந்தனர்.

இதுபோன்ற கொள்ளையர்கள் பெரும்பாலும் இளைஞர்களாக இருப்பதாக போலீசாருக்கு தெரிய வந்தது. அவர்களை பொறி வைத்து பிடிக்க போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்பேரில் திருமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் சுப்ரமணியன் தலைமையில் ஜெ.ஜெ.நகர் போலீசார் தனிப்படை அமைத்து கடந்த சில மாதங்களாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஜெ.ஜெ.நகரில் நடந்த ஒரு கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய 2 இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் போல நடந்து கொண்டு பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில் பதுங்கி இருப்பதாக அண்ணாநகர் போலீஸ் துணை கமிஷனர் மனோகரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் மாறுவேடத்தில் காட்டுப்பாக்கத்தில் உள்ள ஒரு விடுதிக்கு சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது அந்த விடுதியில் உள்ள ஒரு அறையில் பணக்கட்டுகளை பரப்பிவிட்டு அதன் மேல் ஜாலியாக ஒரு வாலிபர் படுத்து இருந்தார்.

அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர், கொடுங்கையூர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த ராஜ்குமார்(வயது 29) என்பதும், அவர் தனது கூட்டாளி ஒருவருடன் சேர்ந்து சென்னை ஜெ.ஜெ.நகர், நொளம்பூர், திருமங்கலம், அண்ணாநகர், வேளச்சேரி, வில்லிவாக்கம், பள்ளிக்கரணை, சிட்லபாக்கம் போன்ற பகுதிகளில் தொடர் கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது.

இதையடுத்து ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் அவரது கூட்டாளியான கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மேலமாத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ்(28) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

கைதான இவர்கள் மீது 25–க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. மேலும் 2 பேரிடம் இருந்தும் 40 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். கொள்ளை அடித்த பணத்தில் 2 பேரும் மது, மாது என உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.

இவர்களில் ராஜ்குமார், கல்லூரி மாணவர் போன்று தோற்றம் அளிப்பதால் அவர், தான் கொள்ளையடித்த பணம், ஆடம்பர மோட்டார் சைக்கிளை காட்டி இளம்பெண்களை மயக்கி அவர்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தார். பண்ணை வீடு, பீச் போன்ற விடுதிகளுக்கு அழைத்து சென்று அவர்களுக்கு விருந்து வழங்கி கும்மாளம் போட்டதும் தெரியவந்தது.

இளம் வயதில் அனுபவிக்க வேண்டிய அனைத்தையும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரிந்தது. ராஜ்குமார் தான் தங்கி இருந்த விடுதி அறையில் கொள்ளை அடித்த பணகட்டுகளின் மீது படுத்து திளைத்தபோது தான் போலீசாரிடம் மாட்டிக் கொண்டார்.

இவர்கள் சென்னை மட்டுமின்றி தமிழகத்தில் மேலும் பல இடங்களில் தங்கள் கைவரிசையை காட்டி உள்ளனர். இவர்களுடன் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளதாக தெரிகிறது. அவர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கைதான 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்திய பிறகு புழல் சிறையில் அடைத்தனர்.

ad

ad