புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 டிச., 2014

13வது திருத்தம் நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களையே மேலும் வலுவாக்குகின்றது!- வடமாகாண முதல்வர்
வடமாகாணசபையை உருவாக்க உதவிய 13வது திருத்தச் சட்டம் அதிகாரப் பகிர்வை அடியொட்டியே இயற்றப்பட்டது. ஆனால் 13வது திருத்தச்சட்டம் நிறைவேற்று அதிகாரங் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் வலுவடையச் செய்வதாகவே காணக் கூடியதாக உள்ளது. இவ்வாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரினால் சமர்ப்பிக்கப்படும் 2015ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தின் அறிமுக உரையினை நிகழ்த்தும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எமது சபை வடமாகாணத்தை நிர்வகிக்கத் தொடங்கி ஒரு வருடமும் இரண்டு மாதங்களும் ஆகின்றன. 2015ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தைச் சமர்ப்பிக்க முன்னர் ஒருசில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளல் அவசியம் என்று எண்ணுகின்றேன்.
எமது வடமாகாணம் பாரிய போரினால் பாதிக்கப்பட்ட ஒரு பிரதேசம். 2009ம் ஆண்டு போர் முடிந்திருந்தாலும் போரின் தாக்கம் பல வருடங்களுக்குத் தொடரும் என்பதை நாங்கள் மறக்கக் கூடாது. பல சமயங்களில் பல தலைமுறைகளை இத் தாக்கம் பாதித்திருக்கின்றது என்பதையும் நாங்கள் மனதில் வைத்திருக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட எமது மக்கள் யார் யார் என்று ஆராய்ந்தால் குடும்பத் தலைவர்களைப் பறிகொடுத்தவர்கள், விதவைகளைத் தலைவர்களாகத் தற்பொழுது கொண்ட குடும்பத்தவர்கள், தாய் தந்தையரை இழந்தவர்கள், குடும்பத்தில் ஓரிரு அல்லது பல நபர்களைப் பறிகொடுத்தவர்கள், போரில் காயமடைந்தவர்கள், உடல் உறுப்புக்களின் செயலிழந்தவர்கள், காணாமற் போனோரின் குடும்பத்தவர்கள், சிறையில் பலவருடங்களாக வாடுவோரின் குடும்பத்தவர்கள், முன்னைய போராளிகளின் குடும்பத்தவர்கள், போரினால் சகலதையும் இழந்து நற்றாற்றில் தள்ளி விடப்பட்டிருப்பவர்கள், வாழ்வாதாரம் இழந்து வாடுபவர்கள், தமது வாழ்விடங்களைப் பறிகொடுத்துப் பரிதவிப்பில் வாழ்பவர்கள் - இவ்வாறு பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது.
இவர்கள் சார்பாக நாங்கள் பொறுப்பான முறையில் தரவுகளைப் பெற்றுள்ளோமா என்பது சந்தேகத்திற்கு இடமாக உள்ளது. 2009ல் இருந்து 2013 வரையில் வெளிநாட்டுப் பணங்களுடனும், சர்வதேச நிறுவனங்களின் கடன்களுடனும் அரசாங்கம் உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் ஈடுபட்டிருப்பினும், இந்தியா போன்ற நாடுகளின் உதவியுடன் வீடமைப்பில் ஈடுபட்டிருப்பினும், ஒரு சில சுய வாழ்வாதாரத் திட்டங்களில் ஈடுபாடு காட்டியிருப்பினும், பாதிக்கப்பட்டோர் சம்பந்தமான போதுமான விபரப் பட்டியலைப் பெறுவதற்கோ, அவர்களின் தனிப்பட்ட தேவைகளைக் கணித்தெடுப்பதற்கோ போரின் பின்னரான வடமாகாணத்தின் தேவைகளைக் கணித்தெடுப்பதற்கோ தவறிவிட்டது.
இதனால்தான் நான் பதவிக்கு வந்த ஒருசில மாதங்களிலேயே ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதியிடம் சென்று எமது தேவைகள் பற்றிய பூரண கணிப்பறிக்கையையும் அதன் பின்னரான புனர்நிர்மாண வழிமுறைகளையும் தெரிந்து கொள்ள ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
அவரும் அதற்கு இசைந்தாரெனினும் சில கட்டாயங்களின் நிமித்தம் அச்செயற்பாடு பற்றிய ஒரு சிறு அலகை மட்டும் பற்றியதான ஒரு உடன்பாட்டை அரசாங்கத்துடன் மட்டும் இயற்றிக் கொண்டார். வடமாகாண சபையை அதில் ஈடுபடுத்தவில்லை.
அவர் ஏற்றுக் கொண்டது ஜனாதிபதியின் செயலணியின் உதவியுடனான மனிதாபிமானக் கணிப்புக்களே. எமக்குத் தெரியப்படுத்தாமலே அவர் இந்தக் கைங்கரியத்தில் ஈடுபட்டுள்ளார். தற்பொழுது தான் அவரின் மனிதாபிமான வழிமுறை பற்றிய ஆராய்வு அறிக்கை வெளிவர ஆயத்தமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆனால் சமூகத்தின் மனோநிலை பற்றிய ஆராய்வு, அதாவது உள ஊனமுற்றவர்கள் பற்றிய ஆராய்வு, பிறப்பின் மூலமாகவும் நோயின் மூலமாகவும் வலுவிழந்தோர் சம்பந்தமான ஆராய்வு வாழ்வாதார அபிவிருத்தி பற்றிய ஆராய்வு, தொழில் வாய்ப்புக்கள் பற்றிய ஆராய்வு, போரின் பின்னரும் தொடர்ந்து நிலைகொண்டிருக்கும் பல்லாயிரம் படையினர் முகாமிட்டிருக்கும் சூழலில் சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் தாக்கம் பற்றிய ஆராய்வு, சமூகத்தின் கலாசாரச் சீரழிவுகள் பற்றிய ஆராய்வு, தொடரும் வன்முறைக் கலாசாரங்கள் பற்றிய ஆராய்வு போன்வை பற்றி முழுமையான ஆராய்ச்சி நடத்தப்படவில்லை.
இவை சார்பாக நாம் கேட்ட செலவீனங்களுக்காகத் தேவையான நிதியமும் எமக்குத் தந்துதவப்படவில்லை. அதாவது எம்மைப் போரினால் பாதிக்கப்படாத பிரதேசங்களுடன் வைத்துக் கணித்து அவ்வாறான நிதி உதவிகளே எமக்கும் தரப்பட்டு வந்துள்ளன. மேலதிகமாகக் கேட்டவை கொடுக்கப்படவில்லை. இதனால் பலவித முன்னேற்ற நடவடிக்கைகள் ஸ்தம்பித்த நிலையில் உள்ளன.
இவற்றிற்கு மேலதிகமாக எம் சபையை உருவாக்க உதவி செய்த பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் வலுவிழந்து காணப்படுகிறது. வலுவற்றே காணப்படுகிறது என்று கூடக் கூறலாம்.
மாகாணசபை வழிமுறையானது அதிகாரப் பகிர்வை அடியொட்டியே இயற்றப்பட்டது. ஆனால் பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் நிறைவேற்று அதிகாரங் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் வலுவடையச் செய்வதாகவே காணக் கூடியதாக உள்ளது.
ஆளுநர் அத்தகைய ஜனாதிபதியின் முகவராகச் செயற்படுகின்றார். மாகாணசபையால் எந்த ஒரு நியமனத்தையும் ஆளுநரின் அனுமதியின்றி வழங்க முடியாது. வடமாகாண முதலமைச்சரின் கருத்தொருமித்தலுடன் பிரதம செயலாளரை நியமிக்க வேண்டும் என்று சட்டம் கூறினாலும் ஜனாதிபதி இது பற்றித் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்வதை எவருந் தட்டிக் கேட்க முடியாத நிலையே தற்பொழுது நிலைபெற்றிருக்கின்றது.
இராணுவமே தொடர்ந்து வடமாகாணத்தை நிர்வகித்து வருவதான ஒரு நிலையை போரின் போதான வடமாகாண யாழ். படைத்தலைவரும் தற்போதைய வடமாகாண ஆளுநருமான இரண்டாம் பதவிக்காலம் பெற்றுள்ள ஆளுநர் ஏற்படுத்தி வருகின்றார்.
எமது அலுவலர்கள் அப்பேர்ப்பட்ட ஒரு ஆளுநரின் அதிகாரத்திற்கு அடிபணிந்தே போக வேண்டிய ஒரு நிலையில் உள்ளார்கள். எமது பிரதிநிதிகளிலும் பார்க்க ஆளுநரின் ஆக்ஞைகளுக்கே அவசிய மரியாதை கொடுக்கின்றார்கள்.
அதே நேரத்தில் அலுவலர்களின் அதிகார வளம், அனுபவ வளம் ஆகியன அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. உரம் மிக்க அதிகாரிகளை உட்கொண்டு வருவதற்கு உரிய கட்டமைப்பொன்றும் உருவாக்கப்படவில்லை.
அலுவலர் பற்றாக்குறை நியதிச் சட்ட ஆக்கத்தையும் நிலைகுலைய வைத்துள்ளது.
எமது ஒரு வருட கால அனுபவமானது பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் எமது வடகிழக்கு மாகாணத் தமிழ்ப் பேசும் மக்களுக்கு விடிவு காலத்தை ஏற்படுத்தக் கூடும் என்று கூறிய சிலரின் கனவைச் சிதைப்பதாகவே அமைந்துள்ளது.
அரசியல் ரீதியாக அடிபணிந்து எமது உரிமைகளைப் பெற நாங்கள் தயாராக இல்லை என்பதையும் இத்தருணத்தில் கூறி வைக்கின்றேன்.
 பல விதங்களிலும் மத்திய அரசாங்கந் தனது ஆதிக்கத்தை மேலோங்கச் செய்யவே சகல நடவடிக்கைகளையும் எடுத்து வந்துள்ளது.
நாடெங்கிலும் குடும்ப ஆட்சியும் மத்தியின் வல்லாட்சியும் நிலை பெற்றிருக்கின்றதென்றால் வடமாகாணத்தில் அது சர்வாதிகாரத்திற்கு இடங்கொடுத்து வருவதாகவே காணக் கூடியதாக இருக்கின்றது.
எமது மக்களின் தனித்துவத்தை, தன்மானத்தை, தகைமைகளைத் தகர்த்தெறியவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
எமது பாரம்பரிய இனப்பரம்பல் பரிதாபகரமாக மாற்றியமைக்கப்பட்டு வருகின்றது.
தெற்கில் இருந்து எமது தமிழ் பேசும் மக்கள் எவ்வாறு வன்முறைகளினால் அப்பிரதேசங்களை விட்டு வெளியேற்றப்பட்டார்களோ அதே போல் வடகிழக்கில் வாழ்ந்து வரும் தமிழ் பேசும் மக்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறவும் வெளியார்கள் வந்து குடியமர வழி அமைக்கவும் கட்டாயப்படுத்தப்பட்டு வருகின்றார்கள்.
இப்பேர்ப்பட்ட சூழலில் தான் எமது நிதி ஒதுக்கீட்டுச் சட்டம் சமர்ப்பிக்கப்படுகிறது.

ad

ad