புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 டிச., 2014

இருண்ட யுகத்தை மறந்துவிடுங்கள் ஒளிமயமான எதிர்காலத்துக்காக ஒன்றிணைவோம்

* நீங்கள் கெளரவமாக வாழும் சூழலை தீர்மானிக்கப்போகும் தேர்தல் இது
* 31 த.தே.கூட்டமைப்பினர் ஜனாதிபதி முன்னிலையில் அரசுடன் இணைவு
முல்லைத்தீவில் ஜனாதிபதி
வடபகுதி மக்களின் வாழ்வில் மேலும் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க தன்னுடன் கைகோர்க்குமாறு வடபகுதி மக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அழைப்பு விடுத்தார்.
பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலை இங்கு ஏற்பட
இடமளிக்க முடியாது என்று குறிப்பிட்ட அவர், சகல இன, மத மக்களும் ஒன்றாக கைகோர்த்து முன்னோக்கிச் செல்லும் சமுதாயத்தை உருவாக்கி வருவதாகவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலையொட்டி முல்லைத்தீவு, முல்லியவளை விநாயகர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்தக் கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு கரகோசமெழுப்பி ஜனாதிபதியை வரவேற்றனர். இதன் போது 31 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் அரசுடன் இணைந்தனர்.
ஜனாதிபதி மேலும் பேசுகையில், நாடு 30 வருடமாக இருளில் மூழ்கியிருந்தது. நீங்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கினீர்கள். உங்களது வாழ்க்கை, பிள்ளைகளுடைய வாழ்க்கை மற்றும் அவர்களின் எதிர்காலம் குறித்து நம்பிக்கையின்றி இருந்தீர்கள் அந்த நிலை மாறி அச்சமின்றி வாழும் சூழல் உருவாக்கப் பட்டுள்ளது.
கடந்த இருண்ட யுகத்தை மறந்து விடுங்கள். உங்களுக்கு வளமான எதிர்காலமுள்ளது. அந்த எதிர்காலத்தை நோக்கி நீங்கள் பயணிக்க வேண்டும்.
மாகாண சபை தேர்தலில் உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு வாக்களித்தீர்கள். ஆனால் இது முழு நாட்டிற்கும் பொதுவான தேர்தலாகும். நீங்கள் கெளரவமாக வாழ்வது குறித்து இந்தத் தேர்தலில் தான் முடிவாகப் போகிறது. திட்டமிட்ட வகையில் நாம் இப்பகுதியை முன்னேற்றினோம். குறுகிய காலத்தில் மின்சார வசதி, பாதை, பாடசாலை, ஆஸ்பத்திரி வசதிகள் வழங்கப்பட்டன. அரச சேவையின் பொற்காலம் இதுவாகும். 15 இலட்சமாக அரச சேவை அதிகரிக்கப்பட்டது.
அரச சேவையானது மக்களின் கண்ணீரை துடைக்க வேண்டிய உன்னத சேவையாகும்.
வரவு செலவுத் திட்டத்தினூடாக 1 1/2 இலட்சம் இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அதற்கு இப்பகுதி மக்களும் தயாராக வேண்டும். அரச சேவைக்கான கதவுகள் உங்களுக்காக திறந்தே இருக்கிறது.
பொய் பிரசாரங்களுக்கு நீங்கள் ஏமாறக்கூடாது. சகல இன, மத மக்களும் ஒன்று போல் கைகோர்த்து செல்லும் சமுதாயத்தை உருவாக்கி வருகிறோம். நாம் இன ரீதியாகப் பிரிந்து செயற்பட்டால் நீங்களோ நாடோ முன்னேறாது. எமது நாட்டை பின்னோக்கி நகர்த்த சிலர் முயற்சிக்கிறார்கள். ஈராக், எகிப்து, லிபியா போன்ற நாட்டு நிலைமைகளை பாருங்கள். நாம் பழைய யுகத்திற்குச் செல்ல தயாராக இல்லை.
பாகிஸ்தானில் 104 அப்பாவி பிள்ளைகள், ஆசிரியர்கள், அதிபர்கள் மத தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார்கள். பாகிஸ்தான் பிரதமருக்கு தொலைபேசியூடாக நான் எமது அனுதாபத்தை முன்வைத்தேன். இந்த நிலை எமது நாட்டில் ஏற்பட இடமளிக்க முடியாது. கடந்த காலத்தை மறந்து அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். தத்தமது மத, கலாசாரங்களை மதித்து வாழ முன்வர வேண்டும். எதர்கால சந்ததிக்காக எமது நாட்டை பாதுகாக்க வேண்டும்.
இங்குள்ள தலைவர்களின் பிள்ளைகள் இங்கு வாழவில்லை. அவர்களுக்கு உங்களுடைய பிள்ளைகள் குறித்து கரிசனை கிடையாது. ஆனால் சகல இன பிள்ளைகளையும் பாதுகாக்கும் பொறுப்பு எனக்கிருக்கிறது. சகல பிள்ளைகளையும் பாதுகாத்து அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க எம்முடன் கைகோர்க்குமாறு கோருகிறேன் என்றார். தமிழில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது.
உங்கள் முன்னிலையில் பேசுவது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். 30 வருட இருண்ட காலம் இன்றில்லை. கடந்த தேர்தலில் இந்த தேசத்தை கட்டியெழுப்புவதற்காக என்னை தெரிவு செய்தீர்கள். இந்த நாட்டில் எங்கும் போய் வரலாம்.
எங்கு சென்றாலும் நாம் செய்த அபிவிருத்திப் பணிகளை காணலாம். இந்த வேகத்தில் சென்றால் நாடு இன்னும் முன்னேறும். வட மாகாண அபிவிருத்திக்கு பல மில்லியன் ரூபா செலவிட்டு வருகிறோம். புனர் வாழ்வுப் பணிகள் இடம்பெறுகின்றன. யாழ் தேவி மீண்டும் கம்பீரமாக போகிறது. யாழ் தேவியை மாங்குளத்திலும் நிறுத்த உத்தரவிட்டுள்ளேன்.
இனவாத அரசியல் மிக மோசமானது. சகோதர பாசமே தேவை. புத்தியுடன் செயற்படுவோம்.
இனவாதம் பேசும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களின் பிள்ளைகள் வெளிநாட்டில் கற்கையில் அப்பாவி மக்களின் பிள்ளைகள் இங்கு கற்கிறார்கள். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிந்தியுங்கள்.
30 வருட இருண்ட யுகம். ஆனால் அபிவிருத்தி 5 வருடம், வடக்கின் வசந்தம் உங்கள் வசந்தம், உங்கள் பிள்ளைகளின் வசந்தம். உங்கள் பிரதேசத்தின் வசந்தம் நான் எப்பொழுதும் உங்களை பாதுகாப்பேன். நீங்கள் எங்களை நம்பலாம். உங்கள் எதிர்காலம் மேலும் ஒளிமயமாக என்னுடன் கைகோருங்கள் பின்னோக்கி போகாமல் முன்னோக்கிச் செல்வோம். வெற்றியின் சின்னம் வெற்றிலை சின்னம் என்றார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர், பிரதி அமைச்சர் பிரபாகணேசன், மாகாண சபை உறுப்பினர் வடிவேல் சுரேஷ் உட்பட பலரும் உரையாற்றினர்.

ad

ad