புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 டிச., 2014

கிரானைட் கொள்ளையர்கள் விழுங்கிய கிராமங்கள்: சகாயம் ஆய்வில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!

கிரானைட் கொள்ளை நிறுவனங்களால் பல கிராமங்கள் முழுவதும் காணாமல் போன அதிர்ச்சித் தகவல்கள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் நடத்திய ஆய்வில் வெளிவந்துள்ளன.

 மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் கிரானைட் குவாரிகளில் நடந்த முறைகேடுகள் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தொடர்ந்து பல கட்ட  ஆய்வை தீவிரமாக  நடத்தி வருகிறார்.

திருமோகூர், புதுத்தாமரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சகாயம் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். புதுத்தாமரைப்பட்டியில் போலீசாருக்கு கொடுக்கப்பட்ட வீட்டுமனைகள் அபகரிக்கப்பட்ட இடத்தையும்  சகாயம் பார்வையிட்டார். பின்னர் இதுகுறித்து விரிவான அறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் திருமோகூர், திண்டியூர், சிவலிங்கம் உள்ளிட்ட பகுதியில் கண்மாய்கள், குளங்கள், ஓடைகள், பாசன வாய்க்கால்கள் அழிக்கப்பட்டு அதில் கிரானைட் கற்கள் போட்டு மூடப்பட்டு கிடந்தன.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் சகாயத்திடம் புகார் தெரிவித்தனர். அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பல்வேறு கேள்விகளை சகாயம் கேட்டார்.

கிரானைட் தொழிலுக்காக டி.குண்டங்கால், சிவலிங்கம் உள்ளிட்ட கிராமங்களில் குடியிருந்தவர்களை வெளியேற்றி விட்டு கிராம சுவடுகளே தெரியாத வண்ணம் வீடுகளை இடித்து தரை மட்டமாக்கியது மற்றும் அரசு கட்டிடங்களை இடித்தது குறித்து பொதுமக்கள் சகாயத்திடம் கண்ணீர் மல்க புகார் தெரிவித்தனர். இது குறித்தும் முழுமையான அறிக்கை அளிக்கும்படி அதிகாரிகளுக்கு சகாயம் உத்தரவிட்டார்.

கிரானைட் குவாரிகளால் கிராம பொருளாதாரமே சீர்குலைக்கப்பட்டு அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் அழிக்கபட்டுள்ளதை  சுட்டிக்காட்டி அதிகாரிகள் மத்தியில் பேசிய சகாயம், கிரானைட் குவாரிதாரர்களுக்கு அரசு நிலங்களில் கழிவுகளைக்  கொட்டவும், பாலம் போடவும் யார் அதிகாரம் கொடுத்தது? என்று கேள்வி எழுப்பினார்.
கிரானைட் நிறுவனங்களால் அழிக்கப்பட்ட குளங்கள், கண்மாய்கள், நீர்நிலைகள், விவசாய நிலங்கள், கிராமங்கள்  உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.
புதுத்தாமரைப்பட்டியை சேர்ந்த பெண் உஷா, சகாயத்தை சந்தித்து தனது 3 வயது மகள் கோபிகா கிரானைட் குவாரிக்காக நரபலி கொடுக்கப்பட்டாள். ஆனால் போலீஸ் இது குறித்து சரியாக விசாரிக்கவில்லை என்று கூறி அழுதார். அவரிடம் இது குறித்து முழுமையான விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்படும் என்று சகாயம் உறுதி அளித்தார்.

இன்றும் கீழவளவு பகுதியில் உள்ள கிரானைட் குவாரிகளில் சகாயம் குழுவினர் ஆய்வு நடத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad