புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 டிச., 2014

சம்பாதித்துவிட்டுத்தான் அரசியலுக்கு வந்துள்ளேன்.. சிலரைப்போல அல்ல!மீண்டும் புறப்பட்டுவிட்டார் குஷ்பு. தள்ளி வைத்தால் அரசியலில் இருந்தே ஒதுங்கித் தலைமறைவாகி விடுவார் என்று சொல்லப்பட்ட குஷ்பு, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அங்கும் அமைதியாக இருக்க முடியுமா அவரால்?
குஷ்பு பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம் விருதுநகரில் ஏற்பாடு செய்யப்பட்டது
. காமராஜர் பிறந்த ஊரில் இருந்து அவரது அரசியல் பயணம் தொடங்கிவிட்டது. இதனை உணர்ந்த தொண்டர்கள் ஏராளமாகக் கூடி இருந்தார்கள்.
விழாவில் குஷ்புதான் ஸ்டார் பேச்சாளர். தன்னைப் பற்றிய சுய அறிமுகத்துடன் பேச்சைத் தொடங்கினார். ''1987-ல் தமிழ் சினிமாவுக்கு வந்தேன். பிறகு, தமிழகத்தின் மருமகளானேன். என்னை வாழவைத்த தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலில் இறங்கினேன். பெருந்தலைவர் காமராஜர் பிறந்து வளர்ந்த ஊரில் பேசுவதைப் பெருமையாகக் கருதுகிறேன். நான் கட்சி மாறியதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு. அதையெல்லாம் சொல்ல விரும்பவில்லை. நான் சினிமாவில் பெயரும், புகழும் சம்பாதித்து குடும்பத்தை செட்டில் செய்து விட்டுத்தான் கட்சியில் சேர்ந்தேன். சிலரைப்போல் அரசியலில் சேர்ந்து சம்பாதித்து குடும்பத்தை நடத்த கட்சியில் சேரவில்லை. இந்தியாவில் உள்ள எல்லா கட்சிகளுக்கும் தாய் வீடு காங்கிரஸ்தான். பெருந்தலைவர் காமராஜர் பற்றி பேசும் உரிமை காங்கிரஸ் கட்சியைத் தவிர, வேறு யாருக்கு இருக்கிறது. காமராஜர் பற்றி ஆயிரம் ஆண்டுகளுக்கு பேசுவதற்கு அவரது பல சாதனைகள் இருக்கின்றன. 1914-ல் வறுமை காரணமாக தலைவர் காமராஜரை பள்ளியில் இருந்து நிறுத்தினார்கள். பிறகு அவர் துணிக்கடையில் சேல்ஸ்மேன் வேலைக்குச் சேர்ந்தார். அதன்பின் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். சுதந்திரத்துக்காகப் போராடினார். விடுதலைக்குப் பிறகு தமிழக முதல்வர் ஆனார். ஆனால், இப்போது நிலைமை என்ன? முதலில் முதல்வர் ஆகுகிறார்கள். பிறகு சேல்ஸ்மேனாகி விடுகின்றனர்.
பி.ஜே.பி மக்களிடம் பொய் பிரசாரம் செய்து ஆட்சியைப் பிடித்துள்ளது. மோடிமஸ்தான் வேலை காட்டி ஆட்சியைப் பிடித்த நரேந்திர மோடி, மக்களைப் பற்றிச் சிந்திக்காமல் உலக நாடுகளுக்கு சுற்றுலா சென்று வருகிறார். தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்ஷேவுக்கு ஹாப்பி பர்த்டே சொல்கிறார். இன்னும் நரேந்திர மோடியும், ராஜபக் ஷேவும் 'ரம்மி’ விளையாடாததுதான் பாக்கி. காங்கிரஸ் தோற்றாலும் மீண்டு வரும். யானை கீழே விழுந்தால் எழுந்திருக்க நேரமாகும். ஆனால், பந்தயக் குதிரை கீழே விழுந்தால், மறு நிமிடமே துள்ளி எழுந்துவிடும். காங்கிரஸ் கட்சி பந்தயக் குதிரை. அது சீக்கிரம் எழுந்து நாட்டை காக்கும். சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையில் மாநில முதல்வர்கள் மீட்டிங் நடந்தது. தமிழகத்தில் இருந்து சென்றவர் மீட்டிங்கில் அவரது கட்சித் தலைவர் போட்டோவை மடியில் வைத்து உட்கார்ந்துகொண்டு இருந்தாராம். இந்தக் கொடுமை தமிழகத்தில் மட்டும்தான் நடக்கிறது. தமிழகத்தில் 2016-ல் காங்கிரஸ் ஆட்சி அமைய எல்லோரும் பாடுபடுவோம். ஜெய்ஹிந்த்'' என்று முடித்தார்.
காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ''காங்கிரஸ் கட்சிக்கு குஷ்பு மூலம் புதிய சக்தி கிடைத்துள்ளது. குஷ்பு காங்கிரஸில் சேர்ந்தது பற்றி விமர்சித்து எழுதுபவர்கள் ஜெயலலிதாவை அப்படி எழுதுவார்களா? காங்கிரஸ் கட்சியை இந்திய நாட்டில் இருந்தே விரட்ட வேண்டும் என்று ஜெயலலிதா தேர்தலில் ஆவேசமாகப் பேசினார். ஆனால் அவரே சிறைக்குள் கம்பி எண்ண வேண்டிய நிலைமை ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியை இழிவாகப் பேசுபவர்கள் எல்லோருக்கும் இந்த நிலைமைதான் ஏற்படும். தமிழகத்தில் மீண்டும் 2016-ல் காங்கிரஸ் ஆட்சி அமையும். அப்படி இல்லையென்றால்கூட நம் தயவு இல்லாமல் எந்தக் கொம்பனாலும் ஆட்சியை பிடிக்க முடியாது'' என்றார்.
மொத்தத்தில் குஷ்பு வருகை காங்கிரஸ் கட்சிக்குக் கொஞ்சம் பலத்தைக் கொடுத்து இருக்கிறது!

ad

ad