புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜன., 2015

வடமாகாணசபையின் 23வது அமர்வு! பல சுவாரஷ்யமான சம்பவங்களுடன் முடிவடைந்தது!


வடமாகாணசபையின் 23வது அமர்வு இன்றைய தினம் மாகாணசபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இன்றைய அமர்வில், ஆளுநருக்கான நிதி ஒதுக்கீடு, ஆளுநரின் பங்களா பற்றிய சர்ச்சை வல்வெட்டித்துறை நகரசபை கலைப்பு, எதிர்க்கட்சி தலைவரின் திடீர் பல்ட்டி போன்ற சம்பவங்கள் பல நடைபெற்றிருக்கின்றன.
மாகாண முதலமைச்சர் மற்றும், அவைத்தலைவர் ஆகியோர் தலைமையில் இன்றைய தினம் குறித்த அமர்வு நடைபெற்றிருந்தது. இன்றைய அமர்விற்கு முன்னதாக 2015ம் ஆண்டை வரவேற்கும் வகையில் வடமாகாண கல்வி கலாச்சாரம், பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஆண்டை வரவேற்கும் நிகழ்வுடன் இன்றைய அமர்வு ஆரம்பமானது.
ஆளுநருக்கு நிதி ஒதுக்கீட்டுக்கு சபையில் எதிர்ப்பு.
கடந்த 2014.12ம் மாதம் 17ம்,18ம்,19ம் திகதிகளில் நடைபெற்ற 2015ம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்ட விவாதத்தில் வடமாகாண ஆளுநருக்கு 8மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியமைக்கு சபையில் கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் அது தொடர்பில் நிர்வாக ரீதியான ஆய்வினை மேற்கொள்ளுமாறு அவைத்தலைவரிடம் கேட்கப்பட்டது. இதற்கமைய அவைத்தலைவர் தனது ஆய்வின் முடிவினை இன்றைய தினம் சபைக்கு சமர்ப்பித்தார்.
இதன்போது ஆளுநருக்கு கிழக்கு மாகாணத்திலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டிய அவைத்தலைவர், கடந்த 2014ம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்திலும் ஆளுநருக்கு நிதி ஒதுக்கியமைக்கான பிரச்சினை எழுந்த நிலையில், அது தொடர்பில் அமைச்சர் வாரியம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. என்பதையும் சுட்டிக்காட்டினார்.
மேலும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு ஈடாக ஆளுநருக்கும் நிதி ஒதுக்கப்பட்டமை தொடர்பிலும் சபையில் அவைத்தலைவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து ஆளுநருக்கு கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த பங்களாக்கள் மூடப்பட்டமை தொடர்பிலும், கொழும்பில் உள்ள பங்களா தொடர்பில் புதிய ஆளுநருடன் பேசி தீர்மானிக்கலாம் எனவும் சபையில் அவைத்தலைவர் கூறினார்.
இந்நிலையில் ஆளுநருக்கு நிதி ஒதுக்கப்படுவதை இன்றைய தினமும் மாகாணசபை உறுப்பினர் களான சிவாஜிலிங்கம், விந்தன், சர்வேஸ்வரன் ஆகியோர் எதிர்த்தனர்.
மேலும் முதலமைச்சரும் விடயம் தொடர்பாக பேசுகையில் மக்கள் பிரதிநிதிகளுக்கே பிரமாண அடிப்படையிலான நிதி ஒதுக்கப்படவேண்டும். ஆனால் ஜனாதிபதியின் பிரதிநிதியான ஆளுநருக்கு எவ்வாறு நிதி ஒதுக்க முடியும்? என கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் ஆளுநருக்கு ஒதுக்கப்பட் ட நிதியை மாகாண பேரவை செயலகத்துடன் இணைப்பது. ஆளுநரின் பங்களாக்கள் தொடர்பில் புதிய ஆளுநருடன் பேசுவது எனவும், தீர்மானிக்கப்பட்டு அவைத்தலைவரின் இறுதி அறிக்கை சபையில் நிறைவேற்றப்பட்டது.
திடீர் பல்ட்டி அடித்த எதிர்க்கட்சி தலைவர்.
கடந்த காலங்களில் ஆளுநருக்கான நிதி ஒதுக்கீட்டை ஆதரித்தும், சபையில் இல்லாத ஆளுநர் குறித்துப் பேசக்கூடாதென கூறியும் வந்த எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா இன்றைய தினம் திடீர் பல்ட்டி அடித்து ஆளுநர் தனக்கென நிதியம் ஒன்றை உருவாக்கி அதன்மூலம் 15தொடக்கம் 20மில்லியன் ரூபா நிதியை வங்கிகளிடமிருந்து வட்டியாக பெறுவதாகவும், மற்றைய மாகாணங்களில் இவ்வாறு ஆளுநருக்கு விசேட நிதி ஏற்பாடுகள் இல்லை. எனவும் சுட்டிக்காட்டினார்.
சிவாஜிலிங்கத்தின் பிரேரணை ஒத்திவைப்பு.
தமிழர் தாயகத்தில் நடைபெற்றது. ஒரு திட்டமிட்ட இன அழிப்பு எனக் கோரும் பிரேரணை இம்முறையும் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. குறித்த பிரேரணையினை ஒத்ததாக ஒரு பிரேரணை முதல மைச்சரினால் உருவாக்கப்படும் நிலையில் அது அடுத்த அமர்வு நடைபெறும் எதிர்வரும் 10ம் திகதி சமர்ப்பிக்கப்படும் என சபையில் கூறப்பட்டது. இதனையடுத்து அவைத்தலைவரின் கருத்தை சிவாஜிலிங்கம் ஏற்றுக்கொண்டார்.
மேலும் ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் இனப்பிரச்சினை தீர்வு விடத்தில் மத்தியஸ்தம் வகிக்கவேண்டும். எனக்கோரும் தீர்மானமும் அடுத்த அமர்வில் எடுக்கப்படவுள்ளது.
வல்வெட்டித்துறை நகரசபை கலைப்பு.
வல்வெட்டித்துறை நகரசபை கலைக்கப்பட்டதாக வடமாகாண உள்ளுராட்சி அமைச்சு கடந்த சில தினங்களுக்கு முன்னதாக வர்த்தமானி அறிவித்தல் விடுத்துள்ளது. இதற்கு இன்றைய தினம் முதலமைச்சர் பதில் வழங்கியிருக்கின்றார்.
அவர் தனது பதிலில் குறிப்பிடுகையில், குறித்த நகர சபையில் உள்ள முறைகேடுகள் தொடர்பில், ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. அவர் தனது அறிக்கையில் எந்த இடத்திலும் தவிசாளர் ஊழல் புரிந்துள்ளார். என குறிப்பிடவில்லை.
எனவே தவிசாளர் தான் பதவி விலகமாட்டேன். என எமக்கு கூறிவிட்டார். ஆனால் மறுபக்கம் 6உறுப்பினர்கள் தம்மிடம் பெரும்பான்மை இருப்பதாகவும், தம்மால் தெரிவு செய்யப்படும் ஒருவரை தலைவராக்குமாறு கோரினர்.
இந்நிலையில் இந்தவிடயம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி ரீதியாக நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும். ஆனால் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நாம் அதனை சட்டரீதியாக அணுகி நகரசபையை கலைக்கும் தீர்மானத்தை எடுத்தோம். என்றார்.
இந்நிலையில் இன்றைய தினம் சபை அமர்வு காலை 10மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 12.45மணியளவில் நிறைவடைந்தது.

ad

ad