புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜன., 2015

ஞாயிறு தினக்குரலுக்கு டக்ளஸ் தேவானந்தா அவர்களின் நேர்காணல் (25.01.2015)


கேள்வி:- மத்தியில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றம் தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு?
பதில்:- நடைபெற்ற தேர்தலில் நாடு தழுவிய
ரீதியில் இரண்டு விதமான தெரிவுகள் இடம்பெற்றுள்ளன. ஒன்று நாம் முன்வைத்த நீண்டகால ஆட்சியில்தான் பிரச்சினைகளை தீர்க்கலாம் என்ற கோரிக்கைக்கு இணங்கவும், மற்றையது நாட்டில் ஓர் ஆட்சிமாற்றம் வர வேண்டும் என்ற ரீதியிலும் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மாற்றம் ஒன்று தேவை என்று எண்ணி அந்த மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்து புதிய அரசின் நூறுநாள் வேலைத்திட்டத்திற்கு வெளியில் இருந்து நாம் ஆதரவளிக்கவுள்ள அதேவேளை, நீண்டகால ஆட்சியில்தான் எங்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என்று நாம் முன்வைத்த கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களித்த மக்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கேள்வி:- புதிய அரசுடன் பேச்சு வார்த்தைகளை நடத்தினீர்களா?
பதில்:- ஆம், பேசினோம் தொடர்ந்தும் பேசி வருகிறோம். அதாவது, வட - கிழக்கு தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பாக கடந்தகால அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்து அவற்றில் பலவற்றை நடத்திக் காட்டியிருக்கிறோம். இன்றும் சில நடந்தேறி வருகின்றன. எனவே, முன்னைய அரசில் தீர்க்கப்படாத, விடயங்கள் உட்பட குறைகளில் விட்டவற்றை தொடர்ந்தும், செய்யுமாறு புதிய அரசிடம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றோம்.
இவ்விடயங்கள் தொடர்பான பேச்சு வார்த்தைகளின் முடிவின் பின்புதான் அரசுடன் தொடர்ந்தும் இருப்பதா அல்லது நூறுநாள் மட்டும் வெளியில் இருப்பதா என்பது தொடர்பான முடிவினை எடுப்போம் என்று கூறியிருக்கிறோம்.
கேள்வி:- புதிய அரசிடம் என்னென்ன கோரிக்கைகளை முன்வைத்துள்ளீர்கள்?
பதில்:- புதிய அரசிடம் பதினைந்து கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். அவற்றில், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு நடைமுறைச் சாத்தியமான வழியில் செல்வதற்கு 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் ஆரம்பித்து, அதற்கு மேலதிகமாக வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு விசேட அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும், நீண்டகாலமாக விசாரணைகள் இன்றி குற்றங்கள் நிரூபிக்கப்படாமல் புனர்வாழ்வு வழங்கப்பட்டும் சிறைகளில் வாடும் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்தல் வேண்டும், மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் என்பதே எமது நிலைப்பாடாகும். பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட தனியாருக்குச் சொந்தமான அனைத்து நிலமும் உரியவர்களிடம் மீள ஒப்படைத்தல் வேண்டும், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் இலங்கைத் தாய் நாட்டினதும் பிரஜைகளாக இருப்பதற்கு இரட்டைக் குடியுரிமையை இலகுபடுத்தல், வடக்கு நோக்கிப் பயணம் செய்யும் மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் ஓமந்தைச் சோதனைச் சாவடியை முற்றாக அகற்றல், யுத்த சூழலால் பாதிக்கப்பட்டு பொருளாதாரத்தில் நலிந்து போன மக்களை தூக்கி நிமிர்த்த உதவியிருக்கும் சமுர்த்திக் கொடுப்பனவை மேலும் அதிகரித்து சமுர்த்திப் பயனாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படுதல், யுத்தத்திற்குப் பின்னர் சொந்த வாழ்விடம் திரும்பிய மக்களினதும், மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்களினதும் வாழ்வாதாரத்தை மேலும் மேம்படுத்த உரிய திட்டங்களை நடைமுறைப்படுத்தல், யுத்தச் சூழலால் பாதிக்கப்பட்டு வடக்கு, கிழக்கில் வேலையற்று இருக்கும் எமது இளைஞர், யுவதிகளுக்கு தகுதிக்கேற்ப வேலை வாய்ப்பை பெற்றுக்கொடுத்தல், சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு தொழில் வாய்ப்புகளை மேலும் ஏற்படுத்தல், எமது கடல் வளத்தை அழித்தும், சுரண்டியும் எமது கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரத்தை சீரழிக்கின்ற எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபடுகின்ற இந்திய மீனவர்களின் அத்துமீறலைத் தடுப்பதோடு, எமது கடற்தொழிலை புனரமைப்புச் செய்து நவீனமயப்படுத்தி எமது கடற்றொழிலாளர்களது வாழ்வை மேம்படுத்தல், விவசாய, உள்ளுர் உற்பத்திகள் மற்றும் கைத்தொழில்கள் என்பவற்றை ஊக்குவித்து ஒவ்வொருவரும் சுய பொருளாதார வளர்ச்சியடைய நிதிவளம் மற்றும் உள்ளீடுகளை வழங்குதல், நிலத்தடி நீர் மோசமாகப் பாதிப்படைந்து வரும் யாழ்.மாவட்டம் உட்பட குடி நீருக்குப் பாரிய நெருக்கடியைச் சந்தித்துவரும் வட மாகாணத்தின் மக்கள் அனைவரும் பொருத்தமான பொறிமுறை ஊடாக சுத்தமான குடிநீர் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தல், முன்னாள் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் உட்பட ஏனைய அமைப்புக்களின் முன்னாள் உறுப்பினர்களுக்கும் அவர்களது
வாழ்வாதாரத்தை வளப்படுத்தும் வகையில் திட்டங்களை வகுத்தல், ஆட்சி உரிமை (விசேட ஏற்பாடு) சட்டத் திருத்தத்தை மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டும். இல்லாதுவிட்டால் வடமாகாணத்தில் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்ற நிலைமை உள்ளது என்றும், பலாலி விமான நிலையம் சர்வதேச தரத்துக்கு உயர்த்தி கட்டியெழுப்பப்பட வேண்டும், யுத்தத்தில் உறவுகளை இழந்தவர்களுக்கும் பூர்வீக சொத்துக்களை இழந்தவர்களுக்கும், பரம்பரை தொழில்களை இழந்தவர்களுக்கும் நஷ்ட ஈடுகளும், நிவாரணங்களும் வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறோம்.
கேள்வி:- ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பாலும் சிறுபான்மையின மக்கள் முன்னாள் ஜனாதிபதியை நிராகரித்திருந்தார்கள். இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
பதில்:- சிறுபான்மையின மக்கள் முன்னாள் ஜனாதிபதியை முழுமையாக நிராகரித்து விட்டார்கள் என்று கூறமுடியாது. முன்னாள் ஜனாதிபதிக்கு வடக்கு - கிழக்கில் கூடுதலான வாக்குகளும் கிடைத்திருக்கின்றன. குறிப்பாக வட மாகாணத்தில் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் வரையிலான வாக்குகள் கிடைத்திருக்கின்றன. அதேபோன்று கிழக்கு மாகாணத்திலும் கூடிய வாக்குகள் கிடைத்திருக்கின்றன.
எனவே, ஆட்சிமாற்றம் தேவை என்ற பொதுவான கோரிக்கைக்கு ஏற்ப ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதாகவே நாம் இந்த மாற்றத்தை பார்க்கின்றோம். இன்று பெரும்பான்மையான மக்கள் தாம் அதிகளவில் வாக்களித்ததினால் தான் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளதென்று ஒரு பக்கமும் மறுபுறம் சிறுபான்மை மக்களின் வாக்குமூலம் தான் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளதாக சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களும் கூறிவருகிறார்கள். இவ்வாறான கருத்துகளை தர்க்கத்துக்குரிய விடயங்களாகவே நாம் பார்க்கின்றோம்.
கேள்வி:- முன்னைய அரசில் நீங்கள் அமைச்சராக இருந்தபோதிலும் புதிய அரசிடம் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது போனதற்கு காரணம் என்ன?
பதில்:- முன்னைய அரசின் காலத்தில் வடமாகாணத்தில் நாம் மேற்கூறிய விடயங்களை ஓரளவுக்குச் செய்திருக்கிறோம். இடம்பெயர்ந்து வாழ்ந்த பலரை மீள்குடியேற்றியிருக்கின்றோம். சுவீகரிக்கப்பட்ட பொது மக்களுடைய பல காணிகளை விடுவித்துக் கொடுத்திருக்கின்றோம். வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்திருக்கிறோம், வடக்கில் சமுர்த்தித் திட்டத்தை உருவாக்கியிருக்கிறோம். இவ்வாறு பல விடயங்களைச் செய்திருக்கின்றோம். எனவே, செய்தவற்றில் விடுபட்டுப் போனவற்றையும், செய்ய முடியாமல் போனவற்றையும் தான் நாம் புதிய அரசிடம் முன்வைத்திருக்கிறோம்.
எங்களுடைய கட்சியின் கொள்கையான மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையின் அடிப்படையில் தான் எங்களுடைய கோரிக்கைகளை புதிய அரசிடம் முன்வைத்திருக்கிறோம்.
கேள்வி:- முன்னைய அரசு நிராகரித்து வந்த வடமாகாண ஆளுநர் மாற்றம் மற்றும் பிரதம செயலாளர் மாற்றம் என்ற இரண்டையும் புதிய அரசு மாற்றியுள்ளது. இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
பதில்:- நாட்டிலுள்ள மாகாணங்களின் ஆளுநர்களை நியமிப்பது ஜனாதிபதி. எனவே, ஆளுநராகச் செயற்படுபவர் தான் தங்கியிருக்கும் அரசின் கொள்கைகளைத் தான் முன்னெடுப்பாரே தவிர ஈ.பி.டி.பி.யினதோ, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினதோ கொள்கையை முன்னெடுக்கப் போவதில்லை. கடந்த ஆட்சியில் அரசியல் காரணங்களுக்காகவும் தங்களுடைய ஆற்றலின்மை காரணமுமாகவே வடமாகாண ஆளுநரையும் பிரதம செயலாளரையும் மாற்றவேண்டும் என்று கூட்டமைப்பு கோரியதே தவிர, வேறு எந்தக் காரணத்திற்காகவும் அல்ல.
முன்னர் இருந்த ஆளுரைக் கொண்டு சொகுசு வாகனங்களையும் வீட்டு வாடகைகளையும் ஏனைய தங்களுடைய தேவைகளையும் கூட்டமைப்பினர் பெற முடியுமாகவிருந்தால் ஏன் ஏனையவற்றை கூட்டமைப்பினருக்கு பெறமுடியாமல் போனது என்று தெரியவில்லை.
என்னைப் பொறுத்தவரை வடமாகாணத்தில் எந்தவொரு நடவடிக்கைக்கும் ஆளுநரோ, பிரதம செயலாளரோ தடையாக இருந்ததாக நான் அறியவில்லை.
இன்று புதிய ஆளுநர், பிரதம செயலாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களைக் கொண்டு கூட்டமைப்பு எவ்வாறு செயற்படப் போகிறது, என்ன காரணங்கள், குறைகளை இவர்கள் மீது சுமத்தப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
கேள்வி: இனநெருக்கடி தொடர்பில் புதிய அரசின் அணுகுமுறையை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
பதில்:- 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கூடாகத்தான் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வைக்காண முடியும் என்று நாம் பல வருடங்களாக கூறிவந்ததைத் தான் இன்று புதிய அரசு கையில் எடுத்திருக்கிறது.
எனவே, நாம் பல வருடங்களாகக் கூறி வந்ததைத்தான் புதிய அரசு கூறியிருக்கிறது. இதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ன கூறப்போகிறது என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.
1987ஆம் ஆண்டே இந்த மாகாணசபை முறைமையை தமிழ்த்தரப்புகள் ஏற்றுக்கொண்டிருக்கு மேயானால், வட-கிழக்கு மாகாணங்கள் இன்று தனித்தனி அலகாகப் பிரிந்திருக்காது, பொலிஸ், காணி அதிகாரங்கள் ஒரு பிரச்சினையாக ஏற்பட்டிருக்காது, இலட்சக்கணக்கான உயிர், உடைமை அழிவுகள் ஏற்பட்டிருக்காது.
அரிய சந்தர்ப்பத்தை அன்று தவறவிட்டது போன்று இல்லாமல் இன்று ஏற்பட்டிருக்கும் இனி ஏற்படப் போகும் சரியான சந்தர்ப்பங்களை தமிழ்த்தரப்புகள் முன்கொண்டு செல்ல தங்களை அர்ப்பணிக்க வேண்டும்.
கேள்வி:- முன்னைய அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பல சுமத்தப்பட்டு வருகிறது. முன்னைய அரசில் நீங்களும் அமைச்சராக இருந்துள்ளீர்கள். இது விடயத்தில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?
பதில்:- ஊழல்களுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அது விடயமாக எதுவும் எனக்குத் தெரியாது. அரசுகள் மாறும்பொழுது முன்னைய அரசு மீது குற்றச்சாட்டுகள் சுமத்துவது சாதாரண விடயமாகும். இருந்தபோதும் பாரதூரமான ஊழல்கள் உண்மையாக நடந்திருந்தால் அது யாராக இருந்தாலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும், அவர்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஊழல்களை விசாரிக்கும் அதைவிட கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள் பலர் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். அக்கொலைகள் தொடர்பிலும் விசாரணைகள் நடைபெற வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை இந்தக் கோரிக்கையை புதிய அரசின் முன் நாம் வைக்கவுள்ளோம்.
கேள்வி:- கடந்த ஆட்சிக்காலத்தில் வட மாகாணத்தில் மதுப்பாவனை, கொள்ளை, கோஷ்டி மோதல்கள் என்பன அதிகரித்துக் காணப்பட்டதாக தகவல்கள் இருக்கின்றன. வடமாகாண முன்னாள் அமைச்சர் என்ற வகையில் இதனை நீங்கள் எவ்வாறு நோக்குகிறீர்கள்?
பதில்:- முன்னரை விட, தற்போதுதான் வடமாகாணத்தில் அதிகளவு குழு மோதல்கள், கொள்ளைகள் அதிகரித்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
முன்னர் நாம் இவ்வாறான அசம்பாவிதங்களை விழிப்புக் குழுக்களை நியமித்து அதனூடாக கட்டுப்படுத்தி வந்திருக்கின்றோம். ஆனால், இன்று அந்த நிலைமை இல்லை. சட்டம், ஒழுங்கினை பொலிஸார் தான் கவனிக்க வேண்டும். முன்னர் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்ற அணுகுமுறை இருந்தது. இன்று வடக்கில் இருப்போர் அதனைச் செய்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.ቶ

ad

ad