புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜன., 2015

முத்துக்குமார் சிலையை அகற்றிட தமிழக அரசு முயல்கிறதா? முதல்வர் தலையிட வேண்டும்: பெ.மணியரசன்


தமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் பெ.மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 
தஞ்சை மாவட்டம் – பூதலூர் ஒன்றியம் – சாணூரப்பட்டியில் தழல் ஈகி முத்துக்குமார் சிலை, தனியாருக்கு சொந்தமான இடத்தில் மதுரை உயர் நீதிமன்ற ஆணை பெற்று, 29.01.2011 அன்று, தமிழ்த் தேசியப் பேரியக்கம் ( அப்போது, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி)யால் திறக்கப்பட்டது. 
 
முதலில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் சிலை திறப்புக்கு அனுமதி மறுத்ததால், மதுரை உயர் நீதிமன்றக் கிளையில், வழக்குத் தொடுத்து, நீதிபதி சந்துரு அவர்கள், அவ்வழக்கை விசாரித்து தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில், சிலை திறக்க அனுமதி மறுப்பது சரியல்ல என்றுகூறி, தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆணையைத் தள்ளுபடி செய்து சிலை திறக்க 24.11.2010 அன்று அனுமதி ஆணை வழங்கினார். அதன்படிதான், 29.01.2011 அன்று சிலை திறக்கப்பட்டது. 
 
இன்று (சனவரி 29) முத்துக்குமார் நினைவு நாள் என்பதால், மேற்படி சாணூரப்பட்டியிலுள்ள முத்துக்குமார் சிலைக்கு, மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்த, நானும் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்களும், தோழமை இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்களும் இன உணர்வாளர்களும் திரளாகச் சென்றபோது, மேற்படி சிலை அமைந்துள்ள இடத்தை சிலை நிறுவுவதற்காக எனக்கு தானப்பத்திரமாக பூதலூர் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து கொடுத்த, மேற்படி இடத்தின் முன்னாள் உரிமையாளர் ஆர். இரத்தினவேல் (புலவர் இரத்தினவேலவன்) அவர்களுக்கு, பூதலூர் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து அவர் நிலத்தை எப்படி கொடுத்தார் என்று தெரிவிக்குமாறு வந்தக் கடிதத்தைக் காட்டினார். பூதலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர், 07.11.2014 அன்று அந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டு்ள்ளார். 
 
தமிழனம் காக்க தன்னுயிர் ஈந்து, தமிழகம் மட்டுமின்றி, உலகெங்கும் வாழும் தமிழர்களால் நெஞ்சத்தில் வைத்துப் போற்றப்படும் தழல் ஈகி முத்துக்குமார் சிலையை அகற்ற தமிழக அரசு முயல்கிறது என்ற செய்தியை அறிந்து வேதனையுற்றேன். நீதிபதி சந்துரு அவர்கள் வழங்கியத் தீர்ப்பை தள்ளுபடி செய்திட, மேல் முறையீடு செய்யப்போவதாக மேற்படி ஊராட்சி ஒன்றிய ஆணையர் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 
 
தமிழக முதலமைச்சர் அவர்கள், இந்தச் சிக்கலில் கவனம் செலுத்தி, தமிழினத்தின் போற்றுதலுக்குரிய தழல் ஈகி முத்துக்குமார் சிலையை அகற்ற, எந்த மேல் முறையீடு முயற்சியும் எடுக்கக் கூடாது என்று. தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பிலும், தமிழின உணர்வாளர்கள் சார்பிலும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

ad

ad