புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜன., 2015

தமிழகத்தில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்பு


தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுப்படி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சட்டவிரோத இயக்கம் என்பதால் அதன் மீதான தடை உத்தரவு நீட்டிக்கப்படுகிறது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டதிலிருந்து, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்த தடை கடந்த ஆண்டு முடிந்தது. முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்த தடை 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்தது. இதற்காக தமிழகத்தின் முக்கியமான இடங்களில் தீர்ப்பாயம் மூலம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் என்பதை மீண்டும் தீர்ப்பாயம் உறுதி செய்து தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தமிழக அரசும் புலிகள் இயக்க நடவடிக்கைகளுக்கு தடை விதித்து அரசாணை பிறப்பித்துள்ளது.
தமிழக அரசின் பொதுத் துறை முதன்மைச் செயலர் ஜிதேந்திரநாத் ஸ்வைன் பிறப்பித்துள்ள உத்தரவு:
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை நீடிப்பது தொடர்பாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தியது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் அதன் ஆதரவு நடவடிக்கைகள் குறித்து விசாரணை செய்தது. அந்த இயக்கத்தின் நடவடிக்கைகள் அகண்ட தமிழகம், தமிழர்கள் வாழும் பகுதியில் தனி நாடு, இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு என்ற கோரிக்கையை நோக்கியுள்ளன. இதுதொடர்பாக கடந்த மே மாதம் 5ஆம் திகதி, விடுதலைப் புலிகள் இயக்கத்தினருடன் தொடர்பு கொண்ட 6 இலங்கைத் தமிழர்கள் ராமநாதபுரம் மாவட்டம் அரிச்சல்முனை கடற்கரைக்கு கடவுச்சீட்டு இல்லாமல், சட்டத்துக்குப் புறம்பாக வந்திறங்கினர். அவர்கள் மீது தனுஷ்கோடி பொலிஸில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் சிவகங்கை மாவட்டம் மானகிரியில் உள்ள வீடு முன்பு தமிழ்நாடு விடுதலைப் படை என்ற புலிகள் ஆதரவு அமைப்பினர் கடந்த பெப்ரவரி 11ஆம் திகதி பிரிவினை வாசக நோட்டீஸ்களை எறிந்துள்ளனர்.
கடந்த பெப்ரவரி 4 ஆம் திகதி, ப.சிதம்பரத்தின் பண்ணை வீட்டில் பைப் குண்டு வைத்து வெடிக்க வைத்தனர். கடந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமியின் காருக்கு அடியில் பைப் குண்டு வைத்தனர். மதுரை உத்தங்குடியில் தமிழ்நாடு விடுதலைப் படையினர் இரும்பு பைப் குண்டு, பெட்ரோல் குண்டு வைத்துவிட்டுச் சென்றதை பொலிசார் கண்டுபிடித்தனர். மேலும் செங்கல்பட்டு, திருச்சி அகதிகள் முகாம்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது.
பிரபாகரனின் மகன்கள் சார்லஸ் அன்டனி, பாலச்சந்திரன் பெயர் பொறித்த கல்வெட்டும் தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் இன்னும் தங்கள் நடவடிக்கைகளை தொடர்வது இதன்மூலம் தெரிகிறது. இதனால் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுப்படி, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சட்டவிரோத இயக்கம் என்பதால், அதன் மீதான தடை உத்தரவு நீட்டிக்கப்படுகிறது. இவ்வாறு தமிழக அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ad

ad