புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜன., 2015

நாலுபேரு பிடிச்சுகிட்டாங்க... மந்திரவாதி கழுத்தை அறுத்தாரு!” நடுங்கவைத்த நரபலி வாக்குமூலம்

மிரண்டு கிடக்கிறது மதுரை! நான்காவது கட்ட ஆய்வில் களமிறங்கி கனிம வளங்களைச் சுரண்டியவர்களை நடுநடுங்க வைத்திருக்கிறார் சகாயம்
. தினமும் குறைந்தது ஐந்து கிலோ மீட்டர் தூரம் காடு, மலை என சளைக்காமல் ஏறி இறங்குகிறார்.
'நான் ஏரியாவுக்கு புதுசு சார்!’
மதுரை மாவட்டத்தில் 80 சதவிகித கிரானைட் வெட்டி எடுக்கப்பட்ட இடங்கள் எல்லாமே அரசு மற்றும் பொது மக்களுக்குச் சொந்தமானவை என்பது சகாயத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. மதுரை கீழையூர் அருகே உள்ள மேலப்பட்டி கிராமத்தில் சகாயம் ஆய்வு செய்தார். 'எங்களுக்கான பாசனக் கண்மாயை கிரானைட் கற்களைக்கொண்டு மூடிவிட்டார்கள்.  50-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு அரசின் மூலம் விவசாயத்துக்கு என்று நிலம் ஒதுக்கப்பட்டதாக ஆவணங்களைத் தயார்செய்து, அதை கிரானைட் மாஃபியாக்களுக்கு அரசு அதிகாரிகள் தாரை வார்த்துவிட்டனர். அவர்கள் இங்கிருந்த ஆலங்குளம் என்ற குளத்தில் கிரானைட் வெட்டி எடுத்து குளத்தை அழித்துவிட்டனர்' என்று மேலப்பட்டி கிராமப் பொதுமக்கள் சகாயத்திடம் புகார் சொன்னார்கள்.
ஆன் தி ஸ்பாட்டில் அதிகாரிகளைக் கேள்விகளால் துளைத்து எடுத்தார் சகாயம். 'நான் அப்பொழுது இங்கு இல்லை சார். நான் ஏரியாவுக்கே புதுசு சார்' என்று வழக்கமான பதில்களையே அதிகாரிகள் அளித்தனர். அந்த ஊரின் சுடுகாட்டைக் கூட விட்டு வைக்காமல் கிரானைட் கற்களை வெட்டி எடுத்துவிட்டனர். அந்த ஊர் மக்கள் பிணங்களை அடக்கம் பண்ண அருகில் உள்ள மாங்குளத்தைப் பயன்படுத்தி வந்தது கூடுதல் சோகம்.      
பத்தரை ஏக்கர் பரப்பளவுகொண்ட குளம் முழுவதும் நீர் நிரம்பி காணப்பட்டது. சுற்றிலும் ஆடுமாடுகள் மேய்ந்து திரிந்தன. பச்சைப் பசேல் என்று நெற்பயிர்கள் பால்பிடித்து அறுவடைக்காகக் காத்திருந்தன. கரையில் காரை நிறுத்திய சகாயம், அதிகாரிகளை அருகில் அழைத்து ''இந்தக் குளம் மட்டும் ஏன் இவ்வளவு அழகாக இருக்கிறது? நீர்நிலை என்றால் இப்படித்தானே முன்பெல்லாம் இருந்தது? இதுதானே நாம் எல்லாம் பார்த்த அழகு. ஆனால், இந்தக் குளத்தை மட்டும் ஏன் விட்டு வைத்து இருக்கிறார்கள்?'' என்று கேட்டார். 'இந்த இடத்தில் கிரானைட் பாறை இல்லை. அதனால்தான் இதை விட்டுவைத்திருக்கிறார்கள்’ என்று அங்கிருந்த கிராம மக்களே பதில் சொன்னார்கள்.
வெத்தலையில் மை... கழுத்தில் கத்தி!
எல்லோரும் கிளம்பிய பிறகு இரவு ஒன்பது மணிக்குப் பிறகு ஓய்வுபெற்ற ராணுவவீரர் பழனிவேல் என்பவர் சகாயத்திடம் மனு ஒன்றை கொடுத்துவிட்டு வந்தார். அவரிடம் பேசினோம். 'நான் 1998-லிருந்து 2008 வரை  பி.ஆர்.பி நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்தேன். அவங்க போக்கு பிடிக்காம நான் வெளியில வந்துட்டேன். குவாரியில அவங்க வைக்கிற வெடியில கீழவளவு வீர காளியம்மன் கோயில் சிதலமடைய ஆரம்பிச்சுது. ஒருகட்டத்துல கோயில் சுவர் இடிஞ்சு விழுந்துடுச்சு. இந்து அறநிலையத் துறையில போய் புகார் கொடுத்தேன். அவங்க அந்தப் புகாரை பி.ஆர்.பி நிறுனத்துக்கே திருப்பி அனுப்பி விசுவாசத்தைக் காட்டிகிட்டாங்க. அதுக்குப் பிறகு பி.ஆர்.பி ஆளுங்க துரத்தித் துரத்தி தாக்கினாங்க. எப்படியோ தப்பிச்சு கொஞ்ச நாள் தலைமறைவா இருந்தேன். நான் இருந்த இடத்தை அவங்க கண்டுபிடிச்சு என்னை பொக்கிஷ மலைக்குக் கிழக்கே இருக்கும் பல்லவா கிரானைட் குவாரிக்கு இழுத்துட்டுப் போனாங்க. அங்கே பி.ஆர்.பி மைத்துனர் முருகேசன் இருந்தாரு. 'இதுவரைக்கும் நீ வேலை பார்த்ததுக்கு உனக்கு பணம் செட்டில் பண்ணாம இருக்கோம். அதுக்குதான் இழுத்துட்டு வரச் சொன்னேன். நான் சொல்ற மாதிரி செஞ்சுட்டு பணத்தை வாங்கிட்டு போயிட்டே இரு.. இனி உன்னை யாரும் துரத்தமாட்டாங்க’ன்னு முருகேசன் சொன்னாரு. அங்கே காவி வேட்டிகட்டி ஒரு மந்திரவாதி இருந்தாரு. பக்கத்துல இருந்த குளத்தில் என்னை குளிச்சிட்டு வரச் சொன்னாங்க. குளிச்சிட்டு வந்ததும் காவி வேட்டி கொடுத்து கட்டிக்கச் சொன்னாங்க. ஒரு வெத்தலையில மை தடவி என்கிட்ட மந்திரவாதி கொடுத்தாரு. 'வெத்தலையில என்ன தெரியுது’ன்னு மந்திரவாதி கேட்டாரு. நான் பயத்துல சாமி தெரியுதுன்னு சொன்னேன். 'கல்லு தின்னி’ சேகர் என்பவனைப் பார்த்து, 'பூஜையை ஆரம்பிங்க...’னு மந்திரவாதி சொன்னாரு. அவங்க காருக்குள்ள இருந்து மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பையனை கூட்டிட்டு வந்தாங்க. அந்தப் பையனுக்கு 25 வயசுக்குள்ளதான் இருக்கும். அந்தப் பையனை அங்கே படுக்க வெச்சாங்க. 'கள்ளுதின்னி’ சேக், ஜோதிபாசு, பழனி, சுப்பிரமணி ஆகிய நாலு பேரும் அந்தப் பையனின் கையையும் காலையும் பிடிச்சுகிட்டாங்க. மந்திரவாதி அரிவாள்ல அந்தப் பையனோட கழுத்தை ஆட்டை அறுக்கிற மாதிரி அறுத்தாரு. பீறீட்டு வந்த ரத்தத்தை கையில பிடிச்சு ஒரு வேல் கம்புல தடவினாங்க. அந்த வேல் கம்பை வேப்பங்குடி கண்மாய்க்கு மேற்குப் பக்கத்துல கொண்டுபோய் நட்டாங்க. நான் கட்டியிருந்த காவி வேட்டியை உருவி அங்கேயே எரிச்சுட்டாங்க. அந்தப் பையனோட பிணத்தை கார்ல ஏத்திட்டு கிளம்பிட்டாங்க. 'இனி நீ போய் உன் வேலையை பாரு. எங்க விஷயத்துல தலையிட்டா உன்னையும் பலி கொடுக்க வேண்டியிருக்கும்’னு மிரட்டி அனுப்பிட்டாங்க...' என்று நடுக்கத்துடன் சொன்னார்.
'நான் மக்களுக்காக வேலை பார்க்கணும்!’
1986-87-ம் ஆண்டில் அரசுப் பதிவேட்டில் இருந்த எட்டு ஏக்கர் கண்மாய், 1997-க்குப் பிறகு அரசுப் பதிவேட்டில் காணாமல் போனது. அந்தக் கண்மாய் முழுவதும் கிரானைட் புதையல் இருந்ததை மோப்பம் பிடித்தனர் பி.ஆர்.பி தரப்பினர். கொடுக்க வேண்டியவர்களுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து மைசூர்பாகுபோல அடுக்கடுக்காக 600 அடிக்கு மேல் வெட்டி எடுத்திருந்தனர். அந்த இடத்தை சகாயம் ஆய்வு செய்தார். பாதி கண்மாய் அளவுக்கு கிரானைட் கழிவுக் கற்களால் குளத்தை மூடி மறைத்து இருந்ததைக் கண்டார். அதிகாரிகளை அழைத்த சகாயம், 'நான் மாறுதலாகிப் போன பிறகு இந்தக் குளத்தை எத்தனை முறை ஆய்வு செய்தீர்கள்? ஏன் ரிப்போர்ட் அனுப்பவில்லை? நாம் மக்களுக்காக வேலை பார்க்கணும். அவர்களின் பணத்தில்தான் சம்பளம் வாங்குகிறோம். இந்த அரசு அதிகாரம் எல்லாம் மக்களுக்காகத்தான் பயன்பட வேண்டும். ஆனால், நாம் எல்லாம் வேறு யாருக்கோ வேலை செய்து இருக்கிறோம்' என்று வேதனைப்பட்டார் சகாயம். அப்போது, ரவிச்சந்திரன் என்பவர் சகாயத்திடம் ஒரு புகார் மனுவைக் கொடுத்தார். 'சார், எங்க அப்பா கருப்பையா சுதந்திரப் போராட்ட தியாகி. அரசு எங்களைப் பெருமைப்படுத்தும் விதமாக ஐந்து ஏக்கர் நிலம் தந்தது. அதை கிரானைட்காரங்க விலைக்கு கேட்டாங்க. நான் தர மறுத்ததால், விவசாயம் செய்ய முடியாதபடி நீர்வரத்துக் கால்வாய்களை உடைத்துவிட்டனர். சுற்றி உள்ள இடங்களை எல்லாம் வாங்கி வேலி போட்டு எங்களுடைய நிலத்துக்குள் எங்களைப் போகவிடாமல் தடுக்கின்றனர்' என்று சொன்னார்.
அப்போது குறுக்கிட்ட முத்து என்ற விவசாயி, 'எனது வயலுக்கும் இதுதான் பிரச்னை. இதுவரை 50-க்கும் மேற்பட்ட புகார்களை பொதுப்பணித் துறைக்கு அனுப்பிவிட்டேன். உங்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் மட்டும் அனுப்பினார்கள். அதிகாரிகளே பஞ்சாயத்தில் தீர்மானம் போட்டு அரசு நிலத்தை கிரானைட் தொழில் செய்ய தாரை வார்த்தனர்' என்று அதிர்ச்சியூட்டினார். கீழையூர் பஞ்சாயத்துத் தலைவர் தர்மலிங்கம், 'புகார் சொன்னால் பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன் எதிரிகளைத்  தூண்டி விடுகிறார். மூன்று நாட்களுக்கு முன்பு மண்வெட்டியால் என்னை வெட்ட வந்தனர்' என்று புகார் சொன்னார்.                                            
பொங்கல் விடுமுறை கழித்து மீண்டும் தொடரும் சகாயத்தின் ஆய்வு

ad

ad