செவ்வாய், ஜனவரி 20, 2015

பலமிழந்த ஆளும் கட்சி : கிழக்கு மாகாணசபை ஒத்திவைப்பு


ஆளும் தரப்பின் பெரும்பான்மை பலமின்றி இன்று கூடிய கிழக்கு மாகாணசபையின் அமர்வுகள் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


37 உறுப்பினர்களை கொண்டுள்ள கிழக்கு மாகாண சபையில்  22 உறுப்பினர்களை கொண்டு ஆட்சி அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கைப்பற்றியிருந்தது.

இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 7 உறுப்பினர்களும், அமைச்சர் ரிசாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் 3 உறுப்பினர்களும் ஆளும் தரப்புக்கு ஆதரவளித்து வந்தனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் இரு கட்சியினரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அதரவளித்த நிலையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 1௦ உறுப்பினர்களை இழந்து பெரும்பான்மையை இழந்தது.

இந்த நிலையில் 2௦15 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சமர்ப்பித்த போது பெரும்பான்மையின்றி உள்ள ஒருக்கட்சி வரவுசெலவுத்திட்டத்தை சமர்ப்பிக்கமுடியாது என்று அடிப்படையில் எதிர்க்கட்சி தலைவர் சி தண்டாயுதபாணி முன்வைத்த பிரேரணையை ஏற்ற அவைத்தலைவர் அமர்வை ஒத்திவைத்தார்.

இதேவேளை வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படாவிட்டாலும் மாகாண நிர்வாகத்திற்குட்பட்ட பணியாளர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டார்.