புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜன., 2015

"எங்களுக்குப் பின்னால் வருங்காலத் தலைவர் ஸ்டாலின்!” அடுத்தவர் தலையை சுற்றிவந்து மூக்கைத் தொட்ட அன்பழகன்


மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தி.மு.க சம்பிரதாயம் மீண்டும் அரங்கேறி
முடிந்துவிட்டது.
அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் கடந்த 9-ம் தேதி தி.மு.கவின் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. கலைஞர் அரங்கத்துக்குள் நடக்கும் பொதுக்குழு மிகவும் கறாராக நடக்கும். உள்ளே தலைவர்கள் பேசுவதை வெளியில் யாரும் கேட்க முடியாது. பார்க்கவும் முடியாது. ஆனால், இந்த முறை கலைஞர் அரங்கத்தைத் தாண்டி அரங்கின் வெளிப்புறம் புல்வெளி பகுதியிலும் சாமியானா பந்தல் போட்டு பொதுக்குழு உறுப்பினர்கள் உட்கார வைக்கப்பட்டனர். அகன்ற திரைகளில் பொதுக்குழு நடவடிக்கைகள் ஒளிபரப்பப்பட்டன. 'இதில் என்ன ஒளிவுமறைவு?’ என்று நினைத்தார்களோ என்னவோ? பொதுக்கூட்டம்போல பொதுக்குழு கூட்டம் நடத்தினார்கள்.  
கட்சியின் 'புதிய’ தலைவராக கருணாநிதியும், 'புதிய’ பொதுச்செயலாளராக அன்பழகனும், 'புதிய’ பொருளாளராக ஸ்டாலினும் தேர்வு செய்யப்பட்டார்கள். இந்தத் தேர்தலை துணைப் பொதுச்செயலாளர் சற்குணபாண்டியன் நடத்தினார். குறிப்பிட்ட பதவிக்கு இவர்களைத் தவிர வேறு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை என்றும் சொல்லிக்கொண்டார். இவர்கள் மூவரும் மேடைக்கு வந்தனர்.
கட்சிக்கு இதுவரை மூன்று துணைப் பொதுச்செயலாளர்கள் இருந்தார்கள். அதனை நான்காக மாற்றி இருப்பதாக கருணாநிதி அறிவித்தார். சற்குணபாண்டியன், வி.பி.துரைசாமி, ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகிய நால்வரையும் நியமிப்பதாக அறிவித்தார். இதுவரை துணைப் பொதுச்செயலாளராக இருந்த துரைமுருகன் தலைமைக் கழக முதன்மைச் செயலாளராக ஆக்கப்பட்டார். அதன்பிறகு வரிசையாக ஒவ்வொருவரையும் பேசச் சொன்னார்கள். ஒரே வாழ்த்துப்படலமாக இருந்தது.
''மாமன்னன் ராஜராஜ சோழனிடம் பல ஆண்டுகள் ஆட்சி நிர்வாகத்தைக் கற்ற பின்னரே ராஜேந்திர சோழன் ஆட்சி நிர்வாகத்தில் கொடிகட்டிப் பறந்தான். 'கங்கை கொண்டான், கடாரம் வென்றான்’ என்றெல்லாம் வெற்றிகளைக் குவித்து பாராட்டு பெற்றான். அந்த வகையில் ஸ்டாலின் இப்போது உருவெடுத்துள்ளார். தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பார்கள். அதைப்போலத்தான் ஸ்டாலின் இருக்கிறார். அவர், ஜல்லிக்கட்டு காளையைப்போல பாயும் ஆற்றல் படைத்தவர்'' என்று பழைய காயங்களை மறந்து பூ தூவினார் துரைமுருகன்.
அடுத்து மைக் பிடித்த ஸ்டாலின், ''என்னை இரண்டாவது முறையாகப் பொருளாளராகப் போட்டியின்றி தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி. துரைமுருகன் சொன்னதுபோல குட்டி 16 அடி பாய்வது தலைவர் கலைஞருக்குப் பெருமை அல்ல. 32 அடி பாய்ந்தால்தான் பெருமை. 32 அடி பாயவும் தயாராக இருக்கிறேன். மாவட்டம் வாரியாக சுற்றுப் பயணம் செய்து ஆய்வு நடத்தினேன். 99 சதவிகித பணிகள் முடிந்துவிட்டன. அதைப் பற்றியெல்லாம் தலைவரிடமும் பேராசிரியரிடமும் விளக்கி இருக்கிறேன். கட்சியின் அடிமட்டத்தில் உள்ளூர் நிர்வாகிகளிடம் ஒருங்கிணைப்பு இல்லை என்பதை எனது சுற்றுப் பயண ஆய்வுகளில் கண்டுபிடித்தேன். நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
கட்சியில் யாராவது தவறு செய்தால் அதுபற்றி விளக்கம் கேட்கப்படும். அது சரியாக இல்லையென்றால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், கட்சிப் பணியை யாராவது சரியாக செய்யவில்லை என்றால் விளக்கம் எல்லாம் கேட்கமாட்டோம். உடனே நடவடிக்கை எடுக்கப்படும். விளக்கக் கடிதம் கேட்டு நோட்டீஸ் எல்லாம் அனுப்பத் தேவையில்லை. கட்சி சிறப்பாக இருந்தால்தான் மீண்டும் ஆட்சிக்கு வர முடியும். அதற்காக நீங்கள் உழைக்க வேண்டும்'' என்று 'தலைவராகவே’ பேசினார்.
பொதுச் செயலாளர் அன்பழகன் பேச்சு உணர்ச்சி மயமாக இருந்தது. ''கலைஞர் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அல்ல. தானாகவே உருவான தலைவர். தந்தை பெரியாரால் கண்டெடுக்கப்பட்ட தலைவர். அண்ணாவாலே பாராட்டப்பட்ட தலைவர். சுருக்கமாகச் சொன்னால் அன்பழகனால் ஒப்புக்கொள்ளப்பட்ட தலைவர். நாவலர் நெடுஞ்செழியன் தலைமை இந்த இயக்கத்தை காப்பாற்றாது; கலைஞருடைய தலைமைதான் காப்பாற்றும் என்று உணர்ந்து ஏற்றுக் கொண்டவன் நான்.  
அண்ணாவும் கலைஞரைத்தான் விரும்பினார். அவரைத் தவிர வேறு யாரை கட்சியின் தலைவராக நீங்கள் தேர்ந்தெடுக்க முடியும்? ஸ்டாலினைப் பற்றி நான் சொல்கிறபோது 'எங்களுக்குப் பின்னால் வருங்காலத் தலைவர்’ என்றுதான் சொல்வேன். 'வருங்காலத் தலைவர்’ என்று ஏன் சொன்னேன் என்றால், எனக்குப் பாதுகாப்பு அது. தம்பி ஸ்டாலின் இருக்கிறார் என்று சொல்வது எதிர்க் கட்சிகளை மிரட்டுவதற்கு ஒரு வாய்ப்பு. 'ஸ்டாலின் எங்களோடு இருக்கிறார். அவர் இளைஞர்’ என்று சொல்வது எங்களுடைய முதுமையினால் கழகத்துக்கு ஏதேனும் குறை ஏற்படுமானால், அந்தக் குறையை மாற்றுவதற்கு என்னுடைய ஆசைகளையெல்லாம் நிறைவேற்றுவதற்கு ஸ்டாலினைப்போல ஓர் இளைஞர் கிடைத்திருக்கிறார் என்பதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன்' என்று ஸ்டாலின்தான் அடுத்த தலைவர் என்பதை மறைமுகமாகச் சொன்னார்.
ஸ்டாலின் பற்றிய 'பஞ்ச்’ வசனத்துடன்தான் கருணாநிதியின் உரையே தொடங்கியது. ''இங்கே நம்முடைய கழகத்தின் காவலர்களிலே ஒருவராக இருந்து தி.மு.கவை வழி நடத்திச்செல்லக்கூடிய பக்குவத்தைப்பெற்றுள்ள தம்பி மு.க.ஸ்டாலின் அவர்களும்...' என்று கருணாநிதி சொன்னதும் அரங்கம் அதிரக் கைதட்டல் எழும்பியது. கைதட்டி முடிக்கட்டும் என்று காத்திருந்த கருணாநிதி, ''நான் இதைச்சொல்கிற வரையிலே உங்களுக்கு ஸ்டாலின் மீது நம்பிக்கை இல்லைபோலும், நான் சொன்ன பிறகுதான் அவ்வளவு பேரும் சேர்ந்து கை தட்டுகிறீர்கள். நான் இந்த நம்பிக்கையை இன்றைக்கு அல்ல... பேராசிரியர் இன்றைக்குச் சொன்னாரே, அதற்குப் பிறகு அல்ல... ஏழு மாதங்களுக்கு முன்பே, ஸ்டாலினைப்பற்றி நான் குறிப்பிடும்போதே 'உழைப்பு, உழைப்பு, உழைப்பு’ அதற்குப் பெயர்தான் ஸ்டாலின் என்று நான் சொல்லியிருக்கிறேன்.
அவருடைய உழைப்பின் தன்மையை, அந்த உழைப்பின் மேன்மையை, அந்த உழைப்பின் வலிமையை நீங்கள் இன்று உணர்ந்துகொண்டிருக்கிறீர்கள். அது மாத்திரமல்ல... வன்மை, தன்மையை மாத்திரமல்ல... மென்மையும் அவரிடத்திலே உண்டு. அந்த மென்மைதான் ஓர் இயக்கத்திலே நானும் அல்லது நம்முடைய அருமைப் பேராசிரியர் அவர்களும் அல்லது நம்முடைய கழகத்திலே இருக்கின்ற துரைமுருகனைப் போன்றவர்களும், கழகத்திலே இருக்கின்ற பல்வேறு அமைப்பினரும் கட்டிக்காக்க வேண்டிய ஒன்றாகும்' என்று வழிகாட்டிவிட்டு பி.ஜே.பிக்கு எதிரான தனது நிலைப்பாட்டை கருணாநிதி வெளிப்படுத்தினார்.
''ஏதோ தி.மு.க தேர்தலிலே தோற்றுவிட்டது, ஆகவே அதற்கு இனி எதிர்காலம் இல்லை என்று ஆலமரத்தடி ஜோசியனைப்போல, சில அரசியல் கட்சிக்காரர்கள் நமக்கு ஜாதகம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த இயக்கத்தை அழித்துவிடலாம், ஒழித்துவிடலாம், பூண்டற்றுப் போகும்படி செய்துவிடலாம் என்று எண்ணி யார் யாரோ முயற்சித்தார்கள். அவர்களுடைய முயற்சி எதுவும் பலிக்கவும் இல்லை. பலிக்கப்போவதும் இல்லை. பி.ஜே.பியினர், தி.மு.கவை சாதாரணமாகக் கருதி, நம்மை வென்றுவிடலாம் என்று அவர்களும் திட்டம் போட்டு வருகிறார்கள். பி.ஜே.பி ஆட்சி இன்றைக்கு காலூன்றி இருக்கிறது. அப்படி காலூன்றி இருக்கின்ற இந்த ஆட்சியில் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுகின்ற காரியங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், ஜெயலலிதாவைவிட ஏமாற்றுத் தந்திரம் கற்றவர்கள் மத்தியில் இன்றைக்கு நம்மை ஆளுவதற்காக வந்திருப்பதாகச் சொல்லிக்கொண்டு நோட்டம் பார்க்கிறார்கள். ஆகவே, நாம் அவர்களிடத்திலே ஏமாந்துவிடக் கூடாது'' என்று எச்சரித்து முடித்தார்.
ஸ்டாலினை பொதுச்செயலாளர் ஆக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களுக்கு இருந்தது. அவர்களுக்குத்தான் ஏமாற்றமாக இருந்தது!

ad

ad