www.pungudutivuswiss.com www.madathuveli.com www.panavidaisivan.com www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com தொடர்புகளுக்கு pungudutivu1@gmail.com

செவ்வாய், ஜனவரி 20, 2015

ஜெயலலிதா - அருண் ஜெட்லி சந்திப்பு ஏன்? பரபர பின்னணி தகவல்!


த்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை நேற்றிரவு போயஸ் கார்டனில் சந்தித்து பேசியது அரசியல்
வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த சந்திப்பு ஏன் நடைபெற்றது என்பது குறித்த பரபரப்பு பின்னணி தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
பா.ஜனதாவுக்கும் ஜெயலலிதாவுக்கும், குறிப்பாக தற்போதைய பிரதமரான நரேந்திர மோடிக்கும் இடையே கடந்த காலங்களில் எப்பொழுதுமே ஒரு இணக்கமான உறவே இருந்து வந்தது. இதனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் அதிமுக கூட்டணி வைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு கூட நிலவியது. ஆனால் யாருமே எதிர்பாராமல் தனித்து போட்டியிடுவதாக ஜெயலலிதா அறிவித்தது அப்பொழுது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ஜெயலலிதா இவ்வாறு கூட்டணிக்கான கதவை சாத்தியதால் பா.ஜனதா வேறுவழியில்லாமல் தேமுதிக, மதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளை ஒன்றிணைத்து தேர்தலில் போட்டியிட்டது. இருப்பினும் தேர்தலுக்கு பின்னர் மத்தியில் பா.ஜனதா ஆட்சியமைக்க ஜெயலலிதா ஆதரவளிக்கக் கூடும் என்றே பேசப்பட்டது. ஆனால் அத்தனை யூகங்களையும் அடித்து நொறுக்கி,  மத்தியில் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்தது பா.ஜனதா. இதனால் ஜெயலலிதாவின் தயவு பா.ஜனதாவுக்கு தேவையில்லாமல் போய்விட்டது.
இதில் பெரும் ஏமாற்றமடைந்தது ஜெயலலிதா. இதனால்தான் பிரதமராக மோடி பதவியேற்கும் நிகழ்ச்சியில் கூட  ஜெயலலிதா கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில், அமித்ஷா தேசிய தலைவராக பொறுப்பேற்ற பிறகு, கடந்த சில மாதங்களாக தமிழக பாஜ, ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்தது. ஆனால், திடீரென கடந்த சில வாரங்களாக அதிமுகவுக்கு எதிரான விமர்சனம் செய்யும் போக்கை குறைத்து கொண்டது. இந்நிலையில் கடந்த 18 ஆண்டுகளாக ஜெயலலிதா மீது நடந்து வந்த வருமான வரித்துறை வழக்கு முடிவுக்கு வந்தது.
மத்தியில் ஆட்சியில் இருக்கும் மோடி அரசின் கடைக்கண் ஜாடை இல்லாமல் வருமான வரித்துறை இந்த வழக்கை இவ்வாறு சுமூகமாக முடித்திருக்க முடியாது என்ற ரீதியில் பல்வேறு அரசியல் கட்சிகளும் சந்தேகம் கிளப்பின. திமுக தலைவர் கருணாநிதியும் இதுகுறித்து விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
இதனிடையே சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா 4 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு ஜாமீனில் வெளியே வந்த அவர் தற்போது போயஸ்கார்டன் இல்லத்தில் தங்கியுள்ளார். எம்ஜிஆர் பிறந்த நாள் விழா உள்பட எந்த விழாவுக்கும் போயஸ் கார்டனை விட்டு அவர் வெளியே வரவில்லை. அதிமுக முன்னணி தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள், சில அதிகாரிகளை மட்டும் அழைத்து பேசி வருகிறார். கூட்டணி மற்றும் மற்றக் கட்சி தலைவர்களை இதுவரை அவர் சந்திக்கவில்லை.

இந்நிலையில் திருமண விழாவில் பங்கேற்க நேற்றிரவு மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் 9 மணிக்கு வந்திறங்கிய அவர், நேராக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வசிக்கும் போயஸ்கார்டன் இல்லத்துக்கு சென்றார். அவரது சந்திப்பு ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. அங்கு அவர் ஜெயலலிதாவை சந்தித்து 40 நிமிடங்கள் பேசினார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று,முதல்வர் பதவியை இழந்த பின்னர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு என்னவாகுமோ? என்ற பதைபதைப்புடன், மாற்று கட்சி பிரமுகர்களை மட்டுமல்லாது தனது சொந்த கட்சி பிரமுகர்களையே அத்தனை எளிதில் சந்தித்துவிடாத ஜெயலலிதா, தற்போது அருண் ஜெட்லி உடனான சந்திப்பை கட்சி செய்தி குறிப்பாக வெளியிட்டு, அது தொடர்பான படத்தையும் வெளியிட வைக்கிறார் என்றால், இதன்மூலம் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று ஜாமீனில் இருந்தாலும், அரசியலில் தான் இன்னமும் ஒரு முக்கிய சக்தியாக திகழ்வதை சூசகமாக உணர்த்துகிறார் என்றே சொல்லலாம்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் அனுமதி பெற்றே அவர், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைசந்தித்ததாக பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்த நிலையில், இந்த சந்திப்பு குறித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
" சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதாவை அவருடைய வீட்டிற்கே சென்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி  சந்தித்துப் பேசியிருப்பதன் மூலம் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது.
வருமான வரித் துறையினர் தொடர்ந்த வழக்கை 18 ஆண்டுகாலமாக இழுத்தடித்துவிட்டு, மத்தியில் பா.ஜ.க. அரசு புதிதாக அமைந்த பிறகு, அதுவும் இந்த வருமான வரித் துறைக்கு, அருண் ஜெட்லி அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, அவரை டெல்லியில் ஜெயலலிதா நேரில் சந்தித்த பிறகுதான் அபராதத் தொகையைக் கட்டி சமரசமாகி விடுவதாகவும், வழக்கினைத் திரும்பப் பெற வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கிறார் என்றால் நடந்த நிகழ்வுகளை இணைத்து நாட்டு மக்களுக்கு நியாயமான சந்தேகம் வருமா? வராதா?" என்றும் கூறி உள்ளார் கருணாநிதி.
இதனிடையே ஜெயலலிதாவை அருண் ஜெட்லி சந்தித்தது ஏன் என்பது குறித்த பின்னணி தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மெஜாரிட்டி இல்லை. இதனால் நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரில் திட்டக் கமிஷனுக்கு பதிலாக மாற்று அமைப்பான ‘நிதி ஆயோக்‘, காப்பீடு திருத்த மசோதா, மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா, நிலக்கரி சுரங்க மசோதா ஆகியவை நிறைவேற்றப்படவில்லை. பின்னர் இவைகள் அனைத்தும் அமைச்சரவை கூட்டத்தில் அவசர சட்டமாக நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்கு பின் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வருகிற பிப்ரவரி மாதம் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்குகிறது. அப்போது நிறைய மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டி உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மாநிலங்களவையில் முழு மெஜாரிட்டி கிடையாது. ஆனால் மக்களவையில் 37 எம்பிக்களும், மாநிலங்களவையில் 11 எம்.பி.க்களும் அதிமுகவிடம் உள்ளது.

இதனால் அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதாவை ஜெட்லி சந்தித்து முக்கிய மசோதாக்கள் நிறைவேற்ற ஆதரவு கோரியதாக பா.ஜனதா தரப்பில் கூறப்படுகிறது.
அதே சமயம் இது குறித்து நிதியமைச்சர் அருண்ஜெட்லியிடம் கேட்டபோது, இந்த சந்திப்பு மரியாதை நிமிர்த்தமானது, என்றார்.
அரசியலில் மரியாதை நிமித்தமான சந்திப்புக்கு பல அர்த்தங்கள் உண்டு என்பது மக்கள் அறியாததா என்ன?